விலையின்றிப் போன பேரம் பேசல் சந்தை; தமிழ், முஸ்லிம் முதலீடுகள் காப்பாற்றப்படுமா?

ஒரு மொழிச் சமூகங்கள் ஒன்றுபடும் அரசியல்  பொதுமைகள் அடையாளங் காணப்படுவதில் ஏற்பட்டுள்ள தெளிவின்மைகளால், சிங்களத்தின் மேலாண்மைகள் வலிமையடையும் காலமிது.

மொழியாலும், வாழிடங்களாலும், பொருளாதாரத்தாலும் தமிழ் பேசுவோராக அடையாளம் காணப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பெரும்பான்மை சமூகங்கள், இன்று வெவ்வேறு வழித்தடங்களால் பயணிப்பது, தமிழ் மொழிச் சமூகங்களின் பொதுமைகளைத் துருவப்படுத்திவிட்டன. 

வாய்ப்புக்காகவும், வசதிக்காகவும், சந்தர்ப்பம் பார்த்தும் பேசப்படுவது நிறுத்தப்படும் வரை, சிறுபான்மைப் பொதுமைகள் துருவமாகித் தொலைவதை எவராலும் தடுக்கவும் இயலாது. இந்த, இயலாமைகள்தான் சிங்களத்தைப் பலப்படுத்துகிறது.

வாழ்ந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் காணிகளைக் கூடக் கையளிப்பதற்கு காட்டப்படும் தயவு, தாட்சண்யம் மற்றும் தமிழர் அரசியலிலிருந்து விலகி தனிவழி சென்றதற்கான காரணங்கள் நியாயப்படுத்தப்படாமை என்பவைகள்தான், இன்னும் இவர்களின் அரசியலை மீளிணைக்காதுள்ளது.

வெவ்வேறு கட்சிகளாக ஒரு கூட்டில் இருப்பது, ஒன்றுபட்டதற்கான அடையாளமாகுமா? இல்லையே!  “முஸ்லிம்களுக்கான சுய ஆட்சி குறித்து, இலங்கை தமிழரசுக் கட்சிதான் எழுத்தில் சொல்லியுள்ளது. முஸ்லிம் கட்சிகளில் கூட இது எழுத்தில் இல்லை” என்கிறார் கூட்டமைப்பின் பேச்சாளர்.

ஆகவே, தனிவழி சென்றதற்கான காரணங்களைத் தனித்துவ தலைவர்கள் கூறியே ஆக வேண்டும். இல்லாவிட்டால், இவர்களது அரசியல் செயற்பாடுகளாவது நியாயத்தை நிரூபிக்க வேண்டும். இவை, எவையும் இதுவரைக்கும் இல்லாத நிலையில்தான் “இருபதும்” வருகிறது.

பிராந்திய, பிரதேச தேவைப்பாடுகள்தான், இருபதுக்கான ஆதரவிலும் எதிர்ப்பிலும் செல்வாக்குச் செலுத்தப் போகின்றதே தவிர, கட்சிக் கட்டுக்கோப்பு மற்றும் சமூக விசுவாசமெல்லாம் இரண்டாம் பட்சம்தான். நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம், மட்டக்களப்பு மங்களாராம மதகுருவின் விடயங்கள் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம், பொத்துவில் முஹுது விகாரை உள்ளிட்ட பிரதேச விவகாரங்கள் சிலரைத் தனித் தீர்மானத்துக்கே தூண்டவுள்ளன. 

உண்மையில் தேசிய தலைமைகளால் தங்களது பிரதிநிதிகளின் பிரதேச விவகாரங்களைக் கையாள முடியாதுள்ளதா? அல்லது இவ்விவகாரங்கள்தான் சமூக அரசியலில் சங்கமித்து பொதுமைகளைத் துருவப்படுத்துகிறதா? என்ற தீர்மானத்துக்கு வரவே முடியாமலுள்ளது. “52” நாள் அரசில், ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போன தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகளால் சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதான உணர்வுகள் இருக்கவே செய்கின்றன.

இந்த ஒற்றுமைகள் எதில் ஏற்பட்டவை? இவர்களால் காப்பாற்றப்பட்ட ஆட்சியில் சிறுபான்மையினரின் பொதுமைகள் அடையாளங் காணப்படாதது ஏன்?. ஒருமொழிச் சமூகங்களின் பிரதேச, பிராந்திய பிணக்குகளும் கூட இவர்கள் காப்பற்றிய அரசினால் தீர்க்கப்படவில்லையே! இந்த உணர்வுகள்தான் மாற்றுத் தலைமைகளைப் பலப்படுத்துவதுடன் சிலரைத் தனித் தீர்மானத்துக்கும் தூண்டுகிறது. “சமூக அபிலாஷைகளை வெல்வதுதான் எமது வேலை. ஜனநாயகத்தைக் காப்பாற்ற தேசியக்கட்சிகள் உள்ளன. சட்டங்கள் உள்ளன” தனித்துவச் சின்னத்தின் பிரதிநிதியினது நிலைப்பாடு இது.

எனவே, குழப்பங்கள்தான் ஒவ்வொரு கட்சிகளுக்குள் இருந்தும் கருத்துச் சுதந்திரம், தனிப்பட்ட கருத்து என்ற போர்வையில் வெளியாகின்றன என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றுத் தலைமைகளாக வந்துள்ள கட்சிகளின் கடுந்தொனிகள், தனி ஈழத்தை நியாயப்படுத்துவதால், இவர்களுடன் சேர்ந்து “இருபதை” எதிர்ப்பது,சிங்களப் பெரும்பரப்பில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தலாம் எனத் தனித்துவ மாவட்டத்தின் எம்.பி ஒருவர் அச்சப்படுவதாகவும் தெரிகிறது.

இவைகள் எல்லாம் “இருபதுக்கான” உதிரி வருவாய்கள். சில எம்.பி க்களின் தனிப்பட்ட ஆசைகள், தேவைகளும் “இருபதுக்கு” நிலையான இருப்புத்தான். எனவே, அணைக்கல்லுக்கும் அடங்காத வெள்ளம் போன்று, வரவுள்ள அரசியலமைப்பின் “இருபதாவது” திருத்தத்தில் எவ்வாறு நடப்பதென்பதுதான், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை. இவ்விடயத்தில் முஸ்லிம் எம்.பி க்களை மாலை தொடுத்து, கௌரவித்து, மகிழ்ச்சி தெரிவிக்கும் சிவில் சமூக அமைப்புகள், மக்களையோ அவர்களின் பிரதிநிதிகளையோ தெளிவுபடுத்தும் வகையில் கருத்தாடல்கள், சந்திப்புக்களை நடத்தியதாக தெரியவில்லை.

எனவே, சமூகத்தை வழிநடத்தும் பாத்திரத்தில் இருந்து இந்த அமைப்புக்கள் வழுகியுள்ளதாகவே கவலையுடன் கருத வேண்டியுள்ளது. நடுநிலை என்பது எதிலும் சாராதது என்ற பொருளுடையதும் அல்ல. வாக்கெடுப்பு ஒன்று பத்துப்பேரின் ஆதரவால் வெல்லப்பட இருக்கையில், பத்து எம்.பிக்கள் உள்ள கட்சி நடுநிலை வகிப்பது, எதிர்த்ததாகவே அர்த்தப்படும். இதே, பத்து வாக்குகளால் தோற்கவுள்ள அதே பிரேரணைக்கு நடுநிலை வகிப்பதும் எதிர்த்ததாகவே பொருள்படும். எண்ணிக்கையின் சம நிலைகளில்தான் நடுநிலையின் அர்த்தங்கள் தென்படுகின்றன. ஆனால், வரவுள்ள இருபது, சமநிலைகளை அளவுக்கு அதிகமாகத் தாண்டும் அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மைத் தலைமைகள் எதனைச் செய்யலாம்?

பேரம்பேசல் விலையின்றிப்போன சந்தையில் இலாபத்தைப் பார்க்காது முதலையாவது காப்பாற்றும் வணிக வியூகம் அவசியம். இதே அரசியல் சந்தையில் தமிழ் பேசும் தலைமைகள் காப்பாற்றவுள்ள சமூக முதலீடுகள் எவை?  “பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, தனி நபர் ஒருவரை நெப்போலியன் ஆக்கலாம் அல்லது முசோலினியாக மாற்றலாம். சட்டத்தின் ஆட்சி மதிப்பிழந்தால் ஜனநாயகத்தின் நிலை என்னவாகும்?” என்றெல்லாம் நீதி மன்றத்தில் இருபதாவது திருத்தம் வழக்காடப்படுகிறது. மேலும், இந்த இருபது பாராளுமன்றம் நிராகரிக்கும் ஏதாவதொரு சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பால் நிறைவேற்ற ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயலகங்களின் செலவினங்களை, கணக்காய்விலிருந்தும் விடுவித்துள்ள இந்த இருபது, கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனத்தையும் ஜனாதிபதிக்கு வழங்கி, அவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளையும் மறைத்துள்ளது. எனவே, சிறுபான்மைச் சமூகங்களுக்கு இதிலுள்ள முதல்களையாவது சிந்தித்தே செயலாற்ற வேண்டி உள்ளன இத்தலைமைகள்.

சுஐப் எம். காசிம்-

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter