கனவாகும் பொருளாதார மீட்சி
22 காரணம் என்னவெனில் அந்த உதவி இலங்கைக்குக் கடன் வழங்கிய நாடுகளுடனான பேச்சுவார்த்தையின் வெற்றியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகள், முக்கியமாக சீனமும் இந்தியாவும், இன்னும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. அவர்களது இணக்கம் இந்து சமுத்திரப் புவி அரசியலுடன் பின்னிப்பிணைந்து அவர்களுள் யார் இலங்கையைத் தம் வலைக்குள் சிக்கவைப்பது என்ற பலப்பரீட்சையினால் இழுபறிப்பட்டுக் கிடக்கின்றது. அந்தப் பரீட்சையில் அமெரிக்காவும் திரைமறைவில் இந்தியாவின் சார்பில் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியின் பண உதவி கிட்டும்வரை சுமார் 5 பில்லியன் டொலர் பெறுமதியான இதர உதவிகளும் கிடைக்கப்போவதில்லை. இதனால் 2022 இல் 7 சதவீதம் குறுகிய பொருளாதரம் 2023 இல் 8 சதவீதத்தால் குறுகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உதவிகளை எதிர்பார்த்துத்தான் ரணில் விக்கிரமசிங்ஹவின் 2023 வரவு செலவுத் திட்டமும் தயாரிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் வரிகளையெல்லாம் உயர்த்தியதனால் ஏற்படப்போகும் விலைவாசி உயர்வையும் வருமானக் குறைவையும் வெளிநாட்டு உதவிகளைக் கொண்டு ஓரளவு சமாளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலேதான் அந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளெல்லாம் 2023 இல் நிறைவேறுவது சந்தேகம். இத்தனைக்கும் மத்தியில் 2023 இல் உலக அளவில் மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் ஏற்படலாமென சர்வதேச நாணய நிதியும் உலக வங்கியும் கட்டியம் கூறுகின்றன. ஒட்டு மொத்தத்தில் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி 2023 இலும் தீரப்போவதில்லை. 2024 இலேதான் இலங்கையின் பொருளாதாரம் சிறிது வளர்ச்சிகாணும் என உலக வங்கி கருதுகிறது. அதுவும் என்ன நிச்சயம்? பொருளாதார மீட்சி என்பது கனவாகிக்கொண்டு வருகிறதா?
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள்
இந்தப் பின்னணியிலேதான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றிய சர்ச்சை அரசியலில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலை பங்குனியில் நடத்துவதா பிற்போடுவதா என்பதுதான் இச்சர்ச்சையின் உள்ளடக்கம். ஜனாதிபதியையும் அவருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இயங்கும் மொட்டுக் கட்சியினரையும் பொறுத்தவரை தேர்தலைப் பின்போடுவதே சாலச் சிறந்தது எனலாம். காரணம் இப்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மொட்டுக் கட்சியினரே காரணம் என்பதையும் அவர்களின் தயவில் இயங்கும் ஜனாதிபதி மேலும் வரிகளை உயர்த்தி அந்த நெருக்கடிக்கு உரம் ஊட்டுகிறாரென்ற அபிப்பிராயமும் பொதுமக்களிடையே பரவியுள்ளதால் எந்த ஒரு தேர்தலிலும் ஜனாதிபதியும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் மகிந்த தலைமையிலான மொட்டுக்கட்சியும் மண் கவ்வுவது நிச்சயம். ஜனாதிபதியைப் பொறுத்தவரை அவரது வரவு செலவுத் திட்டமும் அவர்காணும் 25 வருட பொருளாதார மாற்றக் கனவும் நிறைவேறுவதற்கு அடிப்படையாக சர்வதேச நாணயநிதி ஆதரவிலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆனால் அவை மேற்கொள்ளப்படுவதற்கு நிதிப்பற்றாக்குறை தடையாக இருப்பதாலும் அத்தடைகள் நீங்குவதற்கு காலமெடுக்கும் என்பதாலும் தேர்தலை ஒத்திவைப்பது நல்லது.
அதேசமயம் மகிந்தவின் மொட்டுக்கட்சியின் காரணமோ வேறு. சர்வதேச நாணய நிதியின் உதவியும் ஏனைய உதவிகளும் கிடைப்பது தாமதமாகும் சூழலில் ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்டத்தின் புதிய வரிகளும் அவற்றால் ஏற்படும் விலைவாசி உயர்வும் வருமானக் குறைவும் மக்களின் கஷ்டங்களை மோசமாக்கிக்கொண்டே இருக்கும். அந்த நிலையில் மக்களின் மனக்கொதிப்பும் வெறுப்பும் ஜனாதிபதியின்மேல் திசைமாறும். அந்த மாற்றத்தை தமக்குச் சாதகமாக மொட்டுக்கட்சியினால் பயன்படுத்த முடியும். இலங்கை வாக்காளர்கள் பழையதை இலகுவில் மறந்து புதிய பிரச்சினைகளைப் பற்றியே கவனம் செலுத்துவது வரலாறு புகட்டும் ஒரு பாடம். அந்தப்பாடத்தை நன்கு படித்தவர் மகிந்த ராஜபக்ச. எனவே தேர்தலை எவ்வளவு காலம் பின்தள்ள முடியுமோ அவ்வளவு காலம் பின்தள்ளுவது மொட்டுக் கட்சிக்கு நன்மையளிக்கும்.
அதைவிட ஜனாதிபதியின் இன்னுமொரு நடவடிக்கையும் மொட்டுக் கட்சிக்குச் சாதகமாக அமையும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். அதுதான் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண விக்கிரமசிங்ஹ எடுத்த முனைப்புகள். சுதந்திர தினத்துக்கு முன்னர் அதனைத் தீர்ப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகள் இப்போது முற்றாகக் கைவிடப்பட்டுள்ள போதிலும் தமிழ் கட்சிகளின் மூன்று முக்கிய கோரிக்கைகளுக்கு அவர் அளிக்கப்போகும் பதிலும் சுதந்திரதின விழாவில் தமிழிலே தேசியகீதம் பாடவும் தமிழிலே உரையாற்றவும் அவர் இணங்கியமையும் சிங்கள பௌத்த இனவாதிகளின் வெறுப்பைத் தூண்டலாம். அந்த வெறுப்பினை மகிந்தவும் அவரது கட்சியும் தமக்குச்சாதகமாக மாற்றுவதற்குத் தயங்கமாட்டார்கள். எனவே தேர்தலை இப்போதைக்கு ஒத்திப்போடுவதே மகிந்தவுக்கு நல்லது.
அதற்காக விக்கிரமசிங்ஹவும் மகிந்தவும் கையாண்ட உத்திகளுள் ஒன்றுதான் தேர்தல் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதும் அது இப்போதுள்ள நிதி நெருக்கடியின் மத்தியில் கட்டுப்படியாகாது என்ற பிரச்சாரமும். இது ேவடிக்கையான ஒரு வாதம். உருப்படி இல்லாத 225 மானிடப் பிண்டங்களை பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் வைத்துக்கொண்டு அவர்களுக்குச் சம்பளமும் சன்மானங்களும் பாதுகாப்புப் பந்தோபஸ்துகளும் வழங்கும் செலவைவிடவா மக்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் ஒரு தேர்தலின் செலவு கட்டுப்படியாகாது? தேர்தல் ஆணையாளர் 5 பில்லியன் மட்டுமே செலவாகும் என்று தற்போது கூறியமை ரணில்- மகிந்த பொய்ப்பிரசாரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அது மட்டுமா? உள்ளூராட்சித் தேர்தல் தொகுதிகளை எண்ணாயிரத்திலிருந்து நாலாயிரமாகக் குறைக்க வேண்டுமென்றும் அதற்காக தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயக் குழு ஒன்றை நியமித்ததும் தேர்தலைப் பின்போடும் தந்திரங்களுள் ஒன்றே.
எல்லாவற்றிற்கும் மேலாக, இன்றைய அரசின் ஊழல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பொருளாதாரச் சீர்கேடுகளுக்கும் பரவலான கண்டனங்கள் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள நிலையில் சர்வதேச நாணய நிதி உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த ஆட்சியினரும் ஜனாதிபதியும் பொது மக்களின் புதிய ஆதரவைப் பெறவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு தோன்றியுள்ளதால் உள்ளுராட்சித் தேர்தலை தள்ளிப்போடாது விரைவில் நடத்தியே தீரவேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.
கோமாளிக் கூட்டணிகள்
தேர்தல் காய்ச்சல் சூடுபிடித்துள்ள நிலையில் எந்த வழியிலாவது இந்தத் தேர்தலில் வெற்றிகாண வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அனைத்துக் கட்சிகனையும் ஆட்கொண்டுள்ளது. எந்தக் கட்சியுமே தனித்துநின்று போட்டியிட்டு வெல்ல முடியாத ஒரு நிலையில் பெரும்பான்மையான கட்சிகள் கூட்டணிசேர முன்வந்துள்ளன. அவற்றுட் சில கோமாளிக் கூட்டுகளாகத் தோன்றியுள்ளன.
முதலாவதாக, ஜனாதிபதியின் ஐக்கிய தேசியக் கட்சியும் மகிந்தவின் மொட்டுக்கட்சியும் இணைந்த ஒரு கூட்டணி. இரு காதலர்கள் வாழ்ந்தாலும் மடிந்தாலும் ஒன்றாகவே வாழ்வோம் அல்லது மடிவோம் என்ற நிலைபோன்று இவை இரண்டும் சேர்ந்துள்ளன. இதனிடையில் அவ்வாறு நாங்கள் இணையவில்லை, மொட்டுக்கட்சி யானையின் சின்னத்தில் எங்குமே போட்டியிடாது என்ற ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ளது. சின்னம் யானையா மொட்டா என்பதல்ல பிரச்சினை. வசதிக்கேற்ப அல்லது கட்சிகளின் ஆதரவுக்கேற்ப அவை ஒவ்வொன்றும் போட்டியிடும் தொகுதிகளில் தேவையான சின்னத்தை உபயோகிக்கலாம். ஆனால் முக்கியம் அக்கட்சிகள் படுதோல்வி அடைவதைத் தவிர்ப்பதே. மொட்டுக்கட்சி படுதோல்வி அடைந்தால் அது நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்க முடியாது. அதன் ஆதரவில் பதவிவகிக்கும் ஜனாதிபதியும் தொடர்ந்து பதவியில் இருக்கவும் முடியாது. எனவே பொதுத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் விரைவில் நடத்தப்படல் வேண்டும் என்ற கட்டாயம் எழும். இவற்றைத் தவிர்ப்பதற்காகவே அவர்களின் கூட்டணி.
இந்தக் கூட்டணியை வீழ்த்துவதற்காகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உட்பட 12 குழுக்களைக் கொண்ட மக்கள் சுதந்திரக் கூட்டணி என்ற ஒரு கோமாளிகள் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களுள் பெரும்பாலானவர்கள் மொட்டுக் கட்சியின் மாஜி அங்கத்தவர்கள். அந்தக்கட்சியின் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் பதவி வகித்து அப்பதவிகளின் சுகபோகங்களை அனுபவித்தவர்கள். இவர்கள் ஒரு மூழ்கும் கப்பலில் இருந்து தாவிக் குதித்து இப்போது ஒரு தோணிக்குள் தஞ்சம் புகுந்திருப்பவர்கள். தேர்தலுக்குப் பின்னரும் இக்கூட்டணி நிலைத்திருக்குமா என்பது சந்தேகம். இவர்களின் ஒரே கோரிக்கை மக்களைக் காப்பாற்றுவது. ஆனால் யாரிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்பதுபற்றிய எந்த விபரமும் இதுவரை இல்லை. அதைப்பற்றி மேலும் சில குறிப்புகளை பின்னர் குறிப்பிடுவோம்.
இன்றுள்ள சூழலில் தனித்து நிற்பவை சஜித் தலைமையிலான தேசிய ஐக்கிய சக்தியும் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியுமே. அரசியல் என்பது பல வினோதங்களைக் கொண்டது. இவை இரண்டும் தனித்தே போட்டியிடுமா அல்லது ஒரு தேவைக்காக தற்காலிகமாவது இணையுமா என்பதை காலம்தான் உணர்த்தும்.
சிறுபான்மைக் கோமாளிகளின் கூட்டு
இன்றுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசியற் சூழலில் சிறுபான்மை இனங்கள் இரண்டுக்கும் ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு என்ற உண்மை செவிடனின் காதிலே ஊதிய சங்கு போலாயிற்று. தமிழர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத பட்சத்தில் முஸ்லிம்களுடன் அவர்கள் இணைவார்களென எதிர்பார்ப்பதும் மடமைதான். அதுதான் போகட்டும், இவ்வினங்கள் இரண்டுமே தமக்குள்ளேயே பல கூறுகளை உருவாக்கி அவை பின்னர் கூட்டணி அமைப்பது என்பது கோமாளித்தனமாகத் தெரியவில்லையா?
சம்பந்தர் தலைமையிலான தமிழர் கூட்டணியோ வழமைபோன்று பெரும்பான்மை இனக் கூட்டணிகளின் இறுக்கமான போட்டியினால் எந்தக் கூட்டணியும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்கைளை கைப்பற்றத் தவறும் பட்சத்தில், தமிழர் கூட்டணி அவர்களிடையே புகுந்து பேரம்பேசி அதிக நன்மைகளை தமது இனத்துக்காகப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலேயே அதன் அரசியல் பகடைகளை நகர்த்துகிறது. ஆனால் இந்த அரசியல் ஒரு செல்லாக் காசாக மாறிக்கொண்டு வருவதை தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் உணர்வதும் தெரிகிறது.
முஸ்லிம் அரசியல் பிரபலங்களின் கூட்டணி முயற்சிகளோ அதிலும் வேடிக்கையானவை. இவர்களின் கூட்டணி முயற்சிகளின் ஒரே நோக்கம் எந்தப் பிசாசுடன் சேர்ந்தாவது, எந்தச் சின்னத்தையோ கொடியையோ ஏந்தி, எந்தப் பொய்யையோ புழுகையோ பேசி முஸ்லிம்களைக் கவர்ந்து, அவர்களை மந்தைகளாக்கி, தமது ஆசனங்களைக் கைப்பற்றி, அமைச்சர்களாகவும் ஆளுனர்களாகவும் நியமிக்கப்பட்டு சொத்து சம்பாதிப்பதே. நாட்டைப்பற்றியோ தமது இனத்தைப்பற்றியோ எந்தக் கவலையும் இவர்களுக்கில்லை. இருந்திருந்தால் ஒரு முறையாவது ஒரு தலைவனாவது இந்த நாட்டின் அடிப்படைப் பிரச்சினை என்ன? அதனை எப்படித் தீர்ப்பது என்பது பற்றி எங்கேயாவது பேசியோ எழுதியோ இருக்கிறாரா?
அதுதான் போகட்டும். தமது இனத்தின் பிரச்சினைகள் என்ன என்ற ஒரு பட்டியலையாவது இவர்கள் இதுவரை தொகுத்ததுண்டா? இப்பிரச்சினைகளில் எவற்றை தமது இனத்துக்குள்ளேயே தீர்க்கலாம், எவற்றை சகோதர இனங்களுடன் உரையாடித் தீர்க்கலாம், எவற்றை அரசாங்கத்துடன் வாதாடித் தீர்க்கலாம், மேலும் எவற்றை உலக அரங்குக்குக் கொண்டுசென்று தீர்க்கலாம் என்ற விபரங்களாவது இவர்களிடம் உண்டா? இவர்களுக்குள்ளே இரண்டு மூன்று கட்சிகளை உருவாக்கிக்கொண்டு (அவற்றை கட்சிகள் என்பதை விட குழுக்கள் என்பதே பொருத்தமானது) வசதிக்கேற்ப ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுவதும் மீண்டும் ‘‘போன மச்சான் திரும்பிவந்தானடி புதுமணத்தோடல்ல புதுப்பணத்துடனே’’ என்ற தோரணையில் சேர்வதும் பின்னர் பிரிவதும் அவர்களின் அரசியல் கலையாகிவிட்டது. இதுவரை இந்தப் பிரபலங்கள் முஸ்லிம் சமூகத்துக்காகச் சாதித்தவை என்ன? முஸ்லிம் வாக்காளர்களே! இப்போதாவது இதனை அவர்களிடம் நீங்கள் கேட்கக்கூடாதா?
அமைப்பை மாற்றாமல் கூட்டணிகளால் ஆவதென்ன?
இன்றுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதி சிபார்சு செய்த பொருளாதார சீர்திருத்தங்களைத் தவிர வேறு எந்தவோர் உருப்படியான திட்டமும் எந்த ஒரு கட்சியிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் சுதந்திரக் கூட்டணியிடம் எந்த மாற்றுத் திட்டமும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அந்த நிதியின் சிபாரிசுகள் 2024 இலேனும் பயனளிக்கத் தொடங்கினாலும் அந்த மீட்பும் வளர்ச்சியும் நீண்டகாலத்தில் உறுதியானதாக இருக்கமாட்டாது. காரணம் இலங்கையின் அரசியல் பொருளாதார சமூக அடிப்படை அமைப்புகளும் அவற்றை இயக்கும் தத்துவங்களும் ஜனநாயக விழுமியங்களுடனும் சமத்துவம் மனுநீதி ஆகியவற்றின் பண்புகளுடனும் அமையவில்லை. இநத உண்மையை உணர்ந்தவர்களே அன்று காலிமுகத்திடலில் குழுமியிருந்து அமைப்பையே மாற்று என்று குரல் எழுப்பிய இளம் சந்ததியினர். அந்த அமைப்பு மாறாமல் எந்தக் கூட்டணியைச் சேர்த்து என்ன அரசியல் நடத்தி என்ன திட்டங்கள் வகுத்தாலும் அவற்றால் நாட்டின் பிணிகள் தீரப்போவதில்லை. அந்த மாற்றம் புதிய அரசியல் யாப்புடன் ஆரம்பமாக வேண்டும்.
இந்த அமைப்பு மாற்றக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி அதனை அமுல்படுத்த முன்வரும் எந்த அரசியல் கட்சியுடனோ குழுவுடனோ சிறுபான்மை இனங்கள் சேர்ந்தாலன்றி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.
கலாநிதி அமீரலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா
விடிவெள்ளி மலர்:15 இதழ்:10 திகதி-19/01/2023