முஸ்லிம் வேட்பாளர்களுக்குரிய அடிப்படைத் தகைமைகள் என்ன?

உள்ளூராட்சி மன்றம், மாகாண சபை, மற்றும் பாராளுமன்றத்தில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் வேட்பாளர்களுக்குரிய அடிப்படைத் தகைமைகள் தொடர்பான ஓர் ஆரம்ப வரைவை தேசிய தளத்தில் பணியாற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள், சமூகத் தலைமைகள், ஆய்வாளர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட சுயாதீனமான ஒரு குழு தயாரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 30 சிவில் அமைப்புக்களின் பிரதிநிகள், 300 புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களதும் கருத்துக்களை உள்ளடக்கிய குறித்த வரைவு ஆவணம் 2022 டிசெம்பர் மாதம் 07 ஆம் திகதி கொழும்பு மன்டரினா ஹோட்டலில் நடைபெற்ற அமர்வில் மக்கள் பிரகடனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்குரிய அடிப்படைத் தகைமைகள், பண்புகள், பெறுமானங்கள், சமூக அர்ப்பணிப்பு, தேசிய மற்றும் சமூகப் பொறுப்புக்கள் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய ‘ஒரு சிறந்த அரசியல் வேட்பாளரின் தகைமைகள்’ எனும் இந்தப் பிரகடனம் ‘மன்டரினா பிரகடனம்’ என அழைக்கப்படுகிறது.

காத்தான்குடியில் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்….

அதனைத் தொடர்ந்து 2022.12.19 ஆம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் மன்டரினா பிரகடனத்தை அமுல்படுத்துவதில் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக அனைத்து உறுப்பினர்களும் .ெதரிவித்தனர். இது தொடர்பான அடுத்தகட்ட நகர்வாக தேசிய அரசியல் கட்சிகளுடனும், தேசிய அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றம், மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பின்வரும் அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது:

  • ஆண் – பெண் இருபாலாரும் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • இரண்டாம் நிலை (க.பொ.த –உ /த) கல்வித் தகைமையைக் கொண்டவராக இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு துறையில் டிப்ளோமா மட்ட அல்லது உயர் கல்வி (பட்டம்) பெற்றிருப்பது பயனுடையது.
  • நேர்மையுடன் கூடிய சிறந்த பண்புகளை வெளிக்காட்டும் ஆற்றலுடையவராக இருத்தல் வேண்டும்.
  • குற்றவியல் வன்செயல்களுக்காக தண்டிக்கப்பட்ட பதிவுகள் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.
  • மதுபானம், போதைப் பொருள், சூதாட்டம், கசினோ, பந்தயம் கட்டல் உள்ளிட்ட சமூக விரோத வியாபாரங்களில் தொடர்புபடாமல் இருத்தல்.
  • தனிப்பட்ட வருவாய் தொடர்பாக பொறுப்புக்கூற இயலுமானவராகவும் தனது சொத்துக்கள் பற்றிய விபரத்தை வெளிப்படையாக பிரகடனம் செய்ய ஆயத்தமானவராகவும் இருத்தல் வேண்டும்.
  • தன்னார்வ சேவை சங்கங்கள், அமைப்புக்கள், சமய நிறுவனங்கள், தொண்டு நிறுவன ஈடுபாடு ஊடாக மக்கள் மேம்பாட்டிற்காக உளத்தூய்மையுடன் சேவைசெய்யும் ஆற்றல் உள்ளவராக இருத்தல்.
  • நாட்டில் மற்றைய இன சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றும் ஆற்றலுடையவராக இருத்தல்.

அரசியல் பிரதிநிதித்துவம் என்பது மக்களுடனான ஒரு உடன்படிக்கையாகும் (பைஅத்). எனவே தகுதியானவர்கள் மக்கள் அங்கீகாரத்துடன் களமிறக்கப்படுமிடத்து நாட்டில் நீதியும் நியாயமும் நிலைநிறுத்தப்படும். அதேபோல அரச சொத்துக்களும் தொழில் முயற்சிகளும் பொறுப்புடன் நெறிப்படுத்தப்படும். இந்தப் பின்னணியில் அனைத்து வேட்பாளர்களும் தமது பொருத்தப்பாடு மற்றும் தமது தகைமைகளை தாமாகவே முதலில் பரீட்சித்து, அதனை குறித்த பிரதேச சமூக அமைப்பின் ஊடாக உறுதிசெய்துகொள்ள வேண்டும். அவ்வாறு அடிப்படை தகைமை உறுதிசெய்யப்பட்ட வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அல்லது சுயாதீனக் குழுக்கள் மீள்மதிப்பாய்வுக்கு உட்படுத்தி உரிய முறையில் வெளிப்படைத் தன்மையுடன் புள்ளிகளை வழங்கி தகைமைமிக்க வேட்பாளர்கள் .ேதர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்வதே இந்த மன்டரினா பிரகடனத்தின் நோக்கமாகும்.

மிகவும் தகுதியான வேட்பாளர்களை தெரிவுசெய்யும் சுயமதிப்பாய்வு வினாக்கொத்தானது அடிப்படைத் தகைமைகள், கல்வித் தகைமைகள், தொழில்வாண்மை மற்றும் அனுபவம், ஆளுமை திறன்கள் மற்றும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எனும் பிரதான அங்கங்களை உள்ளடக்கியுள்ளது.

TEAM 2023 எனும் பெயரில் இணைந்து செயற்படும் இந்த சமூக ஆர்வலர் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர், முள்ளாள் வெளிநாட்டு தூதுவர்களான ஒமர் காமில் மற்றும் ஜாவிட் யூசுப், போர்ட் சிட்டி ஆணைக்குழு அங்கத்தவர் மற்றும் சர்வதேச கணக்காய்வாளர் றியாஸ் மிஹ்ழார், முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் நாஜிம், தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த மிஸ்வர் மகீன், அப்சல் மரிக்கார், முஹம்மது நவாஸ், சஹீட் சங்கானி, பங்குச் சந்தை நிபுணர் இம்தியாஸ் புஹாருதீன், சிரேஷ்ட சட்டத்தரணி நத்வி பஹாவுதீன், மருத்துவத்துறை கலாநிதியும் விஷேட வைத்திய நிபுணருமான றுவைஸ் ஹனீபா, சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஆதில் ஹஷீம், சமூக ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களான நவாஸ் முஹம்மத், ஹில்மி அஹமட், வை. ஐ. எம். ஹனீஸ், றூமி மற்றும் எம். அஜிவதீன் ஆகியோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

தேசிய நலனை இலக்காகக் கொண்டு ஒரு சிறிய குழுவினால் கட்சி அரசியலுக்கு அப்பால் முன்னெடுக்கப்படும் இந்தப் பணியின் வெற்றி தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவு மற்றும் சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் பூரண உத்துழைப்பிலேயே தங்கியுள்ளது

விடிவெள்ளி 05/01/2023

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter