ஐ.எஸ். பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டில் பரப்ப முயற்சி
‘குராஸான் குரல் சஞ்சிகை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை
இலங்கையில் மீண்டும் ஐ.எஸ். அடிப் படைவாதத்தைப் பரப்பும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான இலத்திரனியல் சஞ்சிகை ‘குராஸான் குரல்’ (Voice of Khurasan) சமூக வலைத்தலங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் விரைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பொலிஸ்மா அதிபரைக் கோரியுள்ளது.
Voice of Khurasan எனும் இலத்திரனியல் சஞ்சிகையின் பிடிஎப் பிரதியொன்றும் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட ஆபத்தான நிலைமை தொடர்பில் விரிவாக விசாரணை நடாத்தி குறிப்பிட்ட இலத்திரனியல் சஞ்சிகையை வெளியிட்டவர்கள், மற்றும் விநியோகிப்பவர்கள், சம்பந்தப்பட்டவர்களை இனங்கண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உலமா சபை பொலிஸ்மா அதிபரைக் கோரியுள்ளது.
அகில இலங்கை ஜம்இய் யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகார பிரிவின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரத் நவுபல் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தின் பிரதிகள் கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவுக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதே வேளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் ஆகியோர் கையொப்பமிட்டு உலமாக்களுக்கும் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் மற்றும் சமூக தலைவர்களுக்கும் வேண்டுகோளொன்றினையும் முன்வைத்துள்ளனர்.
குறிப்பிட்ட வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சமீப காலத்தில் ஆங்கில மொழியில் இஸ்லாத்துக்கு முரணான தீவிரவாத மற்றும் பயங்கரவாத சிந்தனைகளை வரவேற்கக் கூடியதாகவும் அதனை மேற்கொண்டவர்களை புகழக்கூடிய விதத்திலும் ஓர் சஞ்சிகை (இலத்திரனியல்) பரவி வருவதை அவதானிக்க முடிகிறது. சில தீய சக்திகள் இதனைப் பரப்பி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவதற்கும், முஸ்லிம்களும், இஸ்லாமும் இலங்கைக்கு எதிரானவர்கள் என சித்தரிக்கவும் முயற்சிக்கிறார்கள். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான காலகட்டத்தில் எமது சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்பது எமது கடமையாகும் அதனால் இந்த நாட்டில் எமது முன்னோர்கள் முஸ்ஸிம் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு மேற்கொண்ட பங்களிப்புகள் போன்று இன்றும் நாம் பங்களிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
இஸ்லாத்துக்கு முரணான இஸ்லாத்தின் பெயரில் பகிரப்படும் கருத்துக்களிலிருந்து அனை வரும் மிக ஜாக்கிரதையாகவும், ஒற்றுமையாகவும் செயற்பட்டு நாட்டுக்கும் மனித சமுதாயத்துக்கும், இஸ்லாத்துக்கும் பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப உதவி புரியுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித்திடம் விடிவெள்ளி வினவியது. அவர் பின்வருமாறு தெரிவித்தார். ‘2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெறுவதற்கு முன்பு அடிப்படைவாதம் தொடர்பில் உலமா சபை உளவுத்துறைக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் அறிவித்தது. ஆனால் பாதுகாப்பு பிரிவினரால் இத்தாக்குதலை நிறுத்த முடியாது போனது.
இம்முறையும் ஐ.எஸ். தீவிரவாதம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளோம். இதன் பின்னணியில் உள்ளவர்களை இனங்கண்டு சட்டத்தின்முன். நிறுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும் என்றார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி மலர் 15 இதழ் 09 (12/01/2023) பக்கம் 01