முதல்நாள் இடம்பெற்ற முக்கியமான சம்பவங்கள் தொடர்பில், முழு விளக்கத்தை தெரிந்துகொள்வதற்கு, மறுநாள் பத்திரிகைகளை வாசித்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி கொண்டிருக்கின்றது. நவீன யுகத்தில், திறன்பேசிகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரும், ஏதோவொரு வகையில் செய்தியாளராக சமூகத்தில் உலாவருகின்றார்.
ஆகையால்தான், அச்சு ஊடகத்தின் மீதான பார்வை குறைந்துகொண்டே வருகின்றது. இதற்கு, வாசிப்பு பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிராத, இலத்திரனியல் சாதனங்களில் முழுமையாக மூழ்கிக்கிடக்கும் இளம் சமுதாயத்தினர் பொறுப்பாளிகளாக வேண்டும். எனினும், வயது முதிர்ந்தவர்களிடம் வாசிப்பு பழக்கம் இன்னுமே இருக்கத்தான் செய்கின்றது.
தற்போதைய காலக்கட்டத்தில் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் நடக்கும் அத்தனை சம்பவங்களும் ஒரிரு நொடிக்குள் விரல் நுனிக்கே வந்துவிடுகின்றன.
அதிலிருந்து கிடைக்கும் நன்மைகளை விடவும், தீமைகள் அதிகம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பௌத்த பிக்குகளின் பாலியல் சீண்டல்கள், பௌத்த தேரர், யுவதி மற்றும் பெண்ணொருவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலான செம்மையாக்கப்படாத காட்சிகள் அடங்கிய ஒளிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இவை தொடர்பில், இரண்டு தரப்புகளுக்கும் சாதகமான கருத்துகள் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டன.
சமூக வலைத்தளங்களின் ஊடாக நாட்டின் ஆட்சியே கலைக்கப்பட்டு, ஆட்சிமாற்றம் செய்யப்பட்ட வரலாறுகள் உள்ளன. அதேபோல, அவற்றால் விளையும் தீங்குகளும் அதிகமாகும். மேலே கூறப்பட்ட சம்பவங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
எனினும், சாதாரண குடிமகன் சட்டத்தை கையிலெடுத்து தண்டனை வழங்கியிருக்கக் கூடாது.
நிறுவனங்களை சார்ந்திருக்கும் ஊடகங்களுக்கு, ஊடக ஒழுக்கநெறி கோவை இருக்கும். ஆனால், பொதுமக்களிடத்தில் அவை இருக்காது.
கண்ணில் காண்பதெல்லாம் செய்திகளாகவே அவர்களுக்குத் தெரியும். ஆகையால், சமூக ஊடகங்களை, மக்கள் தங்களுடைய பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆக்கிரமிக்க இடமளிக்கக்கூடாது. அவ்வாறான நிலைமை ஏற்படுமாயின், ஊடக ஒழுக்க நெறி, உண்மைத்தன்மை உள்ளிட்ட நெறிமுறைகள் யாவும் கேள்விக்குறியாகிவிடும்.
சமூக ஊடகங்களில் முகப்புத்தகத்தில், நிர்வாணப் படங்கள், ஆக்குரோசத்தை தூண்டும் சம்பவங்கள் தொடர்பில் புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள், இரத்தம் தோய்ந்த புகைப்படங்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்கள், நபர்கள், இனங்களுக்கு இடையில் குரோதத்தை தூண்டுதல் தொடர்பில் ஏதாவது பதிவொன்றை ஏற்றினால், அவர்களுடைய முகப்புத்தகம் முடக்கப்படும்.
அதேபோன்றதொரு, நெறிமுறைகளை ஏனைய சமூக ஊடகங்களும் கடைப்பிடிக்குமாயின், நம்பிக்கையை கட்டிக்காக்க முடியும். நமது நாட்டைப் பொறுத்தவரையில், சமூக ஊடகங்கள் தொடர்பில் பலருக்கு போதிய தெளிவில்லை. ஏதாவது குற்றத்தைச் செய்ததன் பின்னர் தண்டனையை வழங்குவதை விடவும், சமூக ஊடகங்களை கையாழும்போது, கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், அவற்றை மீறினால் கிடைக்கும் தண்டனை உள்ளிட்டவற்றை சாதாரண மக்களுக்கு தெளிவூட்டினால், சமூக ஊடகங்களிலும் ஊடக ஒழுக்க நெறிமுறையைப் பேணமுடியும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழ்-மிற்றோர் 11 07 2023