அடிப்படைவாதத்தினை தடுக்கவே சவூதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

எமது நாட்டில் அடிப்படைவாதம் பரவுவதைத் தடுப்பதற்காகவே நாங்கள் சவூதி அரேபியாவுடன் 2014 முதல் பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்துள்ளோம். நான் சவூதி அரேபியாவுக்கும் விஜயம் செய்தேன்.

புரியாணி சாப்பிடுவதற்கும், வட்டிலாப்பம் சுவைப்பதற்கும் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என பொதுபல சேனா அமைப்பில் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். சிங்கள ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியொன்றிலே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் செவ்வியின் போது தெரிவித்ததாவது; சவூதி அரேபியாவுடன் நாம்
தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு 2014 ஆம் ஆண்டிலிருந்து சவூதி தூதுவராலயத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் சில விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தினோம். அதாவது இந்த அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு எவ்வாறான பதில்களைத் தேடிக் கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடினோம். கொள்கை அடிப்படையில் எங்களுக்குள் பிரச்சினை இருந்தாலும் சவூதி நாட்டுடன் எமக்குப் பிரச்சினைகள் இருக்கவில்லை.

நாட்டினையும் அரசாங்கத்தையும் மக்கள் பிரித்துப்பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் சவூதி அரேபியாவுடன் பரந்துபட்ட அளவில் பேச்சு வார்த்தை நடத்த எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள், நாங்களோ, எமது நாட்டின் பாதுகாப்பு பிரிவோ நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு எதிர்வரும் 15, 20 வருடங்களில் இந்த அடிப்படைவாதம் உலகை ஆட்கொள்ளும் என்று ஊகித்து அதற்கான திட்டங்களை வகுத்துள்ளார்கள்.

எவ்வாறு உலகை அடிப்படைவாதம் ஆட்கொள்ளவுள்ளது என்பது தொடர்பிலான கருத்துக்களை எம்முடன் பரிமாறிக் கொண்டார்கள். அடிப்படைவாதம் தொடர்பில் நீங்களும் அவதானமாக இருங்கள் என்று கூறினார்கள்.

சில நாடுகள் (அந் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடமுடியாது.) உதாரணமாக துருக்கி, கட்டார் போன்ற நாடுகள் அடிப்படைவாதத்தைப் போஷிப்பதற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றன. இது அவர்களின் சமயக்கொள்கையாக இருக்கலாம். அடிப்படைவாதம் என்பதை சிலவேளை அறியாதிருக்கலாம் என்றாலும் இந்த செயல்களின் விளைவுகள் எல்லாம் சவூதி அரேபியாவின் மீதே சுமத்தப்படுகின்றன என்றார்கள்.

இவ்வாறான நிலைமைகளை அவர்கள் எமக்குத் தெளிவுபடுத்தினார்கள். நாங்களும் எங்கள் நாட்டின் நிலைமையை தெளிவுபடுத்தினோம். ஒரு சில சமயக்குழுக்களின் நூல்கள் சிங்களம், தமிழ், ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டினோம். அவர்கள் வியப்புக்குள்ளானார்கள். அவர்களது நாட்டினைச் சேர்ந்த தனவந்தர்கள் சிலரே அவர்கள் கூட அறியாத நிலையில் இவ்வாறான நூல்களின் வெளியீடுகளுக்கு உதவி செய்திருக்கிறார்கள் என்றார்கள். இவ்வாறு அவர்களது நாட்டின் தனவந்தர்களால் வழங்கப்பட்டு வரும் நிதிஉதவிகளைத் தடைசெய்வதாக உறுதியளித்தார்கள்.

நாங்கள் எமது நாட்டில் இவ்வாறு அடிப்படைவாதம் வளருவதை நிறுத்திக் கொள்வதற்காகவே அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். அன்றி புரியாணி சாப்பிடுவதற்கும் வட்டிலாப்பம் சாப்பிடுவதற்குமல்ல.

அவர்கள் எமக்குப் பணம் தரவுமில்லை. சங்கிரில்லா ஹோட்டலில் நடந்த சந்திப்புகளில் கோப்பி மாத்திரம் அருந்தியுள்ளோம். இந்தச் சந்திப்புகள் சங்கிரில்லாவில் நடந்ததா சவூதியில் நடந்ததா என்று சிலர் கதைபரப்பினார்கள்.

நாம் ஒருபோதும் முஸ்லிம்களின் சமயம் தொடர்பான விடயங்களை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறவில்லை. ஹலால் சாப்பிடாதீர்கள் என்று கூறவில்லை. எமக்கு சாப்பிட ஏற்பாடு செய்யாதீர்கள் என்றே கூறினோம். இது அவர்களது சமய உரிமை. ஏன் நாம் தடை செய்ய வேண்டும். இந்த விடயம் எமக்கு எதிராகவே சமூகமயப்படுத்தப்பட்டது.

தான் சவூதி அரேபியாவுக்கும் சென்றேன். கழுத்தை வெட்டுவார்கள் என்று நான் போகாமல் இருக்கவில்லை. அங்கு சென்று பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டேன். கொவிட் தொற்று காலத்தில் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? என்பதில் பாரிய பிரச்சினைகள் உருவாகின. மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு எதிராக இருந்தன. முஸ்லிம்களின் கொவிட் சடலங்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்தன. இந்த மடமைத்தனமான முடிவை அரசாங்கம் எடுத்தபோது அரசாங்கம் வீழ்ந்துவிடும் என்று நினைத்துக் கொண்டேன். நான் மாத்திரமே முஸ்லிம்களின் சடலத்தை தகனம் செய்யும் தவறான தீர்மானத்தை எடுக்க வேண்டாம். நிறுத்திக் கொள்ளுங்கள் என்றேன். நிபுணர்களின் தீர்மானத்தை ஜனாதிபதி செவிமடுத்ததால் அவர் அப்பாவியானார். இந்த பாவத்தைச் செய்யாதீர்கள் என்று நான்தான் கூறினேன்.

இந்த முடிவால் நாடு பெரிதும் பாதிக்கப்பட்டது. மத்திய கிழக்கில் வேலை செய்தவர்கள் சட்டரீதியாக நாட்டுக்குப்பணம் அனுப்பிவைக்கவில்லை. அவர்களின் குடும்பத்திருக்கு உண்டியல் மூலமே பணம் அனுப்பி வைத்தார்கள். நாட்டிற்கு ஏற்பட்ட இந்நிலைமையிலிருந்து மீட்க நான் முயற்சிகள் மேற்கொண்டேன்.

சவூதி அரேபியாவுடன் கதைத்தேன். எமது ஜனாதிபதியை சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யும்படி சவூதி அரேபியா கூறியது. நிவாரண அடிப்படையில் எரிபொருள் தருவதாகக் கூறினார்கள். சவூதி அரேபியாவிலிருந்து இந்தச் செய்தியை எடுத்து வந்து அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கூறினோம்.

எமது ஜனாதிபதி சவூதிக்கு விஜயம் செய்ய விருப்பம் என உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்று இராஜதந்திர ரீதியில் அனுப்பி வைக்குமாறு ஜி.எல்.பீரிஸிடம் கூறினோம். ஒரு மாதகாலமாகியும் கடிதம் ஒன்று அனுப்ப முடியாமற்போனது. இவ்வாறு நாட்டை மீட்டெடுக்க முடியுமா?

எமது நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். இதுவும் எமது ஒரு அரகலயதான். வேறான ஓர் அரகலய இது இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டும் இதில் அரசாங்கத்துக்கு அக்கறை இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி இதழ் 22/12/2022 பக்கம் 01

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter