போதைப் பொருள் பாவனை “அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்”

கடந்து சென்றுவிட்ட 2022 ஆம் ஆண்டு எமக்கு சவால்கள்மிக்க சோதனையான ஆண்டாக அமைந்திருந்தது. பொருளாதார நெருக்கடிகள், அத்தியாவசியப் பொருட்களின் வானுயர்ந்த விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம் என்பனவற்றுடன் போதைப்பொருட்களின் ஆதிக்கத்திலிருந்தும் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

2022 இல் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு,பொலிஸ் நிலையங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்புகளையடுத்து ஹெரோயின் 1548 கிலோ கைப்பற்றப்பட்டது. இந்த ஹெரோயின் தொகையுடன் 46,258 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த புள்ளிவிபரங்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு வெளியிட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 2090 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று நாடு எதிர்கொண்டுள்ள பாரிய அச்சுறுத்தல் போதைப்பொருள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஐஸ், ஹெரோயின் கொக்கேன் போன்ற போதைப்பொருள் காரணமாக நாட்டின் இளம் பரம்பரை மெது மெதுவாக அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மனநிலை மற்றும் சுய நினைவு பாதிக்கப்பட்டு வாழ்வதற்காகப் போராடும் ஒரு பரம்பரையையே நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் ஏனைய போராட்டங்களைவிட போதைப்பொருளுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

இலங்கை ஓர் அழகிய தீவு, ஒரு கேந்திர மையம். இந்நாட்டுக்கு போதைப்பொருளை கடத்தி வருவதில் அரசியல்வாதிகள் தொடர்புபட்டிருக்கிறார்கள் என தொடராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதன் மூலம் மாத்திரம் போதைப்பொருளுக்கு சமாதி கட்டிவிட முடியாது.போதைப்பொருள் இந்நாட்டுக்கு அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் கொண்டுவரப்படுவதென்றால் அவ்வாறான அரசியல்வாதிகளின் பெயர் மற்றும் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்தத் துணிவு எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துவதற்கு போதிய சாட்சிகள் இல்லையேல் வெறுமனே பேசிப்பேசியிருப்பதில் பயனில்லை. இதனாலே போதைப்பொருள் கடத்தல்காரர்கள் துணிவுடன் தங்கள் இலக்கை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

இலங்கைக்கு ஆகாய மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் இந்தப் போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுகின்றன. ஆகாய மார்க்கமாக கொண்டு வரப்படும் போதைப்பொருளை பாதுகாப்புப் பிரிவினரால் அல்லது போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் இலகுவில் கைப்பற்றிக்கொள்ள முடியும். கடல் மார்க்கமாக கடத்தப்படும் போதைப்பொருளை கைப்பற்றுவது கடினமாக இருந்தாலும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த ஏற்பாட்டினை முன்னெடுக்க முடியும்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கடத்தி கொண்டுவரப்படும் போதைப்பொருள் நடுக்கடலில் படகுகளுக்கு ஏற்றப்பட்டு கரையை நோக்கி எடுத்துவரப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலை சுற்றிவளைத்த பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு கடத்திக்கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களே சிக்கியுள்ளன. இந்தப் படகுகள் சில வேளை மீன்பிடிப் படகுகளாக இருக்கலாம். போதைப்பொருள் மூலம் பெருந்தொகை பணத்தை ஈட்டிக்கொள்ளலாம் என்பதை நோக்காகக் கொண்டே இப்படகுகள் இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு போதைப்பொருள் கடத்தலுக்கு மாத்திரம் சில படகுகள் பயன்படுகின்றன. அதனால் கடலுக்குச் செல்லும் படகுகள் மீன்பிடிப்பதற்காக செல்கின்றனவா? அல்லது போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக செல்கின்றனவா?- என்பதை கடற்படையினரும், பாதுகாப்புப் பிரிவினரும் பரிசோதனை செய்யவேண்டும். இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட பிரிவினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் மிகவும் சூட்சுமமாக திட்டமிட்டே மேற்கொள்ளப்படுகின்றன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் கடமை போதைப்பொருள் கடத்தலை சுற்றிவளைத்து அதனுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாகும். ஆனால் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு இந்தக் குற்றச்சாட்டின் கீழ் இப்பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இது வேலியே பயிரை மேயும் செயற்பாடாக அமைந்துள்ளதல்லவா? போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டிய பொலிஸ் அதிகாரிகளே அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கும்போது கடத்தலை முறியடிக்க முடியுமா?

போதைப்பொருளின் ஆதிக்கத்துக்குள் இந்நாடு முழுமையாக மூழ்கிவிடுவதற்கு முன்பு இதனைக் கட்டுப்படுத்துவது அதிகாரத்திலுள்ள அரசின் கடமையாகும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் இறுக்கமான சட்டங்கள் அமுலுக்கு வரவேண்டும். நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது பயங்கரவாதத்தினை அடியோடு ஒழிப்பது மாத்திரமல்ல, அரசாங்கம் நாட்டில் பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் ஒழிப்பதற்கு மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைகளை போதைப்பொருளை ஒழிப்பதற்கு பிரயோகிக்கவில்லை. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் அரசு மேற்கொண்டுள்ள கரிசனையை போதைப்பொருளை ஒழிப்பதில் காட்டவில்லை.

5000 மாணவர்கள் தடுப்பு நிலையங்களில்

போதைப்பொருளுடனான குற்றச்சாட்டுகளில் அதாவது குறிப்பாக போதைப்பொருள் பாவனையுடனான குற்றச்சாட்டுக்களின்கீழ் 5000 மாணவர்கள் தடுப்பு நிலையங்களில் இருக்கிறார்கள் என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இவர்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களென்றும் 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களெனவும் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு இளம் தலைமுறையினர் பெரும் எண்ணிக்கையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை நாட்டின் எதிர்காலத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளது என ஆருடம் கூறியுள்ளார்.

போதைப்பொருள் பாவனை, வர்த்தகம் மற்றும் சுற்றிவளைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இத்தகவல்களைக் கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு சமூக மட்டத்தில் ஹெரோயின் பாவனை குறைவடைந்து ஐஸ் ரக போதைப்பொருள் பாவனை சடுதியாக உயர்வடைந்தது. ஹெரோயின் போதைப்பொருளைவிடவும் ஐஸ் போதைப்பொருளின் விலை குறைவாக உள்ளதுடன் எமது நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சட்டம் கடந்த காலங்களில் அமுலில் இல்லாதிருந்தமை காரணமாகவே அதன் பாவனை அதிகரித்ததாகவும், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மரண தண்டனை சட்டம் அண்மையிலேயே இயற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியைத் தொடராத 600 பேர் போதைப்பொருள் பாவனையுடனான குற்றச் செயல்களுடன் கைது செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு 190 ஆகக் குறைவடைந்தது. கடந்த காலங்களில் போலன்றி தற்போது படித்த இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றச்செயல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு தண்டனைக்குள்ளாகியிருக்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தியடைந்த 2000 பேர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றச்செயல்கள் காரணமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த தொகை கடந்த 2021 ஆம் வருடம் 5000 ஆக உயர்வடைந்தது.

2020 ஆம் ஆண்டு 22 பட்டதாரிகள் போதைப் பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களினால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். 2021 ஆம் ஆண்டு 18 பட்டதாரிகள் போதைப்பொருள் பாவனை காரணமாக தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்கள்.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 30 முதல் 40 வயதுக்குட்படுத்தப்பட்டவர்களே போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டார்கள். ஆனால் தற்போது 22 முதல் 30 வயதுக்குட்பட்ட தரப்பினரே போதைப்பொருள் பாவனை காரணமாக கைது செய்யப்படுகிறார்கள். சிறைச்சாலைகளில் உள்ள இளம் வயதினரில் அநேகர் போதைப்பொருள் பாவனையுடனான குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சந்தன ஏக்க நாயக்க விளக்கமளித்துள்ளார்.

பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள் என்று கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய அண்மைக்காலமாக மாணவர்களின் புத்தகப்பைகள் பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. என்றாலும் மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனையிட வேண்டாம் என பொலிஸாருக்கு நாம் உத்தரவிட்டுள்ளோம். ஏனென்றால் இது பொலிஸாருக்கு உரிய கடமையல்ல. பாடசாலைகளே இது விடயத்தில் செயற்படவேண்டும். மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனையிட வேண்டும் என மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதைப்பொருட்களை முற்றாக ஒழிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புத் தேவை.

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை பொலிஸார் சோதனைக்கு ட்படுத்தாவிட்டாலும் பாடசாலைகளுக்கருகில் போதைப் பொருட்களுடன் எவரும் கைது செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முஸ்லிம் சமூகம்
போதைப்பொருளை ஒழிப்பதில், கிராமங்களுக்குள், நகரங்களுக்குள் போதைப்பொருள் நுழைவதை தடுப்பதற்கு முஸ்லிம் சமூகம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

முஸ்லிம் கிராமங்களில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் இது விடயத்தில் அதிக கரிசனை கொள்ள வேண்டும். கிராமங்களில் இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களை புனர்வாழ்வு நிலையங்கள் ஊடாக சமூகத்துக்கு பயனுள்ளவர்களாக மாற்றியமைப்பதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, பள்ளிவாசல் நிர்வாகங்கள், சமூக நல இயக்கங்கள் என்பன போதைப்பொருள் ஒழிப்பில் விரைந்து முன்னின்று செயற்பட வேண்டும்.

ஏ.ஆர்.ஏ. பரீல்

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter