கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் இருபது இலட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர நிலைகளுக்கான தலைவர் மைக் ரேயான், உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இதுவரை உலகளவில் கொரோனா தொற்றால் பத்து இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 கோடியே 27 இலட்சம் பேர் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளிர்காலம் நெருங்குவதால் வட துருவ நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்றில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது.
ஐரோப்பா முழுவதும் பல பகுதிகளில் மீண்டும் தொற்று பரவ தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில்தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா – 7,244,184 பாதிப்பு, 208,440 இறப்பு
இந்தியா – 5,903,932 பாதிப்பு, 93,410 இறப்பு
பிரேசில் – 4,692,579 பாதிப்பு, 140,709 இறப்பு
கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மேம்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. ஆனால் நல்ல சிகிச்சையோ அல்லது தடுப்பு மருந்துகளோ இருந்தாலும், இருபது லட்சம் பேர் உயிரிழப்பதை தடுக்க இயலாது என அவர் தெரிவித்தார்.