2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த ஸாறா மாயம்: வெளியானது அதிர்ச்சி தகவல்

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த  மகேந்திரன் புலஸ்தினி அல்லது ஸாறா என அறியபப்டும் பெண், இறந்துவிட்டதாக நம்பப்பட்ட நிலையில், அவர்  இறக்கவில்லை எனவும் அவர் தப்பிச் சென்று மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  

இந் நிலையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை மையப்படுத்தி, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இது தொடர்பில் விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது. அதன் பிரகாரம் அந்த விசாரணைகளில் இதுவரை இரு சந்தேக நபர்கள் சாட்சி மறைப்பு தொடர்பிலான குற்றச்சாட்டில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஸாறா என அரியப்படும் தற்போது மாயமாகியுள்ள குண்டுதாரியின் சிறிய தந்தை எனவும் மற்றையவர் அம்பாறை உப கராஜின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் எனவும் பொலிஸார் கூறினர். அவ்விருவரிடமும் ஸாறா தொடர்பில் தீவிர விசாரணைகள், தெமட்டகொடையில் உள்ள  சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களைத் தொடர்ந்து, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராகி இருந்ததாக கூறப்படும் சஹ்ரானின் பெற்றோர், சகோதரர்கள் உள்ளிட்ட குழு, கல்முனை – சாய்ந்தமருது பகுதியில்  கடந்த 2019 ஏபரல் 26 ஆம் திகதி வீடொன்றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டது. எனினும் அக்குழுவில் இருந்ததாக நம்பப்படும், நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவலய குண்டுதாரியின் மனைவியான ஸாறா  அவ்வீட்டில் இறந்தமைக்கான எந்த தடயங்களும் இதுவரை விசாரணையாளர்களால் கண்டறியப்படாத நிலையிலேயே, அவர் அங்கிருந்து தப்பியதாக கிடைக்கப் பெற்றுள்ள உளவுத் தகவல்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

 2019 ஏபரல் 26 ஆம் திகதியன்று சாய்ந்தமருது வீட்டை இராணுவம், அதிரடிப் படை சுற்றிவலைத்து தாக்குதல் நடாத்தியதுடன் இதன்போது அவ்வீட்டில் இருந்தவர்கள் குண்டை வெடிக்கச் செய்து தர்கொலைச் செய்துகொண்டதாக பொலிஸார் அப்போது அறிவித்தனர். அந்த தாக்குதலின் பின்னர், அவ்வீட்டிலிருந்து பயங்கர்வாதி சஹ்ரானின் மனைவியும், மகளும் காயங்களுடன்  மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதுடன், சஹ்ரானின் மனைவி தர்போதும் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 இந் நிலையில்  சாய்ந்தமருது வீட்டில் மொஹம்மட் காசிம் மொஹம்மட் சைனி,  மொஹம்மட் காசிம் மொஹம்மட் ரில்வான்,  மொஹம்மட் ஹிதாயா,   பாத்திமா நப்னா, பாத்திமா அப்ரின்,  எம்.ஐ.எம். ராசிக்,  சித்தி உம்மா,  மொஹம்மட் காசிம்,  அப்துல் ரஹீம் பெரோசா,  மகேந்ரன் புலஸ்தினீ அல்லது ஸாறா,  மொஹம்மட் நியாஸ்,  சிறுவர்களான  சஹ்ரான் வாசிக் ( 8 வயது, சஹ்ரானின் மகன்), சாஹித் ( ரில்வானின் மகன், வயது 3) , மினாரா ( ரில்வானின் மகள், வயது 4), ஹமாமா ( சைனியின் மகள், வயது 3), உமர் ( சைனியின் மகன் , வயது 5),  ருவைதா ( ஹிதாயாவின் மகள், வயது 1) ஆகியோர் உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டனர். 

எனினும்  குறித்த சாய்ந்தமருது வீட்டில் மீட்கப்பட்ட சடலங்கள் உருக்குலைந்திருந்த நிலையிலும், பல சடலங்கள் சிதரியிருந்த நிலையில் இந்த 17 பேர் தொடர்பிலும் டி.என்.ஏ. பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் மகேந்ரன் புலஸ்தினி அல்லது ஸாறா எனும் பெண்ணின் பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. மூலக்கூறுகளுடன், சாய்ந்தமருது வீட்டில் இறந்ததாக நம்பப்படும் சடலங்கள், சடலங்களின் பாகங்களில் இருந்து பெறப்பட்ட எந்த டி.என்.ஏ. மூலக் கூறுகளும் ஒத்துப் போகவில்லை.

 இந் நிலையிலேயே சாய்ந்தமருது வீட்டில் தாக்குதல் நடாத்தப்பட முன்னரேயே ஸாறா அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக  நம்பப்படும் நிலையில்  சி.சி.டி. அது குறித்து விசாரித்து வருகின்றது.

 அதன் பிரகாரமே பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், ஸாறாவின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்த காலப்பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரி களுவாஞ்சிக் குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியுள்ளமையும், குறித்த சம்பவத்தை அன்மித்த காலப்பகுதியில் அவர் கல்முனை – சாய்ந்தமருது பகுதிக்கு சென்றுள்ளமை தொடர்பிலும் சில தகவல்கள் உள்ள நிலையில், அதனை உறுதி செய்யவும், ஸாறா தப்பிச் செல்ல  குறித்த பொலிஸ் அதிகாரி உதவினாரா என அறியவும் விசாரணைகள் தொடர்கின்றன.

 ஸாறா தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், அவர் வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் விசாரணைகளை தொடர்கின்றனர். 

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter