கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூகவலைத்தளத்தின் ஊடாக போலிப் பிரசாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சமூகவலைத்தளத்தில் போலிப் பிரச்சாரம் செய்ததாக சந்தேக நபரொருவரை கைது செய்ததாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வெள்ளவததை – விவேகானந்தா வீதியில் வசித்து வரும் 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகராக செயற்பட்டு வரும் இவர் நேற்று முன்தினம் சிகிச்சை ஒன்றிற்காக கலுபோவிலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் கலுபோவிலை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று வைத்தியர் ஒருவர் தெரிவித்ததாக அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேக நபர் வைத்தியர் ஒருவரின் பெயரையும் பதிவிட்டுள்ளார். பின்னர் சம்பந்தப்பட்ட வைத்தியர் தான் இவ்வாறான ஒரு விடயத்தை கூவில்லை என்றும் , சந்தேக நபர் தனது பெயரில் போலிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளதாகவும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நேற்று நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். (செ.தேன்மொழி)