அக்குறணை மண்ணில் புகைப்படத் துறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தி அத்துறையில் தனித்துவமிக்க பெயரை பதிவு செய்துள்ளவர் தான் அக்குறணை மேசன் ஸ்டூடியோவின் ஏக உரிமையாளர் அப்துல் காதர் முஹமட் நௌஸார். 1977 ஆம் ஆண்டு முதல் இத்துறையில் ஈடுபட்டுள்ள இவர் மக்களின் மனதில் ‘பிளேஸ்’ ஆக ஒளிக்கீற்றாக திகழ்கிறார். ஏனென்றால் கமராவும் ஸ்டூடியோவும் அவர் வாழ்க்கையாகிவிட்டதால். அதுமட்டுமல்லாமல் மக்களுடைய நலனில் அக்கறையுடன் செயற்படும் ஒரு முக்கியமானவராவார். இந்த நௌஸார் அக்குறணை எங்கும் பரந்துபட்ட பணிகளில் சமூகப் பணியாற்றி வருபவர்.
இவர் தான் கடந்து வந்த பாதையை தினகரனுடன் பகிர்ந்து கொண்ட போது….
குடும்பம் பின்னணி?
நான் 1960 இல் அக்குறணை துனுவில வீதியில் பிறந்தவன். மல்வானஹின்னயில் வளர்ந்தவன். அக்குறணை பாலிகா பாடசாலைக்கு அருகாமையில் அப்புகஹாமுல்ல வராசின்னயில் திருமணம் முடித்துள்ளேன். ஐந்து பிள்ளைகளில் நான்கு பிள்ளைகள் திருமணம் முடித்துள்ளார்கள்.நான் பொது வேலைகளில் ஈடுபடும் போது குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். பின்பு நான் அதனைச் சமாளித்துக் அக்காரியத்தை செய்யும் போது முழு ஒத்துழைப்பையும் வழங்குவார்கள்.
என்னுடைய தாயின் பெயர் நசூஹா பீபி, எனது தாய் எனது ஒரு வயதிலேயே இறந்து விட்டார்.தந்தையின் பெயர் அப்துல் காதர். தந்தை ஒரு வியாபாரி. அவர் வியாபாரியாக இருந்த போதிலும் அவரால் வியாபாரத்தில் மீண்டெழந்து நிற்க முடியாமல் போயிற்று. யாருடைய உதவியும் ஆதரவும் அவருக்கு கிடைக்கவில்லை.வீட்டில் ஐந்து பேர். இருப்பதற்கு இடம் போதாது. அவர் கஷ்டத்துடன் இருந்தார். ஆதலால் அவர் எங்களைப் படிப்பிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கினார்.இவ்வாறான சூழலில் தான் இறையடி எய்தினார்.
என் தாயை நான் இதுவரை காலத்திலும் “உம்மா” என்று சொல்லி அழைத்ததில்லை. ஒரு வயதிலேயே தாய் இறந்து விட்டார். எனக்கு தாயினுடைய அன்பு, பாசம், இரக்கம் என்பன எவையும் கிடைக்கவில்லை.
கல்வி வாழ்க்கை தொடர்பில்?
நான் ஆரம்ப பாடசாலையை மல்வானஹின்ன பாடசாலையில்தான் கற்றேன். பின்பு அதில் இருந்து அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையிலும் கற்றேன். அப்பொழுது எங்களது வீடு சிறியது. படிக்கக் கூடிய சூழல் இல்லை. அஸ்ஹர் பாடசாலைக்கு அருகில் உள்ள ஹாஜியார் ஒருவரின் இல்லத்தில் ஓர் அறையில் வாடகையில் இருந்து படித்தேன். படிக்கும் போது ஒரு வியாபாரம் செய்தேன். முன்னாள் கிராம உத்தியோகஸ்தர் சுஹைர் ஹாஜியார் அவர் இப்போது சுகயீனமுற்று இருக்கிறார். அல்லாஹ் அவருடைய உடல் ஆரோக்கியத்திற்கு நல்லருள் புரிய வேண்டும். அவர் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த சாரிகளை வாங்கி இன்னுமொருவரிடம் வியாபாரம் பண்ணுவதற்காக நான் கொடுத்தேன்.
அதில் 50 சாரிகள் இருக்கும். அது கிட்டத்தட்ட 15,000 ரூபா வரும். அந்த சாரி அனைத்தையும் கொடுத்தவர் எடுத்துச் சென்று விட்டார். நான் அப்பொழுது கடனை அடைப்பதா? அல்லது படிப்பதா? என்ற ஒரு தர்மசங்கடமான நிலை தோன்றியது. அப்பொழுது தங்கக் கடையில் வேலை செய்வதற்கு குடும்பத்தில் இருந்து அழைப்பு வந்தது. அப்படி வருவதென்றால் எனக்கு கடன் செலுத்த வேண்டி இருக்கிறது. அதற்கு பணம் உதவி செய்வீர்களா எனக் கேட்டேன். அதற்கு இணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்பு காட்டகஸ்திகிலிய சென்றேன். அங்கு தங்க வியாபாரம் செய்து கொண்டு செல்லும் போது புகைப்படத் துறையிலும் ஆர்வம் காட்டினேன். அதிலும் வெற்றியைக் கண்டேன். அங்கும் பிரபல்யம் அடைந்தேன்.
அப்பொழுது ஒரு தீர்மானம் எடுத்தேன். சாரி வாங்கின கடனையும் கொடுத்து விட்டு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி ஓட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அக்குறணை துனுவில வீதியைச் சேர்ந்த முஹமட் சலீம் காட்டகஸ்திகிலியவுக்கு பைசிக்கள் ஒன்றை எடுத்து வந்தார். அதற்கு விலை விசாரித்து அதனைப் பெற்றுக் கொண்டு ஊர் வந்தேன். அதன் பின்பு ஓர் இலக்கை அடையும் வரையிலும் நான் ‘டீ’ குடிப்பதில்லை என்றதொரு மன வைராக்கியம் இருந்தது. கடனையும் செலுத்த வேண்டும் ஒரு பைசிக்களையும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செலவைக் குறைத்து இலக்கை அடையும் வரையிலும் முயற்சி செய்து அந்த மோட்டார் சைக்கிளையும் பெற்றுக் கொண்டேன்.
அதன் பிரகு அக்குறணை சென்று வியாபாரம் செய்யலாம் என்ற எண்ணத்தோடு அக்குறணைக்கு வந்தேன். 1977 இல் 150 ரூபாவுக்கு கடையொன்றை கூலிக்கு வாங்கினேன். அவர்கள் இதுவரைக்கும் திருப்பிக் கேட்கவில்லை.
புகைப்படத்துறையின் ஆர்வத்திற்கான காரணம்?
எங்கள் வீட்டில் பெட்டிக் கமரா ஒன்றை வைத்திருந்தேன்.அதை எடுத்து சரி செய்து கொண்டு கண்டிக்கு சென்று அதற்குப் போடக் கூடிய புகைப்படச் சுருளை வாங்கி வருவேன். அதில் புகைப்படம் எடுத்து மற்றவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பேன். அப்படி இலவசமாக கொடுத்தவர்களில் சிலர் பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். முன்னாள் மல்வானஹின்ன கிராம உத்தியோகஸ்தர் ஜமால்தீன் அவர்களிடம் என்னுடைய ஆரம்ப கால புகைப்பட வரலாற்றைச் சற்று வினவினால் தெளிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அக்குறணையில் “சுப்பர் கலர் சென்றர்” என்ற பெயரில் புகைப்பட சுருள்களை சேகரிக்கும் நிலையம் ஒன்றைத் திறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அது சிறிய இடத்தில் 150 ரூபாவுக்கு கூலிக்கு எடுத்து திறந்தேன். அதற்கு மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இருக்கவில்லை. 12ஒxஒ12 அடி என்ற அளவிலான ஓர் இடத்தை அக்குறணை அஸ்னா ஜும்ஆப் பள்ளியை நிர்மாணிப்பதற்காக பங்காற்றியவரான சவ்லதி ஹாஜியார் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.
என்னுடைய சகோதரிகள் இந்த இடத்தை மறைப்பதற்கு வீட்டில் உள்ள உடைகளை எல்லாம் தந்தார்கள். ஓலைப் பண்ணையால் மேல் கூரையை மறைத்தேன். படியில் ஏறுவதற்கு பலகையிலான ஏணிப்படியையும் கொண்டு வந்து வைத்தேன். அதுவும் கட்டம் கட்டமாகத்தான் இந்த இடத்தை செப்பனிட்டு வந்தேன். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு வந்து அழகுபடுத்தினேன். மின்சாரம் வசதிகளையும் பெற்றேன் அதற்குப் பின்பு இன்னும் மேலதிகமாக வசதிகளைக் கொண்ட இடமாக மாற்றியமைத்துள்ளேன். இப்படியெல்லாம் செய்து ஓர் பரிபூரணமான இடமாக என்னுடைய சொந்தப் பணத்தில் செய்துள்ளேன். இந்த இடத்தைத் தந்துதவியவர்கள் இன்னும் திருப்பிக் கேட்கவில்லை. அதனைத் தந்த ஹாஜியார் மரணம் அடைந்து விட்டார். அதற்குப் பின்பும் யாரும் ஒரு வார்த்தை கேட்கவில்லை. குறித்த ஹாஜியாரின் மூன்றாவது பரம்பரையில் அவர்களுடைய மகளும் மருமகனும் இருக்கிறார். இதுவரையில் அவர்களும் கேட்கவில்லை.
“அவர்கள் 150 ரூபா இல்லாமல் ஒரு வருடத்திற்கு 250 கூட்டிக் கொடுங்கல், நீங்கள் தான் கட்டினீர்கள், நீர் மின்சாம் எல்லாம் எடுத்து இருக்கின்றீர்கள். 250 கூட்டித் தந்தால் போதும். நீங்கள் செய்து கொண்டு செல்லுங்கள்” என்று மட்டும் கூறினார்கள். ஆனால் இதுவரையிலும் என்னிடம் அவர்கள் கேட்கவில்லை. இப்பொழுது மூன்றாவது பரம்பரை போய் கொண்டு இருக்கிறது. எவ்வாறாயினும் இன்றைக்கு இந்த இடம் அவர்களுக்கு உரித்துடையதே! திடீரென்று அவர்கள் வந்து கேட்டால் நான் கொடுக்கின்ற நிலையில் இல்லை. இதை நானும் அவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் விளங்கிக் கொள்ளும் தன்மையையும் நல்ல மனப்பான்மையையும் கொண்டவர்கள். அதற்காக நான் இதை எடுத்துக் கொள்ளப் போவதுமில்லை. நல்ல மனசாட்சியுடன் நாங்கள் இருவரும் பழகி வருகிறோம். அவர்கள் எந்த இடையூறுகளையும் செய்யவில்லை. ஆனாலும் அவர்களுக்கு கூடுலான வாடகையொன்றை மேலும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் எனக்கு இருக்கிறது. 150 ரூபாவில் இருந்து இன்று வரைக்கும் பெரியளவில் கொடுத்து வருகின்றேன்.
இந்த தொழிலில் நீங்கள் வெற்றி பெறக் காரணம்?
தான் செய்யும் தொழிலின் மீது முதலில் அன்பு இருத்தல் வேண்டும். அந்த வகையில் பிரியத்தோடு சோர்வின்றி செயற்படத் தொடங்கினேன். கொழும்பில் அதிகம் தொடர்பு இருந்தமையால் கொழும்பிலுள்ள ஸ்டூடியோக்காரர்கள் சிங்கப்பூர் நாட்டுக்கு அனுப்பித்தான் வர்ணப் புகைப்படங்களைப் பெற்றுக் கொள்வார்கள். அப்பொழுது அவர்களிடமிருந்து அந்த சிங்கப்பூர் முகவரியைப் பெற்றுக் கொண்டு வந்து வர்ணப் புகைப்படத்தைக் கழுவதற்காக நானும் சிங்கப்பூர் நாட்டுக்கு அனுப்பி எடுத்துக் கொடுப்பேன். ஒரு வாரத்தில் சிங்கப்பூரில் இருந்து புகைப்படம் வந்து விடும்.
உண்மையில் அக்குறணை மக்களை நான் மறக்க முடியாது. பாராட்டியாக வேண்டும். அவர்கள் எப்போது கண்டிக்கு போக மாட்டார்கள். ஸ்டூடியோ என்றால் நௌஸார்தான் மேசன் என்றால் நௌஸார் தான். அவர்கள் என்னோடு அன்பு இரக்கம் பாசமிக்கவர்கள். அதேபோன்று இன்று வரைக்கும் நானும் அவர்களுடன் இரக்கம் அன்பு பாசமிகுந்தவனாக இருந்து வருகின்றேன்.யார் வந்து புகைப்படத்தைக் கேட்டாலும் அவர்களுடைய முகவரியைப் பெற்று வீட்டுக்குச் சரி கொண்டு போய் கொடுத்து விட்டு வருவேன். இரவு என்று பார்க்காமல் எத்தனை மணிக்கு வந்து புகைப்படம் கேட்டாலும் புகைப்படம் பிடிக்க வேண்டும் என்று கோரினாலும் சரி நானோ பிள்ளைகளோ சென்று அந்த உதவியை அக்குறணை மக்களுக்கு செய்து கொடுப்பேன். இது அக்கறணை மக்களுக்குத் தெரியும்.
தேவையானளவு எல்லா வகையிலான விளம்பரங்களையும் செய்துள்ளேன். வானொலி, பத்திரிகை போன்ற சகலதிற்கும் விளம்பரம் செய்வேன். சிலர் வீணாக செலவு செய்கிறேன் என்று கூறுவார்கள். ஆனால் விளம்பரம் இல்லாமல் வியாபாரம் இல்லை. விளம்பரம் கட்டாயம். அதற்குச் சந்தை வாய்ப்பு அவசியம். அது என்றைக்கு வீண் இல்லை. வீடுகள் கட்டும் போது 5, 10 தட்டுகள் கட்டுவது என்பதுதான் வீண். இதன் மூலம்தான் ஐந்து பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்துள்ளேன். தொழிலின் மீது வெறுப்பு இல்லை. என்னிடம் தற்போது 15 பேர் வரையிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவை மட்டுமல்ல பல்வேறு வியாபாரங்களும் செய்து வருகின்றேன்.
நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள்
சில சவால்களையும் எதிர்நோக்கியுள்ளேன். மரம் ஒன்று ஸ்டூடியோவில் வீழ்ந்தது. அதனால் ஸ்டூடியோ முற்றாக சேதம் ஏற்பட்டது. அதைப் போன்று தண்ணீரைத் திறந்து விட்டார்கள். அதிலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அல்லாஹ் எங்களைக் கைவிடவில்லை. கடைசியாக வந்த வெள்ளப் பெருக்கிலும் எனக்கு எந்த வித அனர்த்தங்களும் வரவில்லை. என்னை அல்லாஹ் பாதுகாத்தான்.
ஸ்டூடியோ தொழில் பற்றி கற்றுக் கொண்டது தொடர்பாக கூற முடியுமா?
எனக்கு புகைப்படம் பிடிக்கத்தான் தெரியும். ஆனால் அதனைக் கழுவத் தெரியாது. ஒருவரை கண்டிக்குப் போய் ஒருவரை அழைத்து வந்தேன். அவரிடம் நான் படிக்கும் போது ஒரு வேலைக்காரனாக இருந்தேன்.
புகைப்படம் கழுவுவதற்கு பழகினாலும் கழுவதற்கு எமது ஸ்டூடியோவில் இடமில்லை. அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று செய்தேன். இதற்கு சகோதரிமார்களுடைய ஆதரவும் பங்களிப்பும் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நான் நன்றி கூர கடமைப்பட்டுள்ளேன். யாருடைய உதவியும் இல்லாமல் புகைப்படத்தைப் பிடித்து தானே கழுவிக் கொள்ளுகின்ற திறனையும் ஆற்றலையும் பயிற்சியையும் பெற்றுக் கொண்டேன்.
இவ்வாறு செய்து கொண்டு செல்லும் போது பல விதமான நெருக்கடிகளும் பிரச்சினைகளும் இருந்தன. ஆனால் மன தைரியத்தை கைவிடவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மனதில் வெறுப்பு வரவில்லை. ஒரு கரையைக் காணுவோம் என்ற வகையில் மிகுந்த ஆர்வத்தோடு செயற்பட்டேன்.
ஆளடையாள அட்டை ஆட்பதிவுத் திணைக்களத்திலும் குரவரவு குடியகல்வு திணைக்களத்திலும் ஒன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளார்கள். எங்களது ஸ்டூடியோவில் புகைப்படம் பிடித்தால் அங்கு சென்று அலுவலக விடயங்களை நிறைவு செய்து கொள்ளலாம்.
கிடைத்த விருதுகள் தொடர்பில்
மத்திய மாகாண சபையின் கைத்தொழில் வர்த்தக அமைச்சால் சிறந்த முயற்சியாளர் விருதுகளை 15 தடவை பெற்றுக் கொண்டேன். அமெரிக்காவில் புகைப்பட கல்வி கற்கை நிறுவனத்தினால் புகைப்படம், சந்தைப்படுத்தும் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து விண்ணப்பம் செய்தேன். அதற்கு 200 டொலர் செலுத்தித்தான் தான் விண்ணப்பம் செய்ய வேண்டும். புகைப்படத்தில் பல்வேறு தொழில் நுட்ப முறையில் விநியோக வியாபாரத்தை நடைமுறைப்படுத்தியிருந்தேன். குடை, பேக் போன்ற பல புதிய காட்சிப் பொருட்களை செய்தேன். இவைகளை அமெரிக்காவுக்கு அனுப்பினேன். அதில் 107 பேரில் 7 ஆவது போட்டியாளராகத் தெரிவு செய்யப்பட்டேன். இப்போட்டியில் தெரிவுக்காக மத்தியஸ்தர்களாக பணியாற்றியவர்களுடைய எழுத்துக் குறிப்பை எனக்கு அனுப்பி இருந்தார்கள். அது ஒரு பிரமிக்கத்தக்கதாக இருந்தது. அந்த கடிதத்திற்கு அமெரிக்கா செல்வதற்காக ஐந்து வருட விசா தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. 1995 – 2011 வரையிலும் விருதுகள் கிடைத்துள்ளன. நாடளாவிய ரீதியில் நட்சத்திர விருதுகள், தேசிய மட்டத்திலும் மூன்று விருதுகள் பல்வேறு பட்ட விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளேன் என்று குறிப்பிட்டுக் கூறலாம்.
தினகரன் இதழ் 04/02/2023