பயனற்ற முயற்சி
எதிர்வரும் தேர்தல்களுக்கு தகுதிவாய்ந்த வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என்ற தேடலில் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால் அதற்குமுன் ஒரு முக்கிய உண்மையை அனைவரும் உணர்தல் நல்லது. அதாவது, பண மூடை, பொருளாதாரச் சீரழிவு, அரசியல் தில்லுமுல்லுகள், சமூகச் சீர்கேடுகள் என்றவாறு இந்த நாட்டைப் பீடித்துள்ள பிணிகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு விபரிக்கலாம். அவை ஒவ்வொன்றுக்குமுள்ள தீர்வுகள் எவை என்பன பற்றியும் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் முன்மொழிந்துகொண்டும் தர்க்கித்துக்கொண்டும் இருக்கலாம். ஆனால் அப்பிணிகளுக்கெல்லாம் அடிப்படையாக ஒரு நாசகாரக் கிருமி இந்நாட்டை கருவறுத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அந்தக் கிருமியை அடையாளங்கண்டு அதனை ஒழிக்காமல் ஆட்சியாளர்களை மாற்றுவதிலே எந்தப் பயனும் இல்லை என்பதையும் எல்லாச் சமூகங்களும் உணர்தல் வேண்டும். அந்த அழிவு ஏற்படாமல் வேட்பாளர் தேடல் ஒரு பயனற்ற முயற்சியாகும்.
இளந்தலைமுறைக்கு ஓர் அஞ்சலி
சுமார் ஏழரை தசாப்தங்களுக்குப் பிறகு அந்தக் கிருமியை இனங்கண்டு அதனை அழிக்குமாறு ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்திய பெருமை இந்த நாட்டின் இளம் தலைமுறையினரையே சாரும். அந்தத் தலைமுறையின் பிரதிநிதிகள்தான் கடந்த வருடம் பங்குனி மாதம் காலிமுகத்திடலிலே குழுமிநின்று ஒரே குரலில் “அமைப்பையே மாற்று” என்று கோஷம் எழுப்பினர். அந்த அமைப்பே அவர்களின் பார்வையில் நாட்டைக் கருவறுக்கும் ஒரே கிருமி எனத் தெரிந்தது. ஆனால் அதனை மாற்றும் திறனும் அதற்கான உடன்பாடும் நாடாளுமன்றத்தில் வீற்றிருந்த 225 பிரதிநிதிகளுக்கும் இல்லையென அவர்கள் உணர்ந்ததனாலேதான் “225 வேண்டாம்” என்ற இன்னொரு கோஷத்தையும் முன்வைத்தனர். அந்த இளைஞர்களுக்கு முதலில் அஞ்சலி செலுத்தியபின்னர், அந்த அமைப்புத்தான் என்ன என்பதை விளக்குவோம்.
தோற்றம் வேறு உள்ளடக்கம் வேறு
அந்த அமைப்பின் பன்முக வடிவங்களுள் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சமூக கலாசாரப் பன்மைத்துவம் என்பன பிரதானமாக அடங்கும். ஆனால் அவை ஒவ்வொன்றினதும் தோற்றம் வேறு, உள்ளடக்கம் வேறு. தோற்றத்திலே அரசியல் என்பது ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும் அதன் உள்ளடக்கத்தில் அது பெரும்பான்மை இனத்தின் ஆதிக்க ஆட்சியாகவே இருக்கிறது. பொருளாதாரம் தோற்றத்தில் சந்தைச் சக்திகளின் உருவாக்கம் என்றாலும் உள்ளடக்கத்தில் அரசியல்வாதிகளினதும், பண முதலைகளினதும், மாபியாக்களினதும் சிருஷ்டியாகத் திகழ்கிறது. நிர்வாகத்துறை அனைத்தும் நீதித்துறை உட்பட தோற்றத்திலே திறமைக்கும் தகைமைக்கும் முதலிடம் வழங்கி சுயாதீனமாகச் செயற்படுவதுபோல் தெரிந்தாலும் உள்ளடக்கத்தில் அது அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக மாறியுள்ளது. இறுதியாக, பார்வைக்கு இலங்கை ஒரு பன்மைச் சமூகமாகத் தெரிந்தாலும் திரைமறைவில் அந்தப் பன்மையை ஒழித்து, பெரும்பான்மை இனத்தின் தனிச்சமூகமாக மாற்றும் திட்டங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. இத்தனைக்கும் அடிப்படையாக நாட்டின் அரசியல் யாப்பு அமைந்துள்ளது. அந்த யாப்பின் ஒரே அரசியல் தத்துவம் சிங்கள பௌத்த பேரினவாதம். இத்தனையையும் உள்ளடக்கிய ஓர் அமைப்புத்தான் இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் தொடங்கி இற்றைவரை இந்தப் புண்ணிய பூமியை தினந்தினம் சீர்குலைத்து வந்துள்ளது. அதன் கைங்கரியங்களுள் சிலவற்றை மட்டும் கீழே பட்டியலிடுவோம்.
இனநாயகத்தின் திருவிளையாடல்கள்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவிலிருந்து கூலிகளாக வெள்ளைக்காரத் தோட்ட முதலாளிகளால் வரவழைக்கப்பட்டு அந்தக் கூலிகளின் உழைப்பாலும் வியர்வையாலும் ஏன் உதிரத்தாலும் பெருந்தோட்டங்களை உருவாக்கி வளர்த்து இந்த நாட்டின் அன்னியச் செலாவணியைப் பெருக்கிக்கொடுத்த ஒரு சமூகத்தை சுதந்திரம் கிடைத்தவுடனேயே கள்ளத்தோணிகளெனப் பட்டஞ்கூட்டி அவர்களை பிரஜாவுரிமையற்ற குடிகளாக்கி விலாசமே இல்லாத ஒரு வெறும் மக்கள் கூட்டாக மாற்றிய இந்த ஆட்சி அமைப்பை ஜனநாயகம் என்பதா இனநாயகம் என்பதா?
அதே இனநாயகம்தானே அடுக்கடுக்காக தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளைத் தூண்டிவிட்டு 1983ல் ஓர் இனஒழிப்பு இயக்கத்தையே உண்டுபண்ணி அது கடைசியாக உள்நாட்டுப் போர்வரை சென்று இன்று பொருளாதாரத்தையே வங்குரோத்தாக்கியுள்ளது? அதே இனநாயகம்தானே 2009க்குப் பின்னர் முஸ்லிம்களையும் அன்னியரெனப் பட்டஞ்சூட்டி அவர்களுக்கெதிரான கலவரங்களையும் திட்டமிட்டு நடத்தி அந்த இனத்தையும் நாட்டைவிட்டே துரத்துவதற்குத் தூபம் போட்டது? இந்த இனநாயகத்தால் நாடு இழந்தவற்றை தொகைவாரியாகக் கணக்கிடுவது இயலாத காரியம். ஆனால் அந்த இழப்பை இன்றைய பொருளாதார நெருக்கடி உலகுக்கே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறதே. அது மட்டும் போதாதா?
இவைமட்டுமா? இனநாயகத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற பணமோசடிகளும் பதுக்கல்களும் ஊழல்களும் அனந்தம். உதாரணத்துக்கு, அவற்றுள் சுமார் 53 பில்லியன் டொலர் பணத்தை உள்நாட்டுப் பணமுதலைகள் வெளிநாட்டு வங்கிகளிலும் வரிகட்டாத் துறைமுகங்களிலும் ஒழித்து வைத்துள்ளனர் என்று ஓர் அமைச்சர் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அதே அளவான ஒரு தொகைக்கு நாடு அன்னியரிடம் கடன்பட்டு இன்று பிச்சைப்பாத்திரமேந்தி யாசகனாகத் திரிகிறது என்பதை எவ்வாறு சரி காண்பதோ?
இவ்வாறு இனநாயகத்தின் திருவிளையாடல்களை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் அந்த இனநாயகம்தான் இலங்கையின் ஜனநாயகம் என்ற வடிவத்தில் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, இன அமைதியையும் கெடுத்து, நாட்டையே கடனாளியாக்கி இன்று அன்னிய சக்திகளின் கெடுபிடிக்குள் சிக்கவைத்துள்ளது. ஆட்சியாளர்கள் மாறினர். ஆனால் ஆட்சியின் உள்ளடக்கம் மாறவே இல்லை. அந்த அமைப்பையே மாற்றினாலன்றி இந்த நாட்டுக்கு விடிவில்லை என்பதை உணர்ந்த ஓர் இளம் சமுதாயம் இப்போது உருவாகியுள்ளது. அதன் தோற்றத்தைத்தான் காலிமுகத்திடல் கடந்த ஆண்டு விளம்பரப்படுத்தியது. அதன் விளைவென்ன?
அமைப்புக்குள் ஓர் அரசியல் புரளி
2022 பங்குனி மாதம் காலிமுகத்திடலில் ஆரம்பமான சுமார் ஆறு மாத கால இளைஞர் எழுச்சி 2011இல் கைரோ நகரின் தஹ்ரிர் சதுக்கம் கண்ட இளைஞர் எழுச்சியின் ஒரு சிறு வடிவமே. ஆனாலும் அவை இரண்டினதும் கோஷங்களின் ஒரே தத்துவம் ஆட்சி அமைப்பு மாறி அனைத்து மக்களும் கௌரவத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ வழி வகுக்கப்படல் வேண்டும் என்பதே. பழைய அமைப்பை மாற்றாமல் அந்த வாழ்வு அமையாது என்பதை அவ்விளைஞர்களின் எழுச்சித் தாகம் உலகுக்கு எடுத்துக் கூறியது. ஆனால் நடந்ததென்ன? பழைய அமைப்புக்குள்ளேயே ஓர் அரசியல் புரளியை உண்டுபண்ணியபின் அதே அமைப்பு அதன் கோரவடிவத்தை வெளிக்காட்டியபின் இன்னும் தொடர்கிறது.
இலங்கையின் அமைப்புக்குள் ஏற்பட்ட அரசியல் புரளி ஒரு ஜனாதிபதியை நாட்டைவிட்டு விரட்டியபின் இன்னொரு பழைய முகத்தைக்கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ளது. கோத்தாபய ராஜபக்சவின் ஆசனத்தில் ரணில் விக்கிரமசிங்ஹ. இந்தப் பழைய முகம் பழைய அமைப்பையே பாதுகாக்க எடுத்த முதல் நடவடிக்கை மாற்றம் வேண்டும் என்றவர்களை பாதுகாப்புப்படை கொண்டு அடக்கி அவர்களின் தலைவர்களையும் சிறைக்குள் தள்ளியதாகும்.
கைரோவிலே எகிப்தின் ஜனாதிபதி 800 உயிர்களை கொன்று குவித்தபின் பழமையை அரங்கேற்றினார். இலங்கையிலோ அப்படியான ஒரு கொடுமையைச் செய்வதற்குத் தயங்கமாட்டேன் என்ற உறுதியுடன் பழைய நாடகத்தையே புதிய கவர்ச்சியுடன் விக்கிரமசிங்ஹ அரங்கேற்றியுள்ளார். உதாரணமாக, பொருளாதாரப் பிணி அகல சர்வதேச நாணய நிதியின் ஆதரவு வேண்டுமென்றார். உள்நாட்டு வரிகளை உயர்த்தி அரசாங்கச் செலவுகளில் சிக்கனம் காணவேண்டுமென்றார். பொருளாதாரப்பிணி ஒழிப்புப் போராட்டத்துக்கு இளைஞர்களின் உதவி இன்றியமையாதது எனக் கூறி அவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டினார். இப்போராட்டத்துக்கு நாடே ஒன்றுபட வேண்டுமெனப் பறைசாற்றி எல்லா இனங்களையும் ஒன்றுபடச் சொன்னார். தமிழர்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கவென்று அதற்கான ஆலோசனைகளைப் பெற அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார். இவை எல்லாம் நாடகத்தின் கவர்ச்சிகரமான வடிவங்கள். ஆனால் அதன் கதாபாத்திரங்களும் கதையின் இனநாயக்கருவும் பழையவையே. தோற்றத்தில் மாற்றம். உள்ளடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. வரிகளை உயர்த்தியவர் அந்த வரிகளை எவ்வாறு ஊழலற்ற முறையில் திரட்டுவது என்பதுபற்றி ஏதாவது கூறினாரா? இந்த நாடகத்தின் வெற்றிக்காக இளைஞர் சமுதாயத்துக்குப் பச்சைக் கொடி காட்டிய ஜனாதிபதி இளவல்களின் அமைப்பு மாற்றக் கோரிக்கையை வார்த்தை ஜாலங்களால் மட்டும் சரிகண்டுவிட்டு அதனை செயற்படுத்தத் தயங்குவதேன்? இளைஞர்களை விலை கொடுத்து வாங்கவா? அமைப்பை மாற்றாமல் இலங்கையை, அதுவும் 2048இல், ஏற்றுமதி வளம் கண்ட முதலாம் உலக நாடாக மாற்றுவேன் என்று தனது 73ஆவது வயதில் கூறியது யாரை ஏமாற்றவோ? சிலரை எக்காலமும் ஏமாற்றலாம், எல்லாரையும் சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லாரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது. அதிலும் இந்த இளைஞர்கள் நிச்சயம் ஏமாறப் போவதில்லை.
முஸ்லிம் தலைமைத்துவத்தின் உப நாடகம்
இனநாயகத்தின் சூழிகளுடன் இணைந்து நீந்தி அரசியல் அந்தஸ்துடனும் சுயபொருளாதார வளமுடனும் கரையேற முனைபவர்களே முஸ்லிம் தலைவர்கள். சிங்கள பௌத்த, தமிழர் இனநாயகத்துக்குப் பதில் முஸ்லிம் இனநாயகமேயன்றி இனநாயகத்தையே ஒழித்தல் அல்ல என்ற மந்திரத்தை சதா உச்சரித்துக்கொண்டு அதற்காகத் தனியாகவோ கூட்டாகவோ தேர்தல் களங்களுக்குள் குதிக்க ஆயத்தமாகின்றனர் முஸ்லிம் பிரபலங்கள். கடந்த வருடம் அமைப்பையே மாற்று என்ற கோஷத்துடன் முஸ்லிம் இளைஞர் உட்பட அத்தனை இளவல்களும் காலிமுகத்திடலில் குவிந்தபோது எந்த ஒரு முஸ்லிம் அரசியல் பிரபலம் அங்கு சென்று அவ்விளவல்களைச் சந்தித்து உரையாடி சில ஆறுதல் வார்த்தைகளையேனும் கூறியது? அதுதான் போகட்டும், நாடாளுமன்றத்திலேயும் ஒரு சில வார்த்தைகளையேனும் அவ்விளவல்களின் கோரிக்கைக்கு ஆதரவாக எந்த முஸ்லிம் தலைவன் பேசினான்? அவர்களின் மௌனத்துக்குக் காரணம் அவர்கள் எல்லாருமே மதில் பூனைகள் அல்லது காற்றிலே பறக்கும் கடதாசிகள். மதில் பூனை இரைகாணும் பக்கம் பாயும். கடதாசி காற்றிலே பறந்து எங்கேயும்போய் எதனுடனும் ஒட்டிக்கொள்ளும். இதுதான் முஸ்லிம் தலைமைகளின் உப நாடகம். இப்போது பள்ளிவாசற் சம்மேளனங்கள் என்ற ஒரு புதிய அணி உருவாகி அதன் ஆதரவில்லாமல் எந்த அரசியல் முடிவுகளுக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தலை சாய்க்கக் கூடாதென்ற ஒரு நிபந்தனை உலவுவதாக அறிகிறோம். ஆனால் அமைப்பையே மாற்ற வேண்டுமென்ற ஓர் இளைஞர் அணியுடன் இந்தச் சம்மேளனங்கள் இணையுமா?
அமைப்பை மாற்றும் பேரணி
இன்று வளரும் இளந் தலைமுறையை சரியாகப் புரிந்துகொள்வது மூத்த தலைமுறையின் முக்கிய பணி. நீண்ட தலைமுடியை வளர்த்து, தாடியுடன் கிழிந்த காற்சட்டையும் அணிந்து, உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்ட ஆண் இளவல்களும், ஜீன்ஸ் கால் சட்டையுடனும் ரீசேட்டுடனும் பச்சையும் குத்திக் கொண்டு நடமாடும் பெண் குமரிகளும் முதியோர் பார்வைக்கு அலங்கோலங்களாகத் தோன்றினாலும் அந்த இளந் தலைமுறையின் அபிலாஷைகளும் கனவுகளும் சமூக ஈடேற்றங்காணத் துடிப்பன என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். உலக அரங்கிலே அவர்களின் கோரிக்கைகளின் தாக்கங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இயற்கையின் காலநிலை மாற்றங்கள் பற்றிய புரிந்துணர்வுக்கும், சாதி, இன, மத, நிற பேதமற்ற அரசியல் அமைப்புக்கும், பெண்ணினத்தின் உயர்வுக்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்துக்கும் ஓயாது குரல் கொடுக்கும் ஒரு பேரணியாக இந்தத் தலைமுறை மாறியுள்ளதை வாழ்க்கையின் பின்னேரத்தை அனுபவிக்கும் சந்ததியினர் உணர்தல் வேண்டும்.
அந்த இளம் சமுதாயத்தின் புதிய உலக காவியமொன்றின் இலங்கை அத்தியாயத்தையே காலிமுகத்திடல் இளைஞர்கள் அன்று எழுதத் தொடங்கினர். அவர்களின் பேனாவை பழமைவாதிகள் பிடுங்கி வீசினாலும் அவர்களின் சிந்தனையும் கை விரல்களும் மடிக்கணினியோடும் கையடக்கத் தொலைபேசியோடும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அவர்களின் பேரணியின் புதிய அத்தியாயத்தை இப்புதிய வருடம் வெளிப்படுத்தும். அமைப்பை மாற்றாமல் ஆட்சியாளர்களை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை விரைவில் நாடே உணரும்
கலாநிதி அமீரலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா
விடிவெள்ளி: மலர்-15 இதழ்-09 பக்கம் 06 திகதி 12/01/2023