வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு இன்று முதல் 2000 ரூபா அபராதம் அறவிடப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு விதி முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதை ஆராய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெரிவுசெய்யப்பட்ட 20 இடங்களில் பொலிஸ் அதிகாரிகளுடன் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வீதி ஒழுங்கு விதி அமுல்படுத்தப்பட்டுள்ள வீதிகளின் நிலையை மதிப்பீடு செய்ய விமானப்படையின் 4 ட்ரோன் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு நகரில் வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள்களை இடதுபக்க ஒழுங்கில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டம் ஸ்ரீஜயவர்த்தன மாவத்த – பொல்துவ சந்தி முதல் ஹர்டன் பிளேஸ் வரையும் , பேஸ்லைன் வீதி – களனி பாலம் முதல் ஹை லெவல் வீதி வரையும் , ஹை லெவல் வீதி – அனுலா கல்லூரி முதல் ஸ்ரீசம்புதத்வ ஜயந்தி மாவத்த – தும்முள்ள சுற்றுவட்டாரம், தேஸ்டன் வீதி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்த, நூலக சந்தி, ஆனந்த குமாரசாமி மாவத்த, மல்பரா சந்தி மற்றும் பித்தல சந்தி வரையும் காலி வீதி – வில்லியம் சந்தி முதல் காலிமுகத்திடல் சுற்றுவட்டாரம் மற்றும் என்எஸ்ஏ சுற்றுவட்டாரம் வரையும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து கண்காணிப்பிற்காக 1500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேலதிகமாக 150 பெண் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் வாகன சாரதிகள் , பயணிகள் மற்றும் பாதசாரிகள் என மூன்று தரப்பினரதும் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.