சமூக வலைத்தளங்கள் மூலம் 61 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நைஜீரிய பிரஜைகள் நால்வரைக் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் தொடர்பு மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு கொண்டு பண மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுவரையில் இந்தச் சம்பவம் தொடர்பில் நைஜீரிய பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவம் தொடர்பில் 101 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் 61 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
பேஸ் புத்தகம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் புதிய நபர்களாலேயே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை தெரிய வந்துள்ளது.
முதலில் தங்களுக்கு பரிசுப் பொருட்களோ அல்லது சீட்டிழுப்பின் மூலமாக பண பரிசில்களோ கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்து, பின்னர் அந்த பரிசை பெற்றுக் கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் சுங்கவரியை செலுத்துவதற்கான சிறியதொரு பணத் தொகையை வங்கி கணக்கு இலக்கம் ஒன்றை கொடுத்து அதில் வைப்பிலிடுமாறு தெரிவிப்பர்.
இவ்வாறு வைப்பிலிடப்படும் பணத்தையே இவர்கள் மோசடி செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செய்றபட வேண்டும்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இவர்கள் இந்த மோசடிகளை மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. அ தனால் இவ்வாறான நபர்களின் மேசடிகளுக்கு சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.