ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் ரணில் விக்ரமசிங்கவின் பரம்பரையில் இருந்து
வரும் நபர்களின் சொத்து போல் கிடைக்கும் நிலைமையை காணக்கூடியதாக இருப்பதால், அது குறித்து தான் மிகவும் வெறுப்படைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரை தெரிவு செய்யும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் அண்மையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தலைவர் பதவி பரம்பரை சொத்து போல் ஒவ்வொருவர் கைகளுக்கும் செல்லுமாயின், கட்சியினை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி இருப்பது நல்லது. ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் கட்சி.
அதனை விடுத்து இது என்னுடைய கட்சியோ, ருவான் விஜேவர்தனவின் கட்சியோ, ரணில் விக்ரமசிங்கவின் கட்சியோ அல்ல. இது அனைவருக்கும் சொந்தமான கட்சி.
தலைவர் பதவிக்கு பரம்பரையில் வரும் நபர்களை தெரிவு செய்யக்கூடாது. தமது உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு வழங்கும் முறை முன்னெடுக்கப்படுகிறது. இது குறித்து நான் வெறுப்படைந்துள்ளேன்.
ஐக்கிய தேசியக் கட்சியை பணம் இருக்கும் நபர் பொறுப்பேற்க வேண்டும் என்ற கதையும் பேசப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடாத ஒரு அணியும் இருக்கின்றது. இது மிகவும் மோசமான நிலைமை. இந்த நிலைமை மாற வேண்டும் என நான் நினைக்கின்றேன் என அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.