நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை உருவாகியுள்ளது அச்சுறுத்தல் என்றாலும் கூட இப்போது முழு நாட்டினையும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நோயாளர் அடையாளம் காணப்படும் எண்ணிக்கைக்கு அமையவே ஊரடங்கு சட்டத்தை பிரப்பிப்போம் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, நாட்டின் கொவிட் நிலைமைகள் குறித்தும், வைரஸ் பரவல் எவ்வாறு மீண்டும் பரவியது என்பது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் விசேட கூற்றின் கீழ் கேள்வி எழுப்பிய வேளையில் அதற்கு பதில் தெரிவிக்கையில் சுகாதார அமைச்சர் இதனை கூறினார்.
கொவிட் -19 குறித்து தீர்மானம் எடுக்கும் வேளையில் அரசியல் நோக்கங்களுக்காக நாம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே நாம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.