காலி கோட்டையில் 1924 ஆம் ஆண்டு பஹ்ஜதுல் இப்ராஹிமிய்யா அரபுக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு நூறு வயதாகி முதிர்ச்சி கண்டுவிட்டது. எதிர்வரும் 19 ஆம் திகதி அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது.
அரசியல் கலப்பற்ற சமூகத்தின் நலன்கருதி ஆரம்பிக்கப்பட்டதே அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை. தஃவாப் பணிகளோடு சமூக நலன்சார்ந்த சேவைகளை தன்னகத்தே கொண்டு ஒரு பேரியக்கமாக மார்க்க அறிஞர்களின் மையமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
அன்று சாதாரண ஓர் அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டு ஸ்தீரமான இடமின்றி வளர்ச்சிப்படிகளை எட்டியுள்ள இவ்வமைப்பு நாடெங்கும் கிளை பரப்பி வியாபித்துள்ளது. இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேச மட்டத்திலும் அங்கீகாரம் பெற்ற ஓர் இயக்கமாக தஃவாப் பணிகளோடு சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கி வருகிறது.
கடந்த மாத தரவுகளின் படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் நாடளாவிய ரீதியில் சுமார் 8300 பேர் அங்கத்துவம் பெற்றுள்ளனர். இவ் எண்ணிக்கை மாதாந்தம் அதிகரித்து வரலாம் என ஆருடம் கூறப்படுகிறது. கடந்த கால புள்ளிவிபரங்களைக் கொண்டு இவ்வாறு அனுமானிக்கப்படுகிறது.
நாட்டில் 25 மாவட்டங்களிலும் 163 கிளைகள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன. உலமா சபையின் நிர்வாக சபையில் 56 பேர் அங்கம் பெற்றுள்ளனர்.
உலமா சபை
உலமா என்ற வார்த்தை ஆலிம் என்ற அரபுச் சொல்லின் பன்மையாகும். ஆலிம் என்றால் கற்றறிந்தவர் என பொருள்படும். ஆலிம் என்பவர் மஸ்ஜிதுகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவரோ அல்லது கற்பித்தலுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டவரோ அல்லர். மாறாக மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் இஸ்லாத்தை நடைமுறைவாழ்வில் பின்பற்றி ஏனையோர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவரே ஆலிம்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஆரம்பிக்கப்பட்டு பத்து தசாப்தங்கள் நிறைவடைந்துள்ளன. இச்சபை ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை பன்முகப்படுத்தப்பட்ட சேவைகளைச் செய்து வருகிறது.
எமது நாட்டில் உலமா சபை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 1919 இல் இந்தியாவில் இது போன்றதொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதேபோன்று 1923 இல் தென் ஆபிரிக்காவிலும் மார்க்க அறிஞர்கள் சபை உருவாக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்நாட்டு விடயங்களைப் பூர்த்தி செய்யும் வகையிலும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்திலும் உருவாக்கப்பட்டதாகும்.இதில் அங்கம் வகிப்போரில் 90%மானோர் உள்நாட்டில் கற்றுத்தேர்ந்தவர்களாவர். இச்சபை கடந்த 100 வருட காலமாக ஆலிம்கள், பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்தோருக்கு ஆன்மீக ரீதியான வழிகாட்டல்களையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதோருக்கும் லெளகீக ரீதியான பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக முஸ்லிம்களின் மத்தியில் ஐக்கியத்தையும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் சகவாழ்வைக் கட்டியெழுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
உலமா சபை தனது செயற்பாடுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் தீவிர அரசியல் ஈடுபாட்டை முற்றுமுழுதாக தவிர்த்துள்ள போதும் தேவைக்கேற்ப கொள்கைகளை வகுப்பதில் சிந்தனா ரீதியாகவும் நெருக்கடியான காலங்களில் வழிகாட்டல்களை வழங்குவதன் மூலமும் அதனது அரசியல் பங்களிப்பை செய்து வருகிறது. இச்சபை இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் 2001 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும்.
சமூகசேவை
நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்கள், வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களின்போதெல்லாம் இச்சபை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து இனமக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போதும் இவ்வாறான பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
சமூக சேவை மற்றும், ஆன்மிகம் சார்ந்த பல குழுக்கள் உலமா சபையின் கீழ் இயங்கிவருகிறது.
ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு, கல்விக்குழு, மக்தப் புனரமைப்புக்குழு, பத்வாக்குழு, பிரசாரக்குழு, பிறைக்குழு, வெளியீடு மற்றும் ஆய்வுக்கான குழு, இளைஞர் விவகாரக்குழு, மகளிர் விவகாரக்குழு, ஊடகக்குழு, இஸ்லாமிய பொருளீட்டலுக்கான மதியுரைக்குழு, ஆலிம்கள் விவகாரக்குழு, கிளைகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு என பல்வேறு குழுக்கள் இயங்கிவருகின்றன.
கல்வி மற்றும் இளைஞர் விவகாரம்
இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசாரத்தின் வளர்ச்சிக்காகவும், முஸ்லிம் பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்றி வைக்கவும், அவற்றின் கல்வித்தரங்களை உயர்த்தவும் இச்சபை தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டிலுள்ள அரபு மத்ரஸாக்களின் கல்வித்தரங்களைக் கண்காணித்து வருவதுடன் அவற்றுக்கிடையிலான ஒருமித்த பாடத்திட்டமொன்றினையும் அமுல் செய்திருக்கிறது.
இச்சபையின் கல்விப்பிரிவு அனைவருக்கும் கல்வி என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலைகளின் பெளதீக அபிவிருத்தி மற்றும் மாணவர்களது மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களை இனங்கண்டு அவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகளையும் வழங்கி வருகிறது.
போதைப் பொருள் ஒழிப்பு கருத்தரங்குகள், தீவிரப் போக்கற்ற நடுநிலையான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகள், தொழில் ரீதியான வழிகாட்டல் போன்றவற்றை இளைஞர் விவகாரப் பிரிவு நடத்தி வருகிறது.
மகளிர் விவகாரம்
பெண்களை மதிக்குமாறு வலியுறுத்தும் இஸ்லாம் அவர்கள் விடயத்தில் நியாயமாக நடக்க வேண்டும் என்றே கட்டளையிடுகின்றது. இதனடிப்படையில் பெண்மைக்கு மாசு ஏற்படா வண்ணம் கல்வி தேடல் உட்பட நடைமுறைச் சாத்தியமான அனைத்து வகையான உரிமைகளையும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகிறது. இதனடிப்படையில் இஸ்லாம் வலியுறுத்தம் உரிமைகளை பெண்களுக்கு உறுதி செய்யும் வகையிலான அனைத்து முன்னெடுப்புகளையும் உலமா சபை மேற்கொண்டு வருகிறது.
பத்வா
அன்றாடம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்கத் தீர்ப்பினை வழங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இயங்கி வருகிறது. இஸ்லாத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்ப்பளிக்க நீதிமன்றங்களும் உ லமா சபையின் பத்வாவை வேண்டி நிற்கின்றன. நாளாந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் எழுத்து மூலமும் பத்வாக்கள் கேட்கப்படுகின்றன. அத்தோடு உலமா சபையின் தலைமைக் காரியாலயத்துக்கும் மக்கள் பத்வாக்கள் கேட்டு நேரடி விஜயம் மேற்கொள்கின்றனர்.
மாதாந்தம் பத்வாக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்குழுவில் அங்கம் வகிக்கும் உலமாக்கள் தலைமையகத்தில் ஒன்றுகூடி சிக்கலான, சர்ச்சைக்குரிய விடயங்களை ஆழமாக ஆய்வு செய்து பத்வாக்களை எழுத்து மூலம் வெளியிடுகின்றனர்.
பிரசாரக் குழு
வழி தவறியவர்களின் பொய்யான பிரசாரங்களிலிருந்து முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்குடன் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தும் பணியில் பிரசாரக் குழு ஈடுபட்டு வருகிறது.
பாவங்களிலிருந்து பொது மக்களைப் பதுகாப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் இங்கு வழங்கி வருகிறது. சமுதாயத்தின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்துப் பிரசாரங்களையும் தேவைக்கேற்ப முன்னெடுத்து வருகிறது. வழி தவறிய கூட்டங்கள் மேற்கொள்ளும் தவறான மற்றும் பொய்யான பிரசாரங்களை விட்டும் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பது இக்குழுவின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். மேலும் ஹஜ், ரமழான் காலங்களில் தேவைப்படும் விஷேட வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறது.
தீவிரவாதம் வேண்டாம்
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக உலமா சபை பல ஊடக அறிக்கைகளையும், பிரகடனங்களையும் வெளியிட்டுள்ளது.
மேலும் சில அல்குர்ஆன் வசனங்கள் பற்றிய தவறான விளக்கங்களுக்குத் தெளிவுரையாக இஸ்லாமோபோபியா என்ற தொகுப்பொன்றையும் பிரசுரித்துள்ளது.
மத தீவிரவாதம் இஸ்லாமிய போதனைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை உலமா சபை வெளியிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி முஸ்லிம் பெயர் தாங்கிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை உலமா சபை வன்மையாக கண்டித்துள்ளது. நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்கும் சகோதர இன மக்களோடு தொடர்ந்தும் சகவாழ்வினைப் பேணவும் உலமா சபை பாரிய முயற்சிகளை மேற்கொண்டது.
இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கும் போதனைகளுக்கும் முற்றிலும் மாற்றமான இக்கொடூரச் செயல் நாட்டில் குழப்பத்தை உருவாக்க முயற்சித்துவரும் குழுவினர் முஸ்லிம்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் என உலமா சபை உறுதியாகத் தெரிவித்துள்ளது.
அவதானமாக செயற்படுங்கள்
அண்மைக்காலமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சமூகத்தை தீவிரவாதத்திலிருந்தும் காப்பாற்றுவதற்கு முன்னின்று செயற்படுகிறது.
தேவையான மார்க்க அறிவை சரியான, நம்பகமான மூலங்களில் இருந்தும், தகுதி பெற்ற மார்க்க அறிஞர்களிடமிருந்தும் மாத்திரம் பெற்றுக்கொள்ளும்படி உலமாசபை மக்களை அறிவுறுத்தியுள்ளது. நீங்கள் அல்லது உங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்கும் மார்க்க அறிவை மேம்படுத்துவது தொடர்பான வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் அரச அனுமதியுடன் பொது இடங்களில் நடைபெறுவதையும் அவற்றை ஏற்பாடு செய்பவர்கள் முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்து கொண்டுள்ள அமைப்புகள்தான் என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும் பொதுமக்களைக் கோரியுள்ளது. உரை நிகழ்த்துபவர்கள் முறையாக கற்றுத் தகைமை பெற்றவர்களா என்பதையும் அவர்கள் மக்கள் மத்தியில் நன்மதிப்புப் பெற்றவர்களா என்பதையும் ஊர்ஜிதம் செய்து கொள்ளும்படியும் கோரியுள்ளது.
பிரார்த்திப்போம்
நாட்டின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமரின் பங்களிப்புடன் 100ஆவது அகவையைக் கொண்டாடவுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு அல்லாஹ் மேலும் வலுசேர்க்க வேண்டும் என நாமனைவரும் பிரார்த்திப்போம். சமூகத்தை நேர்பாதையில் பயணிக்கச் செய்ய வேண்டியது உலமா சபையின் பொறுப்பாகும். இப்பொறுப்பினை நேர்த்தியாக முன்னெடுத்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான கால கட்டம் உலமா சபைக்கும், இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் சவாலாக மாறியுள்ளமையை உலமா சபை கவனத்தில் கொள்ள வேண்டும். சவால்களை வெற்றி கொண்டு சமூகத்தைக் காப்பாற்றி நேர்வழியில் பயணிக்கச் செய்ய வேண்டியது உலமா சபையே.
அதற்கான பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் உலமா சபையின் 100 வருட கொண்டாட்டத்தில் பகிர்ந்து கொள்வோம்.
ஏ.ஆர்.ஏ. பரீல் விடிவெள்ளி மலர் 15 இதழ் 09 (12/01/2023) பக்கம் 05