கண்டி நகரிலுள்ள கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 10 பொறியிலாளர்களை உள்ளடக்கியவகையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இந்த அறிக்கை இரண்டுவார காலத்துக்குள் தன்னிடம் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், முறையற்ற விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பில், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகே குறிப்பிட்டுள்ளார்.
கண்டி பூவெலிகட பகுதியில், ஐந்து மாடிக் கட்டிடமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிந்து வீழ்ந்ததில் ஒன்றரை மாதக் குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த நிலையிலேயே, கண்டி நகரிலுள்ள கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடித்தளம் உரிய முறையில் இணைக்கப்படாமையே, கண்டியில் குறித்த கட்டிடம் இடிந்து விழுந்ததமைக்கு முக்கிய காரணமாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.