காதி நீதிமன்றங்களை ஒழிக்க துணை போகலாமா?

இலங்கையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் காதி நீதிமன்றங்கள்  இயங்கி வருகின்றன. இலங்கை காதி நீதி நிர்வாக எல்லைகள் குறிப்பிடப்பட்டு 65 காதி நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நீதிச் சேவை ஆணைக்குழு காதிநீதிபதி வெற்றிடங்களுக்கு அரசாங்க வர்த்தமானி மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சையொன்றின் பின்பு 3 வருட கால எல்லைக்கு நியமனம் வழங்கப்படுகின்றது.

சில வருடகாலமாக இலங்கையில் அடிப்படைவாத கொள்கைகளைக் கொண்டுள்ள பெளத்த குருமார்கள் சிலர் இலங்கையில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும். முஸ்லிம் சமுதாயத்துக்கென்று தனியாக இயங்கி வரும் காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென கோஷம் எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் 2/3 பெரும்பான்மை பெற்றுள்ள புதிய அரசாங்கமும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றனர். தற்போது காதிநீதிமன்றங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்ற கோஷம் வலுவடைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஓரிருவரும் தூரநோக்கின்றி, சுயநலம் கருதி இதற்குத் துணைபோயுள்ளனர். ஒரு சில சிங்கள இலத்திரனியல் ஊடகங்கள் காதி நீதிமன்றங்களை ஒழிக்க வேண்டும் என்ற பிரசாரத்தினை கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றன.

முஸ்லிம் விவாகப் பதிவாளர் ஒருவரின் குற்றச்சாட்டுகள்

பாணந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் விவாகப் பதிவாளர் ஒருவர் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்து முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தையும், காதிநீதிமன்ற முறைமையையும் பாதுகாத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். காதிநீதிமன்ற முறைமையும் முஸ்லிம் தனியார் சட்டமும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற அந்த முஸ்லிம் விவாகப் பதிவாளரின் கோரிக்கை வரவேற்கத்தக்கதே.

ஒரு சில காதி நீதிபதிகளின் நடவடிக்கைகள் முழு காதி நீதிபதிகள் சமூகத்துக்கும் பாதிப்பாக அமைந்துவிடுகின்றன என அவர் நீதியமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான காதி நீதிபதிகளுடன் தான் தனிப்பட்ட முறையில் வாதாடி அவர்களுக்கு எதிராக செயற்பட்டிருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீதியமைச்சருக்கு அவர் முன்வைத்துள்ள முறைப்பாடுகள்

*அநேக காதிநீதிபதிகள் தங்கள் கடமை தொடர்பில் தெளிவற்று செயற்படுதல்
*ஒரு தரப்புக்கு சார்பாக செயற்படுதல்.
*சட்ட சிக்கல்களைத் தீர்க்க இயலாமை
*தாபரிப்பு வழக்கில் ஒரு தலைப்பட்ச தீர்ப்பு வழங்கல்
*பொறுப்பற்று தீர்ப்பு வழங்கல்
*பிரதிவாதிக்கு அறிவிக்காமல் விவாகரத்து வழக்கல்
*வழக்கு கோவையின் பிரதிகள் கோரப்படும் போது வழங்கப்படாமை
*விவாகரத்தை முறையாக பதிவு செய்யாமை மற்றும் விவாகரத்தின் 2ஆம் பிரதியை உரியகாலத்தில் பிரதேசசெயலகத்துக்கு அனுப்பிவைக்காமை.

விவாகப்பதிவாளரின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை

விவாகப்பதிவாளரின் குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்படமுடியாத பொதுவான குற்றச்சாட்டுகளாகும். காதிநீதிபதியொருவர் ஒரு தரப்புக்கு சார்பாக செயற்படுகிறார் எனில் அதற்கு மாற்று நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு. காதிநீதிபதி பாரபட்சமாக செயற்படுகிறார் என இனங்கண்டால் சம்பந்தப்பட்ட தரப்பு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம், குறிப்பிட்ட வழக்கினை விசாரிப்பதற்கு விஷேட காதி நீதிபதியொருவரை நியமிக்கும்படி கோரமுடியாது.

மேலும் தாபரிப்பு வழக்கில் ஒரு தலைப்பட்ச தீர்ப்பு, நியாயமற்ற தீர்ப்பு வழங்கப்பட்டால் காதிகள் சபைக்கு மேன்முறையீடு செய்ய முடியும். பிரதிவாதிக்கு அறிவிக்கப்படாமல் விவாகரத்து வழங்கப்படமுடியாது. பிரதிவாதி காணாமற் போயிருந்தால் விலாசம் அறியப்படாமலிருந்தால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும். அவ்வாறும் அறிவிக்கப்படாவிட்டால் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யமுடியும்.

வழக்கு கோவையின் பிரதிகள் கோரப்பட்டும் வழங்கப்படாவிட்டால் அந்த காதிநீதிபதிக்கெதிராக நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறையிட முடியும். விவாகரத்து பதிவு செய்யப்பட்ட மாதத்துக்கு அடுத்தமாதம் விவாகரத்தின் 2 ஆவது பிரதி பிரதேச செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படாவிட்டால் அது தொடர்பிலும் முறையிடலாம். எனவே குறிப்பிட்ட விவாகப் பதிவாளர் காதிநீதிபதிகள் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் காதிநீதிபதிக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு.

காதிநீதிபதிகளின் நியமனம்

குறிப்பிட்ட விவாகப் பதிவாளர் ‘அரசியல் செல்வாக்கின்றி காதி நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும்’ என தனது கடிதத்தில் நீதியமைச்சரைக்கோரியுள்ளார். ஆனால், காதி நீதிபதிகளின் நியமனம் நீதிச்சேவை ஆணைக்குழுவினாலே வழங்கப்படுகிறது. நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சை நீதிபதிகள் குழாம் ஒன்றினாலேயே நடத்தப்படுகிறது.

காதிநீதிபதிகள் வெற்றிடங்கள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. நிர்வாக சேவையிலிருந்து ஓய்வு பெற்றோர் பட்டதாரிகள், மெளலவிகள், இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர்களில் தகுதியானோர் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுகிறார்கள். 3 வருட காலத்துக்கே நியமனம் வழங்கப்படுகிறது. அவர்களது பதவிக் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டால் பதவிநீக்கம் செய்யப்படுவார்கள்.

புதிதாக நியமனம் பெறுபவர்களுக்கு காதிகள் போரத்தினால் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுவது பொய்க் குற்றச்சாட்டாகும்.

விவாகப் பதிவாளர்களின் சட்டவிரோத செயல்கள்

முஸ்லிம்களின் விவாகத்தைப் பதிவு செய்யும் ஒரு சில முஸ்லிம் விவாகப் பதிவாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகளினால் இன்று காதிநீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் ஹராமாக உழைக்கும் முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள் நாட்டின் பல பகுதிகளில் கடமையில் இருக்கிறார்கள். அவ்வாறான விவாகப் பதிவாளர்கள் ‘வொலி’ பிரசன்னமின்றி சட்டவிரோத விவாகப் பதிவுகளை நடாத்தி பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுவருகின்றனர்.

காதல் தொடர்புகளில் ஈடுபடும் முஸ்லிம் பெண்கள் பெற்றோரின் எதிர்ப்பினால் காதலருடன் ஓடிச்சென்று இவ்வாறான விவாகப் பதிவாளருக்குப் பணம் கொடுத்து இரகசியமாக விவாகத்தைப் பதிவு செய்து கொள்கின்றனர். குறிப்பிட்ட பதிவாளர் மணமகள் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவள் எனக்குறிப்பிட்டு ’வொலி’யின் பிரசன்னமின்றி விவாகத்தைப் பதிவு செய்து மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் தான் திருமணமாகாதவர் எனக்கூறி விவாகத்தைப் பதிவு செய்து கொள்கிறார். இவ்வாறான திருமணங்கள் நீண்டகாலம் நீடிப்பதில்லை. அவை காதிநீதிமன்றங்களுக்கே வந்து சேருகின்றன.

எனவே காதிநீதிபதிகளுக்கெதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ள குறிப்பிட்ட விவாகப் பதிவாளர் முதலில் தனது விவாகப் பதிவாளர் சமூகத்தில் நிலவும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பிலும் அவர் நீதியமைச்சருக்கு முறைப்பாடு செய்திருக்க வேண்டும்.

காதிநீதிமன்றில் விவாகரத்துச் செய்து அப்பெண்ணுக்கு விவாகப்பதிவு நடாத்தியுள்ள முஸ்லிம் விவாகப் பதிவாளர்களும் எமது சமூகத்தில் இருக்கிறார்கள். காதி நீதிபதிகளின் நியமனம் 3 வருடத்துக்கே வழங்கப்படுகிறது. ஆனால் முஸ்லிம் விவாகப் பதிவாளர்களின் நியமனத்துக்கு கால எல்லை இல்லை. அவர்கள் ஓய்வு நிலையினை அடையும் வரை பதவியில் இருக்கலாம். இதனால் முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள் எவ்வித அச்சமுமின்றி சட்டவிரோத பதிவுகளை நடாத்தி வருகின்றனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீதியமைச்சர் கவனத்திற்கொள்ள வேண்டும். பதிவாளர் திணைக்கள அதிகாரிகள் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் அறிவில்லாமலும், தெளிவில்லாமலும் இருப்பதனால் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள் சட்டநடவடிக்கைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றனர்.

முஸ்லிம் பெண்ணின் கோரிக்கை

முஸ்லிம் பெண்களுக்கு கெளரவம் வழங்கப்பட்டு நிறுவப்பட்டுள்ள காதிநீதிமன்ற கட்டமைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்தாக முஸ்லிம் சமூகம் போராடி வருகின்ற நிலையில் ஒரு சிலர் பேரினவாத இலத்திரனியல் ஊடகங்களில் காதிநீதிமன்ற முறையினை ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுப்பது வேதனைக்குரியதாகும். இவ்வாறானவர்களின் கோஷங்களின் பின்னணியில் பெரும்பான்மையின இனவாதிகளே செயற்படுகிறார்கள்.

மாளிகாகந்தையைச் சேர்ந்த விவகாரத்துப் பெற்றுள்ள நோனா எனும் பெண்மணி ‘தெரண’ தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்துள்ள கருத்துகள் கவலை தருகின்றன. இலங்கைக்கு ‘ஒரே நாடு,ஒரே சட்டம்’ அவசியம், காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். காதி நீதிமன்ற முறைமையினால் முழு முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காதி நீதிமன்ற முறை நீக்கத்துக்கு தான் உயிருள்ளவரை போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவாகரத்துப் பெற்றுள்ள அந்தப் பெண் தனக்கும் தனது பிள்ளையின் வைத்தியச் செலவுக்கும் சிரந்தி ராஜபக் ஷவும், ரவி கருணாநாயக்கவுமே உதவி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இப்பெண் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் காதிநீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள் அநீதியானவை, காதி நீதிபதிகள் சிலர் பெண்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்கள், தான் இரண்டு பிள்ளைகளின் தாய், விவாகரத்து பெற்றுக் கொண்டவள். எனக்கு விஷேட தேவையுடைய பிள்ளை ஒன்று இருக்கிறது. பிரிந்த கணவர் பிள்ளைகளின் தாபரிப்பு பணத்தைக் கூடசெலுத்துவதில்லை. காதிநீதிமன்றம் வழங்கிய தவறான தீர்ப்பே இதற்குக் காரணம். இது தொடர்பில் காதி நீதிமன்றில் முறையிட்ட போதும் எந்தத் தீர்வும் தரப்படவில்லை.
என்றும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், காதிநீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள் அநீதியானவை, அவர்கள் பெண்களை கெட்டவார்த்தைகளால் ஏசுகிறார்கள் என்றால் அந்தப்பெண் காதிகள் சபைக்கு மேன்முறையீடு செய்திருக்க வேண்டும். காதிநீதிமன்றம் வழங்கிய தாபரிப்பு தொடர்பான தீர்ப்பில் உரிய பணம் செலுத்தப்படாவிட்டால் அப்பணத்தை மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு காதி நீதிமன்றம் மூலம் வலியுறுத்தக் கட்டளை அனுப்பிவைக்கப்பட்டு பெற்றுக் கொள்ளலாம். இதை விடுத்து அப்பெண்மணி கூறிய சட்ட வழிமுறைகளைப் பேணாது பேரினவாத ஊடகங்களுக்கு சமூகம் தொடர்பில் தவறான கருத்துகளை வெளியிடுவது கவலைக்குரியதாகும்.

தனியார் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்

எமது நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் நூற்றாண்டு காலம் பழமையானதாகும். இச்சட்டத்தை சில திருத்தங்களுடன் பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பாகும். தனியார் சட்டம் ஒழிக்கப்பட்டுவிட்டால் அதனால் பல அல்லல்களுக்கு உட்படுபவர்கள் முஸ்லிம் பெண்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்வதற்காக வருடக் கணக்கில் நீதிமன்றப் படிகளை ஏறியிறங்க வேண்டியேற்படும்.

காதி நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மூலம் எவராவது பாதிக்கப்பட்டால் அவர்கள் மேன்முறையீடு செய்வதன் மூலம் தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும். இதுவிடயத்தில் சமூகத்தில் சிலர் தெளிவற்று பேரினவாதிகளுக்குத் துணைபோவது கவலைக்குரியதாகும்.

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter