கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளங்காண்பதற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையிலிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் விலகியிருக்கிறது. இது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சு மாற்றியமைக்கிறதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருப்பதுடன், இது மிகவும் பாரதூரமான விடயமாகும். அரசாங்கத்தினால் வழங்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தீவிர சந்தேகம் எழுந்திருக்கும் நிலையில், கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள உண்மையான தாக்கம் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருக்கிறார்.
விசேடமாக தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளியொன்றைப் பகிர்ந்து, பதிவொன்றையும் செய்திருக்கும் அவர் இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:
கொவிட் – 19 பரவலின் இரண்டாம் அலை தற்போது ஆரம்பமாகியிருக்கிறது என்று குறிப்பிட முடியும். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை முன்நிறுத்தி நான் வெளியிட்ட கருத்துக்களை ‘அரசாங்கத்துடன் டீல் செய்வதாகக்’ கூறியவர்களுக்கு இப்போதுதான் உண்மைநிலை விளங்குகின்றது. வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரியுங்கள் என்பதே எமது டீலாகக் காணப்பட்டது. ஆனால் அரசாங்கம் அதனைச் செய்யாமையினால் தற்போது நாமும் அதுபற்றிய விமர்சனங்களை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
நாளொன்றுக்கு 5000 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நாம் கோரினோம். ஆனால் அவ்வேளையில் விரைவாகப் பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவை வற்புறுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. நாம் கோரிய போதே பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தால் இப்போது பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களைப் பிற்போட வேண்டிய தேவையேற்பட்டிருக்காது. அதேநேரம் மற்றொருவர் ‘கொரோனா மீண்டும் பரவாதா? தேர்தலை சற்றுப் பிற்போட முடியாதா? ஏனெனில் தேர்தலுக்குச் செலவழிப்பதற்கு எம்மிடம் நிதியில்லை’ என்கிறார். உண்மையில் இப்போது பணத்தைச் சேர்ப்பது மிகவும் கடினமான விடயமாகத்தான் மாறியிருக்கிறது. அதனை விடவும் கல்லில் நீர் எடுப்பது இலகுவானது என்று தோன்றுகிறது.
மேலும், கொரோனா வைரஸின் உண்மையான தாக்கத்தை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அண்மையில் உலக சுகாதார ஸ்தாபத்தின் தலைவர் அதானொம் டெட்றோஸ் வெளியிட்ட கருத்தின்படி கடந்த மே மாத இறுதியிலிருந்து ஜுலை மாத ஆரம்பம் வரையில் உலகில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கிறது. எனவே இன்னமும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை. ஆனால் அரசாங்கம் இது குறித்து எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.