மினுவாங்கொடை பிரதேசத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டமை குறித்த தெளிவான விளக்கமொன்றை இன்றையதினம் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக, கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்றையதினம் கிடைக்கப்பெறவுள்ள PCR பரிசோதனை அறிக்கைகளின் மூலம் தெளிவொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மினுவாங்கொடை பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையில், கடந்த சில நாட்களாக இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் சிலர் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் நெருங்கிப் பழகிய 150 பேரிடம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த PCR பரிசோதனை அறிக்கைகளை இன்று காலை வேளையில் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும், கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் ஆயிரத்து 400 பேருக்கான PCR பரிசோதனைகளை இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களைச் சந்திக்க, கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நபர்கள் வருகை தந்துள்ளதாகவும், தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் மூலம், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து அறிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், எதிர்வரும் 72 மணித்தியாலங்கள் தீர்மானம் மிக்கதாக அமையும் என, கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஆகவே, சுகாதார நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.