கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததோடு, முறையான கண்காணிப்பின்மையினால் மீண்டும் நாடு கொவிட் – 19 வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. பொது ஒன்று கூடல்களுக்கான தடைகளைத் தளர்த்துதல், கட்டுப்பாடுகளற்ற பொதுப்போக்குவரத்து சேவை நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் பல நடவடிக்கைகள், ஏற்கனவே பின்பற்றப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கைவிடலாம் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டன என்று சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மருத்துவ சங்கம்,
கடந்தகால சம்பவங்களிலிருந்து தெளிவான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே ‘புதிய இயல்புநிலை’ வாழ்க்கை தொடர்பான பிரசாரங்களை அரசாங்கம் வலுப்படுத்துவதோடு, சுகாதாரத்துறை அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளைப் பொதுமக்கள் கட்டாயமாகப் பின்பற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
இது தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப கட்டத்தில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தமையின் ஊடாக வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் காணப்படுகின்றது. இது குறித்து நாம் பெருமையடைய முடியும் என்பதுடன், இந்நெருக்கடி நிலையை சரிவரக் கையாண்ட அரசாங்கத்திற்கு நாமனைவரும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம். குறிப்பாக ‘கண்டறிதல், பரிசோதனை செய்தல், சிகிச்சையளித்தல்’ என்ற முறையை இலங்கை பின்பற்றியது.
எனினும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் குறைபாடுகள் உள்ள தற்போதைய சூழ்நிலை குறித்து நாம் விசனமடைந்திருக்கின்றோம். முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததோடு, முறையான கண்காணிப்பின்மையினால் மீண்டும் நாடு கொவிட் – 19 வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருப்பதாகக் கருதுகின்றோம். கொரோனாவிற்கு முன்னர் நாடு எவ்வாறு காணப்பட்டதோ, அத்தகைய இயல்பு நிலைக்கு மக்களின் நடவடிக்கைகள் திரும்பிக்கொண்டிருக்கின்றன என்பது தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது.
நாட்டை மீண்டும் புதியதொரு இயல்புநிலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னெடுக்கப்பட்ட பாரிய பிரசாரங்களின் பின்னணியில் நோக்குகையில் தற்போதைய நிலை கவலையளிக்கிறது. உலகலாவிய ரீதியில் பல நாடுகள் எதிர்கொண்டதைப் போன்ற பேரழிவிற்கு எமது நாட்டை இட்டுச்செல்லும் சில பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
மேலும், சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகள் கைவிடப்பட்டமையும், கட்டுப்பாடுகள் மிக விரைவாகத் தளர்த்தப்பட்டமையும் கொவிட் – 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டன. இத்தகைய பொய்யான தகவல் பாரதூரமான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், மீண்டுமொரு நெருக்கடிநிலை தோன்றுமாயின் சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றச் செய்வதையும் கடினமானதாக மாற்றும்.
எனவே உலக நாடுகளில் அதிகரித்துவரும் தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி விட்டதாக அறிவித்த நாடுகளில் மீண்டும் சடுதியாக அதிகரித்திருக்கும் வைரஸ் பரவல் ஆகியவை தொடர்பில் அவதானம் செலுத்தி நாம் எச்சரிக்கையடைய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.
Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day