சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் நல்ல உற்சாகத்தை தந்திருக்கிறது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்து கொண்ட நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (10) ஓட்டமாவடி, காவத்தமுனையில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஹிஸ்புல்லாஹ்வின் மீள் இணைவு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் பலமடங்கு வெற்றிகளை ஈட்டுவதற்கான ஒரு நல்ல ஆரம்பமாக அமைகிறது. அத்தோடு, எந்தக் கட்சிகளிடமிருந்தும் அல்லது சுயேட்சைக் குழுக்களிடமிருந்தும் கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தல் இன்றைய தினம் வெளிவந்துள்ளமை எங்களைப் பொறுத்தமட்டில் முற்றிலும் சட்ட விரோதமான விடயமாகவுள்ளது.
எதிர்வரும் தேர்தலை மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்ட அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது என்பதை முதலில் நாங்கள் சொல்லியாக வேண்டும்.
இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்காக வங்குரோத்து நிலைக்கு வந்திருக்கும் அரசாங்கத்தின் மிக மோசமான நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பாக ஏனைய கட்சி தலைவர்களோடு இணைந்து பலத்த கண்டனத்தையும், எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்க இருக்கிறோம்.
உடனடியாக அரசு இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து விடுபடவேண்டும். அதை மீளப்பெற வேண்டும் என்று நாங்கள் அழுத்தம் செலுத்த விரும்புகிறோம். குறிப்பாக அமைச்சரவைப் பத்திரத்தில் என்ன காரணங்களை முன்னிட்டு இவ்வாறான ஒரு நடவடிக்கையை அரசாங்கம் எடுத்து இருக்கிறது என்பது சம்பந்தமாக ஒரு விளக்கத்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறோம். அதேநேரம் அது எவ்வாறாக இருந்தாலும் கூட கடந்த ஒருசில வாரங்களாக ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் இந்த விவகாரம் சம்பந்தமாக சொல்லி வந்த செய்திகள் இந்த நடவடிக்கைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். (TM1212023)