தேர்தல் மூலம்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – போராட்டங்களால் அல்லவென்று ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தெரிவித்திருக்கின்றார். கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் மக்கள் கிளர்ச்சி வெற்றிபெற்றது. சிங்களவர்களின் பேராதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ஷ அதே மக்களின் வெறுப்பால் அகற்றப்பட்டார். கோட்டாபய ராஜபக்ஷவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து ரணில் விக்கிரம சிங்க எவருமே எதிர்பாராத வகையில் ஜனாதிபதியானார்.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால், கோட்டாபயவுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் காரணமாகவே ரணிலுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதே துருப்புச் சீட்டை ரணிலுக்கு எதிராக பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றக்கூடிய சூழல் இல்லை. கோட்டாபயவுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருந்தன. அதில் பிரதானமானது, பொருளாதார நெருக்கடியால் கொழும்பின் மத்தியதர வர்க்கம் விரக்தியுற்றது. கோட்டாபயவின் உரக் கொள்கையால் விவசாயிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டனர்.
இந்த பின்புலத்தில்தான் கோட்டாபய வெறுப்பு துளிர்விட்டது. ஆரம்பத்தில் கொழும்பு காலிமுகத்திடலில் சில குழுக்கள் கூடிய போது அதனை எவருமே பொருட்படுத்தவில்லை. ஆர்வக் கோளாறினால் சில இளைஞர்கள் ஒன்று கூடியிருப்பதாகவே நோக்கப்பட்டது. ஆனால், நாட்கள் செல்லச்செல்ல – சில நூறு சில ஆயிரமாகி பின்னர் இலட்சக்கணக்கான மக்களின் திரட்சியாக மாறியது. கோட்டாபயவை வெளியேற்றுவதே ஒரேயோர் இலக்காக இருந்தது. கூடவே மகிந்த ராஜபக்ஷவையும் வெளியேற்றியது.
கோட்டாபயவுக்கு எதிரான கிளர்ச்சிக்கு ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசகட்சிகளும் ஆதரவளித்திருந்தன. ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களும் பங்குகொண்டிருந்தனர். கிட்டத்தட்ட முழு நாட்டையுமே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். வேறுபட்ட இலக்குகள் சிலருக்கு இருந்த போதிலும்கூட, கோட்டாபயவின் வெளியேற்றத்தோடு கிளர்ச்சியில் பங்குகொண்டவர்கள் படிப்படியாக கலையத் தொடங்கினர். பாராளுமன்றத்தை இலக்கு வைத்து ஒரு குழுவினர் முன்னேறத் தொடங்கியபோது, முதன்முதலாக ரணில் விக்கிரமசிங்க அவரின் அதிகார முகத்தை காண்பித்தார்.
இதேவேளை ‘அறகலய’ கிளர்ச்சியை ஓர் இலக்குடன் நீர்த்துப் போகச் செய்வதிலும் ரணில் கவனம் செலுத்தினார். மத்தியதர வர்க்கம் அரச எதிர்ப்பை கைவிட்டது. ஒரு பெரும் எழுச்சியாக தோற்றம் காட்டிய அறகலயவை ஜனாதிபதி மாளிகையில் பியர் கிளாஸை திருடிச் சென்றவர், ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்தவர்கள், நீச்சல் தடாகத்தில் இறங்கிவர்கள் – எனப் பலரை பொலிஸர் கைது செய்தனர். இதன் மூலம் அறகலய மீதான மக்கள் கவர்ச்சி படிப்படியாக மலினப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக பிறிதொரு கிளர்ச்சியை திட்டமிடும் முயற்சிகள் திட்டமிட்ட வகையில் தடுக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் ஆட்சி மாற்றத்தை தேர்தல்கள் மூலம் ஏற்படுத்த முடியுமே தவிர, போராட்டங்களால் அல்ல என்று ரணில் கூறுகின்றார். ரணிலுக்கு எதிராக மக்களை திரட்ட வேண்டுமென்றால், மீண்டும் பெற்றோலுக்கான வரிசை – எரிபொருளுக்கான நீண்ட வரிசை ஏற்பட வேண்டும். அவ்வாறான தொரு சூழல் ஏற்பட்டால் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு ரணிலுக்கு எதிராக மக்களை திருப்பலாம். ஆனால், அது நடக்குமா?