எமது நாட்டில் தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆணொருவரும். பெண் ஒருவரும், சட்ட ரீதியாக விவாகப் பதிவொன்றினைச் செய்து கொள்ளாது மார்க்க ரீதியில் நிக்காஹ் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழலாம். முஸ்லிம்கள் மாத்திரமே இவ்வாறு வாழலாம். அது சட்டரீதியானது.
ஆனால் ஏனைய இனத்தவர்கள் கணவன், மனைவியாக வாழ்வதென்றால் விவாகப்பதிவு அத்தியாவசியமானதாகும். இலங்கையில் முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட் டுள்ள இச்சலுகையை எத்தனை வீதமானோர் நேர்மையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றால் அவ்வாறானவர்கள் ஒரு சிலரே என்று உறுதியாகக் கூறலாம். முஸ்லிம் ஆண்க ளுக்கு பலதார மணம் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளமை மற்றும் நிக்காஹ் கணவன், மனைவியாக வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை சமூகத்தில் குடும்பங்களில் பல பிரச்சினைகளுக்கு காரணமாய் அமைந்துள்ளது. இவ்விடயங்களுக்கென தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் கையாளப்படாமையே இதற்குக் காரணமாகும்.
அண்மைக்காலமாக விவாகப்பதிவினை செய்து கொள்ளாது மார்க்க ரீதியான நிக்காஹ் மாத்திரம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழும் குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி காதி நீதிமன்றங்களில் கால்பதித்துள்ளன. நிக்காஹ் மாத்திரம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்க்கை நடாத்திய ஒரு குடும்பத்தின் பெண்ணின் கதையே இன்றைய அவள் கதை,
அவள் கபைதா, வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவள். கணவன் அஹமட் வடமாகாணத்தைச் சேர்ந்தவர். சுபைதாவும் அஹமட்டும் காதி நீதிபதியைச் சந்திக்க நீதிமன்ற காரியாலயத்துக்கு வந்திருந்தார்கள். சுபைதாவின் கைகளில் கைக்குழந்தையொன்றைச் சுமந்திருந்தாள். அவளுடன் அவளது பெற்றோரும் இரு சகோதரர்களும் வந்திருந்தார்கள். ‘சேர் இவர் என்னை ஏமாற்றிவிட்டார். இவர் தனது மனைவியை ஒரு வருடமாக பிரிந்து வாழ்வதாகவும், அவளது நடத்தை சரியில்லாததால் அவளைவிட்டுப்பிரிந்து விட்டதாகவும், விரைவில் தலாக் கூறப்போவதாகவும் கதை கூறியே என்னை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியை தலாக் கூறியதும் விவாகப்பதிவு செய்து கொள்வதாகவும், அதுவரை வாழ்வதற்கு நிக்காஹ் செய்து கொள்வதாகவும் கூறியே என்னை திருமணம் செய்து கொண்டார். சுபைதா தனது கணவர் அஹமட் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டே இருந்தாள்.
அஹமட் அமைதியாக நீதிமன்ற காரியாலயத்தில் நீதிபதியின் முன்னே நின்றிருந்தார். அவள் தொடர்ந்தாள். ” நான் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றவள். ஒரு வருடமாக மாப்பிள்ளை தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவசரப்பட்டு எனது பெற்றோர் எங்கள் இருவருக்கும் நிக்காஹ் செய்து வைத்தார்கள். இவர் அவரது ஊரில் வியாபாரம் செய்வதால் மாதம் இரு தடவையே திருமணத்தின் பின் என்னிடம் வந்து சென்றார். வீடு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் ஊருக்குச் சென்று வருவார். ஊரில் இவர் சிறிய கடை யொன்று நடாத்தி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
சில மாதங்களில் நான் தாய்மையடைந்தேன். ஆனால் இவர் முதல் மனைவியிடமிருந்து தலாக் பெற்றுக்கொள்ளவில்லை. இன்னும் தலாக் வழக்கு முடியவில்லை என்று எங்களை ஏமாற்றி வந்தார். வைத்தியசாலையில் எனக்குப் பெண் குழந்தையொன்று கிடைத்தது. நாங்கள் விவாகப் பதிவு செய்து கொண்டிராத காரணத்தினால் எனது குழந்தையின் பிறப்புச் சாட்சிப்பத்திரத்தில் தந்தையின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்படவில்லை. வைத்தியசாலையில் பிறப்பை பதிவு செய்யும் பதிவு அதிகாரி திருமணத் தாட்சிப் பத்திரம் இல்லாது தந்தையின் பெயர் விபரங்களை பதிவு செய்ய முடியாது என மறுத்துவிட்டார். தந்தையின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்படாமலே பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டது.
எனது தந்தையும், சகோதரர்களும் அஹமட்டின் ஊருக்குச் சென்றார்கள். அவரது பகுதி காதிகோட்டுக்குச் சென்று விசாரித்தார்கள். அப்படி ஒரு தலாக் வழக்கு இல்லை என்று நீதிவான் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த எனது சகோதரர்கள் இவரைத் தாக்கினார்கள். இதன்போதேயிட்டார். இவர் உண்மையை வெளி தனது முதல் மனைவியுடன் தொடர்ந்து வாழ்வதாகவும் அதனாலேயே விவாகப்பதிவு செய்து கொள்ளாது என்னை நிக்காஹ் மாத்திரம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். எனது பெற்றோர் இவரை கோபம் தீருமட்டும் அடித்தார்கள். உடனடியாக என்னைத் திருமணப் பதிவு செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார்கள். இல்லையேல் கொலை செய்வதாகப் பயமுறுத்தினார்கள். எனது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்காகவே நாங்கள் எனது கணவரையும் அழைத்துக் கொண்டு உங்களிடம் வந்திருக்கிறோம்.
எனது பிள்ளையின் தந்தையினது பெயர் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் இல்லை. இங்கே பாருங்கள் என அவள் குழந்தையின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தை நீதிவானிடம் கையளித்தாள். எமது நாட்டில் முஸ்லிம் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் விவாகப்பதிவு செய்து கொள்ளாது கணவன் மனைவியாக வாழ முடியும் என சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டி ருந்தாலும் இவ்வாறு நிக்காஹ்வுடன் மாத்திரம் வாழ்பவர்கள் கட்டாயமாக விவாகப்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு விவாகப்பதிவு செய்து கொள்ளாததனாலே இவ் வாறான பிரச்சினைகள் உருவாகின்றன என்பதை காதி நீதிவான் விளக்கினார்.
குழந்தையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் தந்தையின் பெயர் பதிவு செய்யப்படுவது கட்டாயம். அதற்கு சட்டரீதியான விவாகப் பதிவு அவசியம். அதனால் அஹமட் சுபைதாவை இரண்டாம் தாரமாக சட்டரீதியாக விவாகப்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்திய காதிரீதிவான் இரண்டாவது திருமணத்திற்கான விண்ணப்பப் பத்திரத்தை அஹமட்டிடம் கையளித்தார்.
இரண்டாவது திருமணத்திற்கான அனுமதியை காதிநீதிவானிடம் பெற்றுக்கொண்டு விவாகப்பதிவு செய்து கொள்ளுமாறும் விவாகப்பதிவின் பிரதியை பாதிவாளர் திணைக்களத்தில் சமர்ப்பித்து குழந்தையின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் தந்தையின் பெயரை உட்புகுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
விடிவெள்ளி மலர்:15 இதழ்:10 திகதி-19/01/2023