இலங்கையில் மாடறுப்பை தடை செய்வதற்கு ஆளும் கட்சி கூட்டத்தில் அனுமதி கிடைத்துள்ளது. இந்த செய்தி வெளியான நிமிடம் முதல் முஸ்லிம்களிடையே பல்வேறான கருத்துக்கள் அலசப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த சட்ட யோசனையை நேரடியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவே சபைக்கு கொண்டு வந்துள்ளார்.
பொதுவாக இவ்வாறான விடயங்களை பிரதமர் போன்ற உயர் அரச பதவியில் இருப்பவர்கள் கொண்டு வருவதில்லை. இதனை ஒரு இனவாத பாராளுமன்ற உறுப்பினரை வைத்து செய்திருக்கலாம். பிரதமரே நேரடியாக கொண்டு வந்தமையானது, அவர் தன்னை ஒரு தூய்மையான பௌத்தனாக வெளிக்காட்ட முனைவதை எடுத்துகாட்டுகிறது. அவர் ஓய்வு பெறும் வேளையில், தன்னை ஒரு முழு பௌத்தனாக அடையாளப்படுத்துவதில் அவருக்கு அரசியல் ரீதியான பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஓய்வு பெறுபவர் எதிர்கால அரசியல் பற்றி சிந்திக்க தேவையில்லையே! தற்போது அவர், தனக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை என கூறியுள்ள போதும், அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்பதை அரசியல் வட்டாரங்களில் இருந்து உறுதி செய்யப்பட்ட செய்தி.
இந் நேரத்தில், இவ்வளவு அவசரமாக இவர்கள் இச் சட்டத்தை கொண்டு வருவதன் நோக்கம் என்ன என்ற வினா எழலாம். 20வது அரசியலமைப்பு சீர் திருத்தம் மக்களிடையே பாரிய விமர்சனத்தை பெற்றிருக்கும் நிலையில், பௌத்தர்கள் எதனை எதிர்பார்த்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்களோ, அந்த மாற்றங்கள் எதுவுமே அதில் இடம்பெறாத நிலையில், தாங்கள் எது செய்தாலும் நாட்டுக்கும், பௌத்தர்களுக்கும் சார்பானதாகவே இருக்கும் என்பதை ராஜபக்ஸ அணியினர் நிறுவியாக வேண்டும். அதற்கு மாடறுப்பு தடை மிகவும் உறுதுணையாக இருக்கும். மாடறுப்பானது அறிவோடன்றி, உணர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. உணர்ச்சியை மையப்படுத்தினால் எதனையும் சாதித்து விடலாம். முன்னாள் அமைச்சர் பஷீர் கூறியுள்ளது போல, இலங்கை அரசு மாடறுப்பு தடையினூடாக இந்தியாவை திருப்திசெய்ய முனைகிறது எனும் கோணத்திலும் இதனை நோக்கலாம்.
தற்போது அச் சட்ட நிறைவேற்றமானது ஒரு மாத காலத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது. தற்போதைய பாராளுமன்ற பலத்தின் அடிப்படையில் 20ம் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு சு.கவினரின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. இதனை சு.க சாதகமாக பயன்படுத்தி, தங்களுக்கு தேவையானவற்றை சாதிக்க முனைகிறது. இதனை சமாளித்து, 20வது அரசியலமைப்பை நிறைவேற்ற முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்குள்ளது. எதிர்காலத்துக்கும் உதவுமல்லவா? 20ம் அரசியலமைப்பு சீர்திருத்தம் எந்தளவு விரைவாக பாராளுமன்றத்துக்கு வர வேண்டுமோ, அந்தளவு விரைவாக பாராளுமன்றம் வரும். இப்போது மாடறுப்பு தடை நடைபெற்றால், அந்த சூடு ஆறுவதற்கு முன்பு முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற முடியாது. முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு ஆதரிப்பதில் எந்த தயக்கமும் இருக்காது. முஸ்லிம் மக்களின் உயரிய எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். மாடறுப்பு தடையின் பின்னால் உள்ள கால தாமதத்தின் காரணம் இப்போது புரியும் என நினைக்கின்றேன்.
மேலுள்ள அரசியல் காரங்கள் தவிர்ந்து மாடு அறுப்பது தடை செய்யப்பட்டால், நாட்டிலுள்ள மாடுகளை எவ்வாறு பராமரிப்பது, பால் நுகர்வுக்கு என்ன செய்வது, பொருளாதார ரீதியான இழப்பு எவ்வாறு அமையும் என பல்வேறு ஆய்வுகளை செய்ய வேண்டும். மாடறுப்பு தடையானது உணர்ச்சி ரீதியாக நோக்கப்படுகிறதே தவிர, அறிவு ரீதியாக நோக்கப்படவில்லை. அண்மையில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோத்தாபாய பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாடறுப்பு தடை செய்யப்பட்டால் மாடுகளை பராமரிக்க முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த விடயங்களானது, மாடறுப்பு தடை செய்யப்பட்டால், அதனை கையாள முறையான திட்டமிடல்கள் இல்லையென்பதை தெளிவு செய்கிறது. முறையான திட்டமிடல்களில்லாமல் இலங்கை அரசு தடைக்குச் சேல்லாதல்லவா?
மாடறுப்பு தடையானது எந்த ( மத, தர்க்க ) அடிப்படையில் நோக்கினாலும் ஒரு பிழையான செயற்பாடு என்பதை மறுப்பதற்கில்லை. இது பிழை என்பதை நிறுவ பல்வேறு தர்க்க ரீதியான நியாயங்களை முன் வைக்க முடியும். இருப்பினும், இவ் விடயமானது தர்க்க ரீதியான கோணத்தில் நோக்கக் கூடிய விடயமல்ல. இது மதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு விடயம். மதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு விடயத்தை தர்க்க ரீதியாக நோக்க முடியாது, நோக்கவும் கூடாது.
பௌத்தர்களில் மிக அதிகமானவார்கள் மாட்டிறைச்சி உண்பதை பெரும் பாவமாக கருதுகின்றனர் ( அவர்கள் மதத்தில் உள்ளதோ, இல்லையோ அது வேறுவிடயம் ). இதனை யாருமே மறுக்க முடியாது. இது அவர்களது நம்பிக்கை சார் விடயம். சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளில் பௌத்த மதத்தை பின்பற்றும் யாரும் இறைச்சி கடைகளை வைத்திருப்பதில்லை. அவர்களுடைய உணவகங்களில் மாட்டிறைச்சியை காண முடியாது. இந்த விடயங்கள் அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை, அறுப்பதை ஒரு பாவமாக கருதுவதற்கு போதுமான சான்று. மாடறுப்பை தடை செய்யக் கோரி தீக்குழித்த பௌத்த மதகுருக்களும் உள்ளனர். அதாவது, பெரும்பான்மையான சிங்களவர்கள் இறைச்சி உண்பது, மாடறுப்பதை பாவமாக கருதுகின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். பௌத்தர்களில் சிலர் மாட்டிறைச்சியை உட்கொள்கிறார்கள் தானே என எம்மவர்கள் சிலர் கூறுவதை அவதானிக்க முடிகிறது. இஸ்லாம் சாராயத்தை தடை செய்திருந்தும், எம்மவர்கள் சிலர் சாராயம் அருந்துகின்றனர். அதற்காக சாராயம் ஹலாலாகி விடுமா?
அவர்கள் பிழையான கருதும் ஒன்று, எமக்கும் பிழையாக இருக்க வேண்டும் என தினிக்க முடியாது. அவர்கள் பிழையாக கருதும் ஒன்று, எமது மதத்திற்கு எதிராக அமையாது போனால், அவர்களோடு உடன்பட்டு செல்லுதல் எனும் அடிப்படையில், நாம் அது சிந்திப்பதில் தவறில்லை. மாடு அறுத்தலை அவர்கள் பாவமாக கருதுகின்றனர். மாடு அறுக்காமல் விட்டால், அது எமது மத ரீதியான எந்த கடமைக்கும் இடையூறாக அமையப் போவதில்லை. மாட்டு இறைச்சி சாப்பிடாமல் விட்டால் முஸ்லிம் இல்லை என கூற முடியுமா? அது என்ன பர்ளான கடமையா? இதனை ஏன் நாம் உடன்பாடு அடிப்படையில் நோக்க கூடாது? அவர்கள் பாவமாக கருதுவது மாட்டு இறைச்சியை உண்பதையல்ல, மாடு அறுப்பதையே. நாம் மாடு அறுப்பதானது அவர்களது பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். அவர்களது மதத்திற்கு எதிரானதும், எமது மதத்திற்கு பாதகமல்லாததுமான ஒரு விடயம் பற்றி நாம் உடன்பாடு அடிப்படையிலேயே சிந்தனையை அமைக்க வேண்டும்.
எமது முஸ்லிம் நாடுகளில் ஒரு மாற்று மதப் பெண் அறை குறை ஆடையுடன் செல்வதை அனுமதிக்க முடியுமா, முடியாதல்லவா? ஒரு பெண் அறை குறை ஆடையுடன் செல்வது, ஏனையோர் பாவம் செய்ய காரணமாகும். அது எமது மார்க்கத்தின் பார்வையிலும் பிழையானது. ஒரு முஸ்லிம் நாடொன்றில் வசிக்கும் அல்லது செல்லும் பெண் ஒருவர், அவர் விரும்பும் ஆடை அணிய அனுமதிக்க முடியாது. நான் என்ன சாப்பிட வேண்டும் என நானே தீர்மானிக்க வேண்டும் என நாம் சொல்வது போன்று, நான் என்ன அணிய வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க வேண்டும் என அப் பெண் சொல்ல முடியாதல்லவா. நான் இங்கு குறிப்பிட்டுள்ள உதாரணத்தை ஆழமாக சிந்தியுங்கள்.
எமக்காக அவர்கள் சிலதையும், அவர்களுக்காக நாம் சிலவற்றையும் அனுசரித்து செல்வது ஐக்கியமான நாட்டை உருவாக்கிட வழி வகுக்கும். உதாரணத்துக்கு புர்காவை எடுத்துக்கொள்வோம். இலங்கையில் மிகக் குறைந்தளவானோரே புர்கா அணிகின்றனர். புர்கா அணிவது இஸ்லாமிய கடமை அல்ல என பல இஸ்லாமிய குழுக்கள் வாதிடுகின்றன. புர்கா இஸ்லாமிய கடமை அல்ல எனவும், அது இலங்கை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் கூறி, இலங்கை அரசு புர்காவை தடை செய்தால் ஏற்போமா. இல்லையல்லவா? அதனை சில இஸ்லாமிய குழுக்கள் மார்க்கமாக கருதுவதால், அவர்கள் அதனை மார்க்கமாக ஏற்றிருக்கும் வரை, அதனை தடை செய்ய கூடாது. இதுவே அனைவரும், தான் விரும்பும் மதத்தை பின்பற்ற அரசு அனுமதிப்பதாகும். மாடறுப்பது தொடர்பான தடை பௌத்த மதத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம், அது ஒரு பௌத்த தர்மமாக ஒரு குறித்தளவான சமூகம் ஏற்றிருக்கும் வரை, அதற்கு மதிப்பளிப்பது எமக்கும் கடமை ( எமது மார்க்கத்திற்கு முரணாக அமையாத போது ).
உண்மையில், புர்கா அணிவதன் மூலம் வெளிப்பார்வையில் தேசிய பாதுகாப்பு உட்பட சில தவறுகள் நடந்தேறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஒருவர் புர்கா அணிவதை மார்க்கமாக கருதினால், எமக்கு வெளிப்பார்வையில் தெரியும் பாதிப்புக்களை விட பல மடங்கு நன்மைகள் அதில் உள்ளன என்றே நோக்க வேண்டும். இது தான் ஒரு மத கொள்கையை நோக்கும் பார்வை ( சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத சில மதக் கொள்கையை இக் கோணத்தில் நோக்க முடியாது). புர்கா அணிவதன் மூலம் நடந்தேறும் சில தவறுகளை, அணியாதவர்கள் அணிபவர்களுக்கு மதிப்பளித்து சகித்துக்கொள்ள வேண்டும். அதுவே அவர்களுக்கு வழங்கும் கௌரவம். இது போன்றே நாமும் அவர்களுக்காக சிலவற்றை சகித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு சகித்துக்கொள்ளும் ஒன்றாக மாடு அறுப்பு தடையை நோக்கலாம்.
இறைவனால் அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடை செய்ய இவர்கள் யார் என்ற வினாவை அவதானிக்க முடிகிறது. இறைவனால் அனுமதிக்கப்பட்ட மான், கொக்கு போன்ற பல நூற்றுக்கணக்கான விலங்குகளையும் நாம் உண்ண முடியாத சட்ட ரீதியான தடையில் தான் உள்ளோம். அது பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லை. நாம் வாழும் நாட்டுக்கு ஏற்ப சில சட்டங்களை சகித்துக்கொள்ள வேண்டும். நாம் பௌத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட நாட்டில் வாழ்கிறோம். எமது செயற்பாடுகளை அதற்கிணங்கனவே ( மார்க்கத்தை விட்டுக்கொடுக்காத ) வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தை விட்டுக்கொடுப்பது பற்றி முஸ்லிம்கள் சிந்திப்பதில் தவறில்லை. அவ்வாறு நாம் உடன்பாடு அடிப்படையில் விட்டுக்கொடுப்பதை, முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரங்கேற்றுவதற்கான தொடக்கப் புள்ளியாக பேரினவாதிகள் எடுத்துக்கொள்வார்களா என்ற அச்சம் உள்ளமை மறுக்க முடியாது. இது இந்த நாட்டிலுள்ள இனவாத பக்கத்தின் ஒரு விளைவு. முறையான திட்டமிடல்கள் மூலம் இதனை இல்லாமல் செய்ய முடியும்.
எமது மார்க்கம் இஸ்லாம். ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாமே உண்மையான வேதம் என்பதில் சிறிதேனும் சந்தேகமிருக்காது. இறைவன் ஆகுமாக்கிய ஒன்றை, வேறு ஒரு காரணத்தை கூறி யாராவது தடை செய்யும் போது, அதில் இறைவனின் அத்தாட்சியை எதிர்பார்க்கலாம். இன்று தடை செய்ய சிந்திப்பவர்களே, நாளை அதனை அனுமதிக்க சிந்திக்கலாம். சில வேளை நாம் பெருந் தொகை பணம் கொடுத்து பெறும் மாடுகளை, இத் தடையின் பின்னர் சாதாரண விலையில் பெறக் கூடிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இலங்கையில் பசுப் பாலை நுகர்வோர் அதிகம் உள்ளனர். பசுப் பால் நுகர்வு தவிர்க்க முடியாத ஒன்று. அண்மையில் கூட ஜனாதிபதி பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதன் மூலம் மாடு வளர்ப்பு அத்தியவசியமானது என்பது புலனாகிறது. பாலுக்காக மாட்டை வளர்த்து, இயலாத போது என்ன செய்வது? வீதியில் விடுவதா? அவ்வாறு விட்டால் என்ன நடக்கும்? காளை மாடுகளை என்ன செய்வது. மிகைத்த பெருக்கத்தால் அவர்களே முஸ்லிம்கள் அறுத்து சாப்பிடட்டும் என முஸ்லிம் பகுதிகளுக்கு மாடுகளை சாய்த்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படி ஆயிரம் விடயங்களை சுட்டிக்காட்ட முடியும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை.