கம்பஹா மாவட்டத்தின் சியம்பலாபே, திக்வெல பிரதேசத்தில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்திய போலி வைத்தியரான 32 வயதான பெண் ஒருவரை மீகஹவத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வேறொரு வைத்தியரின் பதிவு இலக்கத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ முத்திரையுடன் மருந்து விநியோகித்து வந்த இப்பெண் காய்ச்சல், சளி போன்ற நோய்களுக்காக சிகிச்சையளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பெண், சருமத்தின் நிறத்தை மாற்றும் சிகிச்சை (தோல் நிறத்தை வெள்ளையாக்குதல்) தொடர்பில் இணையத்தளத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தின் ஊடாக திக்வெல்லவில் உள்ள போலி வைத்தியரின் சிகிச்சை நிலையத்துக்கு வந்த புத்தளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சருமத்தை நிறமூட்டுவதாகக் கூறப்படும் ஊசி ஒன்றை ஏற்றியுள்ளார். . பின்னர் அப்பெண்ணுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
பின்னர் குறித்த வைத்தியர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அது தொடர்பில் ஆராய்ந்தபோது அவர் போலி வைத்தியர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அப்பெண், மீகஹவத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மீகஹவத்த பொலிஸ் நிலைத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிலங்கனீ உள்ளிட்ட அதிகாரிகளால் குறித்த மருந்துவ நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு போலி முத்திரைகள், ஆவணங்களுடன் சந்தேக நபரான பெண்ணை கைது செய்திருந்தனர்.
தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த இப்பெண் தனது காதலனின் ஊரான சியம்பலாபே திக்வெல பிரதேசத்தில் போலி மருத்துவ நிலையத்தை சுமார் ஒரு வருடங்களாக நடத்திவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.