தேர்தல் கால சோனக அரசியல்

கட்சிகளும் தேர்தல் நோக்குடைய அமைப்புகளும் தேர்தல் ஒன்று நெருங்கும் வேலையில் ஆட்டம்காணும். இலங்கை சோனக அரசியல் என்பது கட்சி தாவலுக்கு பெயர்போன தரப்பாக மாறியுள்ளது. அதிலும், முஸ்லிம் பெயர்தாங்கிக் கட்சிகள் இதில் ஒரு படி மேலே என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாத்தின் பெயரில் அரசியல் நடத்தி இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்துவதில் அவர்கள் கெட்டிக்காரர்கள்.

இங்கு இவர்களை இஸ்லாமிய அரசியல் என்று கூறமுடியாது. ஏணி வைத்தாலும் இவர்களுக்கு இஸ்லாமிய அரசியலுக்கும் எட்டாது. அதுபோக, இவர்களை முஸ்லிம் அரசியல் என்று சொன்னாலும் தப்பாகிவிடும். ஆக, சோனக அரசியல் என்று பொத்தம் பொதுவாக சொல்லிவிடலாம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிப்பின் பின்னர் கட்சித் தாவல்கள், கூட்டணிப் பேச்சுகள், வெட்டுகள் குத்துகள் என்று ஏராளமான கூத்துகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன இந்த சோனக அரசியலில்.

ஹிஸ்புல்லாஹ் மு.கா. வில் இணைவு

கிழக்கு மாகாண அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை தோற் றிவித்தது மு.கா.வில் ஹிஸ்புல்லாஹ் மீண்டும் இணைந்துகொண்ட விடயம். ஆக, காத்தான்குடி நகர சபையில் கடந்த முறை சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹிஸ்புல்லாஹ் தலை மையிலான குழுவினர் மு.கா.வுடன் இணைந்துகொண்டனர்.

இம்முறை மு.கா. வின் மரச்சின்னத்தில் அவர்கள் போட்டியிடப்போவதாக தெரியவருகிறது. இந்நிலையில் ஏற்கனவே, கடந்த தேர்தலில் போட்டியிட்ட மு.கா. உறுப்பினர்களும் தொடர்ந்து கட்சியில் நீடிக்கின்ற நிலையில், மு.கா. ஆதரவான, ஹிஸ்புல்லா சார்பான இரு குழுக்கள் காத்தான்குடி நகர சபை தேர்தலில் களமிறங்கி எதிரணி இல்லாத நகர சபை ஒன்றை உருவாக்கும் நிலைமையொன்றை அங்கு ஏற்படுத்த முயற்சிப்பதாக அறிய முடிகிறது.

கொழும்பு மேயர் வேட்பாளராக முஜிபுர்?

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை களமிறக்குவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து வருகிறது. என்றாலும் இதுவரையில் கட்சியால் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. பதவியிலிருந்து விலகியே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களமிறங்க வேண்டும். தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் அவரது பிரதிநிதித்துவ அரசியலில் இடைவெளி ஏற்படலாம். எனவே, தேர்தல் உறுதியாகும் வரை அவர் எம்.பி. பதவி விலகுவதை எதிர்பார்க்க முடியாது.

பைஸர் திடீர் விலகல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலை வராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அக்கட்சியில் வகித்த பதவிகளிலிருந்து விலகினார். அவர் தான் கட்சியிலிருந்து வெளியேறியமைக்கு எந்த காரணமும் தெரிவித்திருக்கவில்லை. என்றாலும், ஐ.தே.க. சார்பில் பைஸர் முஸ்தபா கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறங்கலாம் என்று கதை அடிபடுகிறது. அந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படாமையினால் பைஸரின் அடுத்த அரசியல் தீர்மானம் குறித்து பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

முஸர்ரபின் புது கட்சி

பசில் ஆதரவு அ.இ.ம.கா. பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம்.முஸர்ரப் புதிய கட்சியொன்றை பொறுப்பேற்றுள்ளார். அரச மொழிகள் ஆணைக்குழுவின் தவிசாளர் டீ.கலன்சூரிய தலைமையிலான தேசிய விடுதலை மக்கள் கட்சி தற்போது முஸர்ரப் வசமாகியுள்ளது. இக் கட்சி ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகித்தது. பின்னர் ஸ்ரீலங்கா பெதுஜன முன்னணியிலும் இணைந்திருந்தது.

தற்போது முஸர்ரப் அம்பாறை மாட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்குவதற்காக நெற்கதிர் சின்னத்திலுள்ள இக்கட்சியை தன்வசப் படுத்தியிருக்கிறார். பசிலின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இக்கட்சி அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்படுவதன் பின்னால் என்ன டீல் இருக்கிறதோ என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது.

நௌஷாத் பதவி விலகல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌஷாத் சம்மந்துறை பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து கடந்த வாரம் விலகியிருந்தார்.

இவர் சம்மந்துறை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஜீதின் மகனும் பொத்துவில் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஜீதின் மருமகனும் ஆவார். அரசியலில் அவருக்கென்று ஒரு கௌரவம் இருந்த நிலையில் பதவி விலகி ஒதுங்கிக் கொள்ளப் போகிறார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தாலும், அவர் முஸர்ரப் எம்.பி.யுடன் இணைந்து புதிய பயணத்தை தொடங்கப் போவதாக இன்னொரு கதையும் அடிபடுகிறது.

ஐ.தே.க.வில் ஜெமீல்

முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரான முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கல்முனை மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு தாவியிருந்த நிலையில் மீண்டும் தாய் கட்சியான மு.கா. வில் இணைந்து தற்போது அதிலிருந்தும் பிரிந்தே ஐ.தே.க.வில் இணைந்துகொண்டுள்ளார். தயா கமகேயுடன் சென்று இவர் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் இவ்வாறு மேயர் வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

மஸாஹிமும் அம்ஜாத்தும் ஜெமீலுடன் இணைந்தனர்

பேருவளை நகர பிதாவாக பதவி வகித்த மஸாஹிம் முஹம்மத், சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த அம்ஜாட் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துள்ளனர். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மஸாஹிம் முஹம்மத் சுயேட்சையில் போட்டியிட்டிருந்தார். இருந் தாலும் குறித்த சுயேட்சை அணிக்கு மில்பர் கபூர், பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் போன்றோரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். தேர்தலுக்கு பின்னர் இது பொதுஜன பெரமுன அணியாக வெளிப்பட்டதாகவே கூறவேண்டியுள்ளது. அத்தோடு, இம்முறை இவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து செயற்படவே எதிர்க்கட்சி தலைவரை சந்தித்துள்ளனர்.

தந்தையும் மகனும் ஒரே வட்டாரத்தில்

நீண்ட காலமாக பிரதேச சபை உறுப்பினராக பதவி வகித்த எம்.எம்.எம். சாதிக் பாத்தஹேவா ஹெட்ட பிரதேச சபை தேர்தலுக்காக பட்டியக வட்டாரத்தில் மீண்டும் இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட தயாராகியுள்ளார். இந்நிலையில், குறித்த வட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் மகன் போட்டியிட எதிர்பார்ப்பதாக தெரியவருகிறது.

டாக்டர் ரூமி ஐ.ம.ச.வில் இணைவு

தேசிய மருந்தகக் கூட்டுத் தாபன முன்னாள் தலைவர் டாக்டர் எம்.எச்.எம். ரூமி ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

ஹெலிகொப்டரிலிருந்து குதித்தார் மைத்திரி

மைத்திரி, விமல் மற்றும் டலஸ் ஆகியோரின் தலைமைத்துவத்திலான ஹெலிகொப்டர் சின்னத்தில் ‘சுதந்திர மக்கள் முன்னணி’ என்ற கூட்டணி கடந்த வாரம் அமைக்கப்பட்டது. எனினும், இந்த கூட்டணியில் அங்கம் வகிப்பதற்கு கட்சியின் மத்திய குழுவில் அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டை சுதந்திரக் கட்சியிலுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் கிளப்பிவிட்டனர். இதனால் சர்ச்சை உருவானது. விமல், கம்மன்பில போன்றோர் அங்கம் வகிக்கும் கூட்டணியில் சு.க. இருக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் சு.க. பெரும்பாலான மாவட்டங்களில் தனித்து போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தது. இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இந்த இனவாத கட்சிகள் அங்கம் வகித்தபோது இந்த பிரதேச சபை உறுப்பினர்கள் எங்கிருந்தனரோ?

முஸ்லிம் கட்சிகளுக்கு நோ சொன்ன ஹெக்டர்

புத்தளம் மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலின்போது முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து தராசு சின்னத்தில் தனிப்பயணம் மேற்கொண்டன. இந்நிலையில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கு நோ சொல்லிவிட்டாராம்

புத்தளம் தொகுதி ஐ.ம.ச. அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமி. ஆக, இம்முறை புத்தளம் நகர சபை தேர்தலில் மு.கா., அ.இ.ம.கா. என்பன தத்தமது சின்னத்தில் கேட்க ஐ.ம.ச. தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இப்படி முஸ்லிம் பகுதிகளில் தேர்தல்கால அரசியல் சூடுபிடித்திருக்கின்றது. எனினும் தேர்ததல் நடக்குமா இல்லையா என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை. தேர்தல் நடக்குமாயின் இந்த பரபரப்பு நீடிக் கவே செய்யும். உள்ளூர் தேர்தல் பந்தயத்தில் எந்தக் குதிரையை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதை மக்கள் சில வாரங்கள் பொறுத்திருந்தே தீர்மானிக்க வேண்டும்.

விடிவெள்ளி மலர்:15 இதழ்:10 திகதி-19/01/2023

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter