முஸ்லிம்களுக்கான தேர்தலும், தேசத்துக்கான தேர்தலும்

தேசத்தின் பல்வேறு நெருக்கடிகளை உணர்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை தன்னிச்சசையாக ஜனாதிபதியோ அல்லது அவரை அப்பதவிக்கு உயர்த்திய பெரும்பான்மை கட்சியின் அங்கத்தவர்களோ அல்லது ஜனாதிபதியின் நிபுணத்துவ ஆலோசகர்களோ வகுத்தாலும் அவற்றுக்குப் பொது மக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்பதை அறியவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற வேண்டுமென பரவலான ஓர் அபிப்பிராயம் நிலவுகிறது. அதற்குச் சர்வதேச ஆதரவும் உண்டு எனவும் கருதலாம். ஆனால் அந்தத் தேர்தலை எவ்வழியிலாவது நிறுத்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் பல முயற்சிகளை மேற்கொள்ளுகின்றமை வெளிப்படை. அண்மையில் மத்திய வங்கியும் தேர்தலுக்கான நிதியினை ஒதுக்குவது சவாலாக அமையுமென ஓர் அறிக்கையை விடுத்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையாளரோ நிதி ஒரு பிரச்சினை இல்லையெனத் தைரியம் கூறுகிறார்.

எவ்வாறிருப்பினும் வரப்போகும் தேர்தல் ஊராட்சிமன்ற மட்டத்திலோ மாகாண மட்டத்திலோ நாடாளுமன்ற மட்டத்திலோ அல்லது ஜனாதிபதி மட்டத்திலோ நடைபெற்றாலும் அது தேசத்தின் நலனைக் கருதி நடத்தப்படும் ஒரு தேர்தலாகவே அமையும். அந்தத் தேர்தலில் முற்படுத்தப்படப்போகும் ஒரே பிரச்சினை நாட்டின் நெருக்கடிகளுக்கான, அதிலும் குறிப்பாகப் பொருளாதார நெருக்கடிகளுக்கான அரச பரிகாரம் தீர்வாகுமா இல்லையா என்பதாகும். அரச பரிகாரம் தீர்வில்லையெனின் அதற்கான மாற்றுப் பரிகாரம் எதிர்க்கட்சியினரிடையே உண்டா? உண்டெனில் அதனை அவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டியது அவசியம். ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகளெல்லாம் அரசின் பரிகாரத்தின் குறைகளைப்பற்றிக் காரசாரமாக விமர்சனம் செய்கிறார்களே ஒழிய தமது மாற்றுப் பரிகாரத்தைப்பற்றி எதையுமே சொல்லக் காணோம். இது ஒரு பெரும் குறை.
எனினும் இலங்கையின் பொருளாதாரப்பிணி இந்த நாட்டை ஆள்கின்ற அடிப்படை அமைப்பிலிருந்து உருவாகியது. அந்த அமைப்பை மாற்றாமல் இப்பிணியை நிரந்தரமாக அகற்ற முடியாது என்பதை இக்கட்டுரையாளர் பல சந்தர்ப்பங்களில் வலியறுத்தியுள்ளார். அதே பாணியிலான கருத்துக்களை இதுவரை முன்வைத்துள்ள ஒரேயொரு அரசியற் கட்சி மக்கள் விடுதலை முன்னணி என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எது எப்படி இருப்பினும் எதிர்வரப்போகும் தேர்தல் நாட்டின் நலன்பற்றிப் பேசப்படுகின்ற அல்லது அதைப்பற்றித் தீர்மானிக்கப்படப் போகின்ற ஒரு தேர்தலாக அமைவது உறுதி.

இந்த நிலையில், முஸ்லிம் கட்சிகளினதும், அவற்றின் தலைவர்களினதும், அங்கத்தவர்களினதும் தேர்தல் நடவடிக்கைகள் முற்றிலும் வேறொரு பாதையிலே செல்வதை நோக்கக்கூடியதாக உள்ளது. அதாவது இவர்களின் தேர்தல் நடவடிக்கைகள் எந்த நோக்கத்துக்காக நடைபெறுகின்றன என்பதை அவதானிக்கும்போது அவற்றுக்கும் இந்த நாட்டின் தலையாய பிரச்சினைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, யார் வாலைப் பிடித்தாவது எந்தப் பிசாசுடன் இணைந்தாவது எந்தப் பொய்யையோ புரட்டையோ சொல்லியாவது தேர்தலில் வென்று, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளின் ஊராட்சி மன்றங்களைக் கைப்பற்றி, அந்தப் பலத்தை மையமாகக்கொண்டு இனிவரப்போகும் நாடாளுமன்றத் ேதர்தலிலும் குதித்து, அதன்மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து, அங்கே தமது சமூகத்தைப் பணயம் வைத்து அமைச்சுப்பதவிகளையோ ஆளுனர் பதவிகளையோ பெற்றுப் பணம் திரட்டும் நோக்காகவே இவர்களின் தேர்தல் நடவடிக்கைகள் தென்படுகின்றன. இதனை நோக்கும்போது முஸ்லிம் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் ஆதரவாளர்களும் இந்த நாட்டுக்கே உரியவர்கள்தானா என்ற ஒரு சந்தேகமும் எழுகிறது. இந்த நிலை ஏன் ஏற்பட்டது?

குடியேற்ற ஆதிக்கம் முடிவடைந்து சுதந்திரம் கிடைத்தபின்பு, “நாம் இருக்கும் நாடு நமதென்பதாச்சு, இது நமக்கே உரிமையாம் என்பதாச்சு” என்று பாரதி பாடியது போன்று இலங்கையரே இலங்கையை ஆளத் தொடங்கினர். யாராய் இருந்தாலும் எந்த இனத்தவராயினும் எந்த மொழியைப் பேசுபவராயினும் எந்த மதத்தைப் பின்பற்றுபவராயினும் ஆட்சியிற் பங்குகொண்டு நாட்டை வளப்படுத்த வேண்டும் என்ற கடமைப்பாடு உருவாகியது. அது மட்டுமல்ல, நாடு வளம்பெறாமல் எவரும் எவ்வினமும் வளம்பெற முடியாது என்ற ஒரு நிர்ப்பந்தமும் சுதந்திரத்தால் தோற்றுவிக்கப்பட்டது. ஆகவே நாட்டின் பிரச்சினைளிலே பூரண பங்குகொள்ளாமல் எவரும் எந்த இனத்தவரும் நாட்டின் உயிரோட்டமுள்ள ஒரு பிரஜையாக வாழ முடியாது என்ற ஒரு நியதிக்குள் தள்ளப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கை முஸ்லிம்களின் மனப்போக்கு அவ்வாறு மாறவில்லை என்பதை இங்கே கவலையுடன் குறிப்படவேண்டியுள்ளது. அதற்குக் காரணமென்ன?

அதற்கான முக்கிய காரணம் முஸ்லிம் மதபோதகர்களின் போதனை. பரலோக வாழ்வே நிச்சயம், இகலோக வாழ்வு அனிச்சயம், மௌத்தையும் ஆகிறத்தையும் மறந்து வாழாதீர்கள் என்ற தோரணையிலேயே மதபோதனைகள் பரம்பரை பரம்பரையாக இடம்பெற்றன. இந்தப் போதனையைக் கூர்ந்து நோக்கினால் “நீ வாழாதே” என்பதுபோல் இல்லையா? இது வாழ்க்கை வாழ்வதற்கே என்ற குர்ஆனின் போதனைக்கு மாறானது என்பதை அந்த இறைவசனங்களை யதார்த்த சிந்தனையுடன் படிப்போருக்கு விளங்கும். வெள்ளிக்கிழமைகள் தோறும் நடைபெற்ற அனைத்து குத்பா பிரசங்கங்களும் பரலோக வாழ்வையே சதா உச்சரித்துக் கொண்டிருந்தமையால் அவற்றைக் கேட்ட பாமர மக்களும் தாமும் தமது தொழிலும் குடும்பமும் பள்ளிவாசலும் என்ற முக்கூட்டினுக்குள்ளேயே நின்று சுழன்றனர். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற அரசியல் பற்றற்ற மனப்பாங்கு அவர்களிடையே உருவாகத் தொடங்கிற்று. அதனால் வியாபாரத்தையே பிரதான தொழிலாகக்கொண்டு வாழ்ந்த முஸ்லிம்கள் அரசியலையும் ஒரு வியாபாரமாகவே கருதியதில் வியப்பில்லை. 1950களுக்குப்பின்பு இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் நுழைந்த தப்லீக் இயக்கப் பிரச்சாரங்களும் இந்த மனப்பாங்கை மாற்றவில்லை. இந்த மனப்போக்கை நன்றாக அவதானித்த காலஞ்சென்ற அரசியல்வாதி கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களைப்பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் இந்த நாட்டில் மாடும் புல்லும் போன்று வாழ்கின்றனர் என்றார். அதாவது, மாடு புல்லை மேயும், ஆனால் அதை எப்படி வளர்ப்பது என்பதைப்பற்றி அதற்குக் கவலையே இல்லை. இதைப்பற்றி முஸ்லிம் புத்திஜீவிகள் மிகக் கூர்மையாகச் சிந்திக்க வேண்டியது அவசியம்.

இந்த மனப்போக்கு வளர்ந்ததனால் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும்போது எந்தக்கட்சி தமது சமூகத்துக்கு அதிக சலுகைககளை அளிக்கும் என உறுதிமொழி வழங்கியதோ அந்தக் கட்சிக்கே தமது வாக்குகளை அள்ளி வீசினர். அந்தக் கட்சிகளின் வேறு எந்தக் கொள்கைகளைப்பற்றியும் இந்தச் சமூகத்துக்கு எந்தக்கவலையும் இருக்கவில்லை. சமூகத்தின் அரசியல் தலைவர்களும் ஓரிருவரைத்தவிர அந்த மனப்பாங்கிலேதான் நாடாளுமன்ற விவகாரங்களிற் கலந்துகொண்டனர். எந்தத் தலைவனுமே முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களின் உரிமைகளைப்பற்றிப் பேசியதே இல்லை. அதனால் சலுகைகளை நம்பி வாழும் ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிற்று. அதுமட்டுமல்லாமல் நாட்டின் பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் முஸ்லிம் தலைவர்கள் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. உதாரணமாக, பொருளாதாரம் சம்பந்தமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது எல்லா முஸ்லிம் அங்கத்தவர்களுமே மௌனிகளாக இருந்தனர். இருந்தும், அவர்கள் எவருமே தமது இனத்துக்கென ஒரு தனிக்கட்சி அமைப்பதைப்பற்றிச் சிந்திக்கவே இல்லை. அதற்காகவாவது அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆனால் அந்த நிலை இன்று மாறி விட்டாலும் அரசியல் மனப்பாங்கு மாறவே இல்லையென்று கூறலாம்.

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு கட்சி உருவாகி இன்று அது இரண்டாகப் பிரிந்து எந்தக்கட்சி அதிகமான முஸ்லிம் வாக்குகளைக் கைப்பற்றி எந்தக் கூட்டணியுடன் இணைந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கலாம், அமைச்சுப் பதவிகளையும் ஆளுனர் பதவிகளையும் பெறலாம் என்பதே அவற்றின் முழு இலக்காக அமைந்துள்ளது. அக்கட்சிகள் ஒவ்வொன்றும் முன்வைக்கும் பிரச்சினைகள் யாவுமே முஸ்லிம்களைப் பற்றியதே. முஸ்லிம்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, அவர்களின் வியாபார ஸ்தலங்கள் பகிஷ்கரிக்கப்படுகின்றன, பள்ளிவாசல்களுக்கு இடையூறுகள் விளைவிக்கப்படுகின்றன என்றெல்லாம் ஒப்பாரி வைக்கும் கட்சிகளாகவே இவை மாறியுள்ளன. இந்தக் குறைகளை யாரும் மறுக்கவில்லை. அவை தீர்க்கப்படத்தான் வேண்டும். ஆனால் அவற்றைத் தீர்ப்பதற்கு இக்கட்சிகளால் முடியுமா என்பதுதான் பிரச்சினை.

இந்தப் பிரச்சினைகளையே முன்வைத்து சதா ஒப்பாரி வைத்துக்கொண்டு அதே நேரம் நாட்டை இன்று பாதித்துள்ள பொருளாதார நெருக்கடிகளைப்பற்றியும் அதற்கான தீர்வுகளைப்பற்றியும் முஸ்லிம் தலைமைகள் பகிரங்கத்தில் எதையும் சொல்லாதிருப்பதும் அதைப்பற்றிய கரிசனையே இல்லாதிருப்பதும் கொல்வின் கூறிய கூற்றுக்கு ஆதாரமாகத் தெரியவில்லையா? இதுவரை எந்த முஸ்லிம் கட்சித் தலைவன் அல்லது தொண்டன் இன்றைய பொருளாதாரச் சிக்கல்களைப்பற்றி ஆக்கபூர்வமான ஒரு உரையையாவது பகிரங்கத்தில் நிகழ்த்தியது உண்டா? அல்லது ஏதாவது ஒரு அறிக்கையை அது பற்றி எழுதி வெளியிட்டது உண்டா? இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியைப்பற்றிய ஒரு தேர்தலாக ஊராட்சிமன்றத் தேர்தல் உருவெடுக்கின்ற இச்சமயத்தில் முஸ்லிம் கட்சிகள் தமது இனத்தின் குறைகளையே முன்வைத்துப் பிரச்சாரம் செய்வதை எவ்வாறு சரிகாண்பதோ? அதே சமயம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீரவேண்டுமென்று துஆப் பிரார்த்தனை செய்வதால் அவை தீரப்போவதில்லை. துஆப் பிரார்த்தனைதான் சிறந்த வழியென்றால் முஸ்லிம் இனத்தின் பிரச்சினைகளையும் பிரார்த்தனைகளாலேயே தீர்க்கலாமே. அதற்கென ஏன் அரசியல் கட்சிகளும் மேடைகளும் பிரச்சாரங்களும்?

நாடு ஈடேற்றம் பெறாமல் அதன் மக்கள் ஈடேற்றம் காண முடியாது. இதனை மறந்து முஸ்லிம் கட்சிகள் இனம் இனம் என்று கதறுவதால் முஸ்லிம்களே இந்த நாட்டுக்கு உரியவர்கள் அல்ல என்ற கருத்துக்கு வலுவூட்டுகின்றனர். அந்தக் கருத்து ஏற்கனவே நிலவுவதை யார்தான் மறுப்பர்? தமிழர்களாவது இலங்கையை சிங்கள ஈழம் தமிழ் ஈழம் என வகுத்து தமிழ் ஈழத்தில் தமது உரிமைகளைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள். அது சரியோ பிழையோ என்பது ஒரு புறமிருக்க, முஸ்லிம் கட்சிகள் இனவாரியாகப் போராடுவது எந்தக் கிலாபத்தை உருவாக்கவோ?

இன பேதங்களை மறந்து இந்த நாட்டின் அடிப்படை ஆட்சி அமைப்பையே மாற்ற வேண்டும் என்று கடந்த வருடம் இளைஞர்கள் காலிமுகத்திடலிலே திரண்டெழுந்தபோது இந்த முஸ்லிம் தலைமைகளும் அவர்களின் தொண்டர்களும் எங்கே போனார்கள்? அந்த இளைஞர்களுக்காக எந்த முஸ்லிம் தலைவன் குரல் கொடுத்தான்? இன்றைய பேரினவாத அடிப்படை அமைப்பை ஒழித்து, ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பேணி, மக்களுக்குப் பொறுப்புக் கூறும் ஓர் அரசை நிறுவி, அவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஓர் அரசியல் யாப்பையும் கொண்டுவரவே அந்த இளைஞர் கூட்டம் துடிக்கிறது. அவர்களுடைய கோரிக்கைகளை மழுங்கடித்து அவர்களையும் பேரினவாதிகள் தமது கட்சிகளுக்குள் நுழைக்கும் முயற்சிகளில் இப்போது ஈடுபட்டிருப்பது தெரிகிறது. அந்தச் சூழ்ச்சிக்கு அவ்விளைஞர்கள் பலியாகப் போவதில்லை.

இளம் சமுதாயத்தின் அபிலாஷைகளை விளங்கி அவற்றை ஓரளவாவது நிறைவேற்றக்கூடிய ஒரு கட்சியை அடையாளப்படுத்தி அதற்கு முஸ்லிம்கள் ஆதரவளித்தாலன்றி இச்சமூகத்தின் எதிர்காலம் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருக்கும். அப்பிரச்சினைகளை முஸ்லிம் கட்சிகளால் தீர்க்கவே முடியாது. இனத்தையும் மதத்தையும் அரசியலில் இருந்து நீக்காதவரை முஸ்லிம்களுக்கு விமோசனம் இல்லை.

கலாநிதி அமீரலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா
விடிவெள்ளி மலர்:15 இதழ்:11 திகதி-26/01/2023

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter