எமது தாய்நாட்டிலுள்ள இயற்கை வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளிலும் அபிவிருத்தியடைந்த நாடகவும் மாற்ற வேண்டியிருக்கின்றது.
அனைத்து துறைகளிலும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான கடமைப்பாடு இலங்கையர் என்ற வகையிலும் அனைவர் மீதும் இருக்கின்றது என சுயேட்சை குழு 11 முதன்மை வேட்பாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் தெரிவித்தார்.
எமது பாட்டன் பாடசாலை சென்றபோதும் எனது தந்தை பாடசாலை சென்றபோதும் நான் கல்வி கற்றபோதும் இன்று எனது பிள்ளைகள் கல்வி கற்கின்றபோதும் எமது நாடு அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்றே கற்பிக்கப்பட்டு வருகின்றது.
தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா, சிங்கப்பூரின் லீக் வுஹான் போன்ற சர்வதேச தலைவர்களும் டி.எஸ் . சேனநாயக்க, ஏ.ஸி.எஸ். ஹமீத், பதியுத்தீன் மஹ்மூத் போன்ற எமது நாட்டின் தலைவர்களும் மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பதற்கான காரணம், அவர்கள் கட்சி பேதமின்றி தமது மக்களுக்கு ஆற்றிய சேவைகளினாலாகும் என்றும் சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளர் தெரிவித்தார்.
கடந்த 22 ஆம் திகதி அக்குறணையில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இப்பொதுத் தேர்தல் எமக்கு கிடைத்திருக்கும் மிகச் சிறந்த சந்தர்ப்பமாகும் . எனவே, கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் பணிகள், செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.
சிறந்த சட்டத்ததரணிகள், வைத்தியர்கள், கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள் போன்றோருடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்த நான், பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டேன் . கடந்த 2018 ஆம் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று, அக்குறணை பிரதேச சபையின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டேன்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடி, அக்குறணையின் மிகப் பெரும் பிரச்சினையாக காணப்பட்ட திண்மக்கழிவகற்றல் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை முறையாக செயற்படுத்த முடிந்தது.
இதற்கு ஒத்துழைத்த எனது சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகள், வேறுபாடுகளை களைந்து, சகவாழ்வுடன் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்காக மதத்தலைவர்கள் எனக்கு வழங்கிய ஒத்துழைப்புகள் மகத்தானவை.
இவ்விடயத்தை முழுநாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டியது எமது கடமையாகும் என்று அவர் அங்கு கருத்து தெரிவித்தார் . இப்பொதுத்தேர்தலில் போட்டியிடுவதன் பிரதான நோக்கம் தனது உயிரைவிட மேலாக கருதும் தாய்நாட்டினை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடையச் செய்வதும் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதும் என குறிப்பிட்ட அவர் தான் சுயேட்சை குழு 11 இல் 04 இலக்கத்தில் போட்டியிடுவதாகவும் இது உள்ளத்தால் செயற்படும் சந்தர்ப்பமல்ல அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் என்றும் குறிப்பிட்டார்.