துரோகம்‌ செய்தார்‌ சஜித்‌! கட்சிக்‌ கூட்டத்தில்‌ ஹக்கீம்‌ கோபக்‌ குமுறல்‌; அவருடன்‌ பயணிப்பது எப்படி எனவும்‌ கேள்வி

சஜித்‌ பிரேமதாஸ எனக்கும்‌ எனது கட்சிக்கும்‌ துரோகம்‌ செய்துவிட்டார்‌. அரசியல்‌ பயணத்தில்‌ அவருடன்‌ எப்படி தொடர்ந்து பயணிப்பது என்று சிந்திக்கவேண்டிய நிலைக்குத்‌ தள்ளப்பட்டுள்ளேன்‌ – இவ்வாறு கட்சி உறுப்பினர்கள்‌ மத்தியில்‌ ஆத்திரத்துடன்‌ காரசாரமாக கருத்து வெளியிட்டுள்ளார்‌ ஸ்ரீலங்கா முஸ்லிம்‌ காங்கிரஸ்‌ தலைவரும்‌, நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்‌ ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம்‌ காங்கிரஸின்‌ அரசியல்‌ உயர்பீடக்‌ கூட்டம்‌ கடந்த வெள்ளிக்கிழமை இரவு கட்சித்‌ தலைமையகமான தாருஸல்லாமில்‌ நடைபெற்றது. ஐக்கிய மக்கள்‌ சக்தி தேசியப்பட்டியல்‌ ஒன்றை தராதமை குறித்து கண்டனத்‌ தீர்மானமொன்றை கட்சியில்‌ நிறைவேற்றி, அதனை சஜித்துக்கு அனுப்பி தேசியப்பட்டியல்‌ எம்‌.பி. பதவியை மீண்டும்‌ கட்சிக்கு பெற்றுக்கொள்ளும்‌ யோசனையொன்றை மட்டக்களப்பு எம்‌.பி.யான ஹாபீஸ்‌ நஸீர்‌ முன்வைத்தார்‌.

ஆனால்‌, ஐக்கிய மக்கள்‌ சக்தியின்‌ நிலைமை, நாட்டின்‌ அரசியல்‌ சூழ்நிலையை கருத்திற்கொண்டு சஜித்‌ தரப்பு தேசியப்பட்டியல்‌ விடயத்தை கையாண்டிருக்கலாமென்றும்‌, அதற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுவது முறையல்லவென்றும்‌ கிழக்கு மாகாண சபையின்‌ முன்னாள்‌ உறுப்பினர்‌ தவம்‌ இங்கு குறிப்பிட்டுள்ளார்‌.

தவத்தின்‌ இந்தக்கருத்தினால்‌ அதிருப்தியடைந்த கட்சித்‌ தலைவர்‌ கடும்‌ விசனத்துடன்‌ தனது கருத்தை வெளியிட்டு, தேசியப்பட்டியல்‌ விவகாரத்தில்‌ முஸ்லிம்‌ காங்கிரஸுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார்‌.

தேசியப்பட்டியல்‌ விவகாரத்தில்‌ சஜித்‌ எனக்கும்‌ கட்சிக்கும்‌ அநீதி இழைத்து துரோகம்‌ செய்துவிட்டார்‌. அவரை ஐக்கிய மக்கள்‌ சக்தி என்ற புதிய கட்சியில்‌ தலைவராக்குவதற்கு நான்‌ கணிசமான பங்களிப்பை செய்துள்ளேன்‌. எழுத்தில்‌ எங்களுக்கு தந்த உடன்பாட்டை கூட மீறியிருக்கிறார்‌. முன்னர்‌ ரணிலுடன்‌ நாங்கள்‌ இணைந்து செயற்பட்டபோது வாய்மொழிமூலம்‌ தந்த உத்தரவாதங்களையே அவர்‌ நிறைவேற்றி கண்ணியமாக நடந்துகொண்டார்‌. இப்படியான நிலைமையில்‌ சஜித்‌ அணியுடன்‌ தொடர்ந்து எப்படி பயணிப்பது என்று யோசிக்கும்‌ நிலைமைக்கு வந்துவிட்டோம்‌.தேசியப்பட்டியல்‌ விடயத்தில்‌ சமரசம்‌ செய்வதற்கான தேவை எங்களுக்கில்லை என்றும்‌ இதன்போது குறிப்பிட்டுள்ளார்‌ ரவூப்‌ ஹக்கீம்‌ எம்‌.பி.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter