தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலய வரலாறு

கண்டி மாவட்டத்தில் அக்குறணைப் பிரதேசத்தில் எழில் கொஞ்சும் கிராமமான தெலும்புகஹவத்தைக் கிராமத்தில் கம்பீரமாய் அமையப்பெற்று ஊருக்கே பெயரையும் புகழையும் ஈட்டித்தரும் கலைக்கூடமே தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயம். இங்கு சுமார் 580 மாணவர்கள் கல்வி கற்பதுடன் 21 ஆசிரியர்கள், 03 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், 02 கல்விசாரா ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இப்பாடசாலையானது 1959 ஜுன் 19ஆம் திகதி 38 மாணவர்களுடன் ஓர் ஓலைக் குடிசையில் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையின் உருவாக்கத்தில் ஈடுபாடு காட்டிய பலரில் M.M.H முஹம்மத், H.M.M முபாரக், M.J.M..தாஹா ஆகியோர் பெயர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பாடசாலையின் முதல் அதிபராக H.M.M.இஸ்மாயீல் கடமையாற்றியதைத் தொடர்ந்து பாடசாலையை முன்னெடுத்துச் சென்ற அதிபர்களான மர்ஹும் அல்ஹாஜ் S.L.A ரஸீத், I.ஹாஜிதீன், N.M.M.இஸ்ஹாக், M.I.S.முஹம்மத், ஹாஜியானி M.S.S.நஸீமா, K..அஸீஸ், M.C.M.ரிபாய், S.M.ஹம்ஸி ஆகியோரின் சேவை பாராட்டத்தக்கது. அவர்களைத் தொடர்ந்து இப்பாடசாலையின் வரலாற்றில் 1973 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதன் முதலில் சித்தியடைந்த மாணவரான இறுதியாக அதிபராகக் கடமையாற்றிய S.H.M.ரியால்தீன் இப்பாடசாலையைப் பொறுப் பேற்றார். இவரது சிறந்த தலைமையின் கீழ் கடமையாற்றும் ஆசிரியர்களின் அயராத சேவையின் மூலம் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயம் கட்டுகஸ்தோட்ட வலயத்துக்கு புகழ் சேர்க்கும் ஒரு பாடசாலையாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

பலரின் கல்விக் கண்களைத் திறந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் பல கல்விமான்களைத் தந்துள்ள இப்பாடசாலையில் கற்றுத் தேர்ந்தவர்களில் 16 பேர் வைத்தியர்களாகத் திகழ்வதுடன், பல பொறியியலாளர்கள், சட்டத்துறையினர், கணக்கியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் காணப்படுகின்றனர். நாட்டின் புகழ் பெற்ற வைத்தியர்களில் ஒருவரான வைத்தியக் கலாநிதி கமால் அப்துல் நாஸர், ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் நவ்ஸர், விவசாயத்துறை ஆராய்ச்சியாளர் M.A.C.M.மஸீன் போன்றவர்களையும் இப்பாடசாலையே எமது சமூகத்திற்களித்துள்ளது.

இடைக்காலத்தில் ஏற்பட்ட நிர்வாக நெருக்கடிகளால் மிகவும் பின்தள்ளப்பட்டு, இக்கிராமப் பகுதி மாணவர்கள் அயற்கிராமப் பாடசாலைகளை நாடிச் செல்லும் காலகட்டத்திலே 2009 மே மாதம் 25ஆம் திகதியன்று, அதிபர் S.H.M.ரியால்தீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் சகல துறைகளிலும் முன்னேறி வரும் இப்பாடசாலையானது தற்போது ஆரம்ப பாடசாலை என்ற வகையில் மாணவர்களின் ஆரம்பக் கல்வியில் பாரிய அடைவுகளைக் கண்டு வருவதுடன் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளிலும் தொடர்ச்சியான சிறந்த முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றது.

இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான விளையாட்டுப் போட்டிகள்,தமிழ்தினப் போட்டிகள்,மீலாத்தினப் போடடிகள் மற்றும் ஆங்கில தினப் போட்டிகளிலும் வலய, மாகாண,தேசிய மட்டங்களில் பங்குபற்றி சிறந்த அடைவுகளைப் பெற்று வருவது விஷேட அம்சமாகும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்படும் ‘எங்கள் பாடசாலை’ என்ற நிகழ்ச்சியிலும் எமது பாடசாலை ஒரே வருடத்தில் இரு முறை பங்குபற்றியதுடன் எமது மாணவிகளின் கஸீதா நிகழ்ச்சி ரமழானில் 15 தடவைகளுக்கும் மேல் ஒலிபரப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதி அதிபராகக் கடமையாற்றிய S.H.M.ரியால்தீன் பாடசாலையைப் பொறுப்பேற்ற காலப்பகுதியில் இப்பாடசாலையில் முதன் முதலாக Automatic Bell System மற்றும் Indoor Sound System என்பன ஏற்படுத்தப்பட்டன. அத்துடன் இக்காலப் பகுதியிலே பாடசாலை நுழைவாயில்,பாதுகாவலர் அறை,மைதானம் புனர்நிர்மாணம்,புதிய கட்டடம் போன்றனவும் பெறப்பட்டதுடன், நீண்ட காலக் குறையாகக் காணப்பட்ட காரியாலய சிற்றூழியர், பாடசாலைப் பாதுகாவலர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.பாடசாலையின் சகல வகுப்பறைகளுக்கும் மின்சார மற்றும் குடிநீர் வசதிகள், பாடசாலைக்கான wifi இணையத்துடன் கூடிய தொலைபேசி வசதிகள் என்பன “We Care” அமைப்பின் உதவியுடன் பெறப்பட்டு பாடசாலைக் காரியாலயமும் நவீன வசதிகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது.

இவ்வாறாக கல்வி நடவடிக்கைகளை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான பௌதிக வளங்களைப் பெற்று பாடசாலைச் சூழலை சிறந்த கல்விச் சூழலாக மாற்றுவதற்கு அதிபர் S.H.M.ரியால்தீன் பெரும் பங்காற்றினார் என்பது மிக முக்கியமான விடயமாகும். அந்த வகையில் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் ஆக்கப்பூர்வமான உடலியற் செயற்பாடுகளுக்குப் பொருத்தமான அழகிய விளையாட்டு முற்றமொன்றும் ஒழுங்கமைக்கப்பட்டது.

எமது பாடசாலையானது எமக்கென்று தனித்துவமான தளபாட வசதிகளுடன் பிள்ளைகள் விரும்பக் கூடியவாறான கற்றல் சாதனங்களைப் பயன்படுத்தும் கவர்ச்சிகரமான பிள்ளை நேய வகுப்பறைகளாக வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும். இப்பாடசாலையின் பெரும்பாலான வகுப்பறைகள் ஆரம்பத்தில் தொலைக்காட்சி வசதிகளுடன் ஒழுங்கமைக்கப்பட்டு தொடர்ந்து Projector வசதிகளும் இணைக்கப்பட்டன.

தற்போதைய நிலையில் சில வகுப்பறைகள் நவீன முறையிலான Smart Learning வகுப்பறைகளாக மாற்றப்பட்டு, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்க விளைவுகளைக் கண்டு வருகின்றன.

இவற்றுக்கு மேலதிகமாக அண்மையில் Room to Read நிறுவனத்தின் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்ட முன்னெடுப்பினை எமது பாடசாலையும் பெற்றுக் கொண்டது. மாணவர்கள் மத்தியில் சிறந்த வாசிப்புக் கலாசாரத்தை உருவாக்குவதற்கு எமது பாடசாலையிலும் பிள்ளை நேய நூலகமொன்று அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பது மற்றுமோர் அடைவாகும்.

இப்பாடசாலையானது தனது வரலாற்றில் படிப்படியான பல முன்னேற்றங்கள் அடைவுகளைக் கண்டு வரும் நிலையில் தற்போது துரித வளர்ச்சி கண்டு தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதியில் கடும் போட்டி நிகழுமளவிற்கு உயர் நிலையை அடைந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

மேலும், எமது பாடசாலையானது, சுமார் 19 வருட காலமாக மூடப்பட்டிருந்த வட்டகொட சிங்கள ஆரமப் பாடசாலையை மீண்டும் 2019 ஆம் ஆண்டு திறந்து வைப்பதில் பெரும் பங்கற்றியதுடன்,அதன் விசாலமான பெயர்ப் பலகை மற்றும் பல பொருட்களையும் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்கியதுடன் அன்று தொடக்கம் 2022 வரை தேவையான சகல தளபாடங்களையும் வழங்கி வருகின்றது.

இன நல்லிணக்கத்தை மிக முக்கியமானதாகக் கருதி வரும் எமது பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் அதிபர் மற்றும் தக்வா ஜும்ஆப்பள்ளி தலைவர் ஆகியோர் தீகல்ல பௌத்த வித்தியாலயத்திற்கு பரிசுப் பொருட்களுடன் சினேகபூர்வ விஜயமொன்றினை மேற் கொண்ட போது அங்கு இரு பாடசாலை மாணவர்களும் பல சினேகபூர்வ நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டனர்.

எமது பழைய மாணவர்களின் உதவியுடன் அக்குறணை ஸியா வைத்தியசாலைக்கு அவர்களின் அத்தியாவசியத் தேவைகளாக இருந்த சில மருத்துவ உபகரணங்களை வழங்கி பாடசாலைக்கும் வைத்தியசாலைக்குமான தொடர்பை வலுப்படுத்தியது.

எமது ஆசிரியர் குழாத்துடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், தக்வா பள்ளி நிர்வாகம், We Care நலன்புரிச் சங்கம் Faizal Foundation ஆகிய அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் தனவந்தர்கள் பெற்றோர்கள், நலன் விரும்பிகள்,ஆகியோரின் பங்களிப்பு இப்பாடசாலையின் வளர்ச்சியில் பாராட்டத்தக்கது.

சமூக வளர்ச்சியில் தலைசிறந்தவர்களை உருவாக்கி வரும் இப்பாடசாலையானது ஆண்டாண்டு காலம் நிலைத்தோங்கி புகழ் பெற்று சிறந்த எதிர்கால தலைமுறையினை உருவாக்கி பாரினில் உயர்ந்திட எல்லாம் வல்ல இறையோன் அருள் புரிவானாக.

2022.12.31 அதிபர் ஜனாப் S.H.M ரியால்தீன் இப்பாடசாலைக்கு தமது சேவையை செவ்வனே செய்து விட்டு ஓய்வு பெற்ற நிலையில், 2023.01.01 ஆம் திகதி இது வரை இப்பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய திருமதி R.F.ரியாஸா அதிபராக நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இப்பாடசாலையின் மாணவர் தொகைக்கேற்ப வகுப்பறை வசதிகள் இல்லாமை நீண்ட காலமாக பெரும் குறைபாடாகவே இருந்தது. இந்நிலையில் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக அரசியல் வாதிகளையும் மற்றும் பலரை நாடியும் விடை காண முடியாத நிலையில் K.G.H.அஹமட் ஷஹீட்,அவரின் புத்திரர்களான A.S.M இல்யாஸ், மர்ஹும் A.S.M.ரம்ஸீன், A.S.ரியாஸ் முஹம்மத் ஆகியோர் எமக்குத் தேவையான வகுப்பறைக் கட்டடம் ஒன்றின் தரைமாடியை கூடிய விரைவில் முடித்துத்தர முன்வந்தனர். இன்றைய தினம் அதற்கான அடிக்கல் நாட்டு விழா மிக விமர்சையாக நடைபெறுகின்றமை எமது பாடசாலை சமூகத்திற்கான வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது. இவ்வாறு இக் குடும்பம் எமது பாடசாலைக்கும் கிராமத்திற்கும் முழு நாட்டிற்கும் பணத்தாலும் பொருளாலும் பாரிய உதவிகளை செய்து வரும் அன்னாரின் குடும்பத்திற்கு அல்லாஹ் மென்மேலும் அருள் புரிவானாக!

தினகரன் 03/01/2023

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter