கொழும்பு சிறுநீரக வர்த்தகம் உண்மையா? திட்டமிட்ட பிரச்சாரங்களா?

அது கடந்த நவம்பர் 18 ஆம் திகதி பொரளை கொட்டா வீதியில் அமையப் பெற்றுள்ள ‘வெஸ்டேர்ன்’ தனியார் வைத்தியசாலையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. தமது சிறுநீரக நன்கொடை நிதி தொடர்பில் கிடைக்க வேண்டிய உபகாரத் தொகை கிடைக்கவில்லை எனவும் அதனை பெற்றுத் தருமாறும் ஒரு குழு முன்னெடுத்த எதிர்ப்புகள் இதற்கு காரணமாகும்.

வைத்தியசாலை நிர்வாகத்தின் தகவல்கள் படி வந்திருந்தவர்கள் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதலையும் முன்னெடுத்துள்ளனர். அவர்கள் தமக்கு கிடைக்க வேண்டிய கொடைப் பணத்தைத் தருமாறு கூச்சலிட்டுள்ளனர். இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் சட்டவிரோதமானவையாகும் எனவும் தமது அவயவங்களை பணத்துக்காக பரிமாற முடியாது எனவும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் அவர்களுக்கு எடுத்துக் கூறியதாக வைத்தியசாலை தரப்பினர் கூறுகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி தனியார் ஊடகம் ஒன்றூடாக சட்ட விரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பிலான விடயம் ஒன்று தொடர்பில் ஒரு வெளிப்படுத்தல் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி பொரளை பொலிஸ் நிலையத்துக்கு 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கொழும்பு 13, புளூமெண்டல் வீதி, சிறிசந்த செவன வீடமைப்பில் வதியும் வலிசுந்தர முதியன்சலாகே சுபுன் சஞ்ஜீவ எனும், பொரளை தனியார் வைத்தியசாலை சிறுநீரக வர்த்தக நடவடிக்கைக ளுக்கு தரகராக செயற்பட்ட நபராக கருதப்படுபவர், 5 பேருடன் சென்று பொரளை பொலிஸில் இந்த முறைப்பாடுகளை செய்திருந்தார்.

கொழும்பு கொச்சிக்கடையை சேர்ந்த வேல்டிங் தொழிலாளர் ஒருவர், கொழும்பு 15 பஞ்ஞானந்த மாவத்தையைச் சேர்ந்த வீதித் துப்பரவு தொழிலாளி, புளூமெண்டல் சிரி சந்த செவன குடியிருப்பில் வசிக்கும் வேல்டிங் தொழிலாளி, கொழும்பு 13 மீரானியா வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, மற்றும் கொழும்பு 15 பஞ்ஞானந்த மாவத்தை, மெத் சிறி செவன வீடமைப்பில் வசிக்கும் ஒன்றரை வயது குழந்தையின் தாயொருவர் இந்த முறைப்பாடுகளை செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் 30 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். குறித்த ஐவரிடமும் மோசடியான முறையில் சிறுநீரகங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து சிறுநீரகங்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், சட்டத்தை விவரித்து அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையை வழங்காமல் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்த 5 முறைப்பாடுகள் மீதான விசாரணைகளையும் முன்னெடுக்கும் பொறுப்பு சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் ஒப்படைக்கப்பட்டது. இந் நிலையிலேயே சி.சி.டி.யின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வாவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் ரன்னமல்ல உள்ளிட்ட குழுவினர் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

முதலில் முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ள தனியார் வைத்தியசாலை அமைந்துள்ள நீதிமன்ற நியாயாதிக்க எல்லையான கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இலக்கம் 2 இல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததாக கூறி முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பித்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அந்த விசாரணைகளில் தற்போது சுமார் 12 வரையிலான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நீதிமன்றுக்கு விசாரணையாளர்கள் தரப்பு அறிவித்துள்ள தகவல்கள் பிரகாரம், பொலிஸில் முறைப்பாடு செய்த ஐவரிளதும் வாக்கு மூலங்களில் வெளிப்பட்ட தகவல்கள் பிரகாரம், சந்துன் (முறைப்பாடு செய்ய உடன் சென்றவர்) மற்றும் பாய் எனும் இரு தரகர்கள் ஊடாக 20 முதல் 150 இலட்சம் ரூபாவுக்கு அவர்க ளது சிறுநீரகங்களைப் பெற்றுக்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளது. ‘வெஸ்டர்ன் எனும் தனியார் வைத்தியசாலையில் இந் நடவடிக்கைகள் நடந்துள்ளன.

இந்த பாதிக்கப்பட்ட 5 பேரில், 33 வயதான தொழிலாளரிடம் 90 இலட்சம் ரூபா தருவதாக கூறியே சிறுநீரகம் பெறப்பட்டுள்ளது. அந்த நபர் அவரது ஒரு சிறுநீரகத்தை வெஸ்டர்ன் எனும் வைத்தியசாலையின் உரிமையாளருக்கே வழங்கியுள்ளார்.

இந்த சிறுநீரக வர்த்தகம், வலையமைப்பு ரீதியாக சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகும். மனித உறுப்புகள் இவ்வாறு பாரிய அளவில் கடத்தப்படுவது தொடர்பில் வெளிப்படுவது இது முதல் முறையாகும்.

இந்த சட்ட விரோத நடவடிக்கை ஊடாக கிடைக்கும் பணத்தை தரககும் வைத்தியசாலை அதிகாரிகளும் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதுவரையிலான விசாரணையில், இவ் வருடத்தில் மட்டும் சர்ச்சைக்குரிய இந்த வைத்தியசாலையில் 52 சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடக்கின்றன.’ என கடந்தவாரம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு எனக் கூறி, வெஸ்டர்ன் வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் பெற்றுக்கொள்ளப்பட்டது. வைத்தியர் பேராசிரியர் மொஹம்மட் ஹுசைன் றிஸ்வி ஷரீப், வைத்தியர் அமீனா றிஸ்வி ஷரீப், வைத்தியர் மொஹம்மட் ரிகாஸ் ஷரீப், வைத்தியர் பாத்திமா ஹபீபா ஷரீப், வைத்தியர் உமர் ஷரீப் மற்றும் அமித்தா கமலினி கஸ்தூரி ஆரச்சி ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்தே இவ்வாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய ஊடாக தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. உ

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் 1987 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க உடல் உறுப்பு மாற்றுச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டமானது, அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மனித உடல்கள் மற்றும் உறுப்புகளை தானமாக வழங்குதல் மற்றும், உடல் உறுப்புக்களை அகற்றுதல், உயிருடன் இருக்கும் ஒருவருக்கு அதனை பொருத்துதல், அத்தகையவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமாகும், தற்போது அதன் கீழேயே விசாரணைகள் நடப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இந்த சிறுநீரக விசாரணை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை வழங்கும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தெரிவிக்கின்றார்.

இந் நிலையில் ஏழை எளியவர்களை ஏமாற்றி இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பிலான விசாரணையில் தற்போதைக்கு ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாய் என அறியப்படும் பிரதான தரகரே இவ்வாறு எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்ட பிரதான தரகராக செயற்பட்டதாக கூறப்படும் ‘பாய்’ எனும் பெயரால் அறியப்படும் நபர் நீதிமன்றில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் ஆஜர் செய்யப் பட்டு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்காக நேற்று முன் தினம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி நேற்று முன் தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது அடையாள அணிவகுப்புக்காக அவர் ஆஜர் செய்யப்பட்ட போதும், அடையாளம் காட்ட வேண்டிய சாட்சியாளர்கள் சுகயீனம் காரணமாக மன்றில் ஆஜராகவில்லை. 6 சாட்சியாளர்களில் 5 சாட்சியாளர்கள் இவ்வாறு சுகயீனம் அடைந்துள்ளதால் இவ்வாறு அடையாள அணிவகுப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சாட்சியாளர்கள் அனைவரும் தமது சிறுநீரகங்களை வழங் கியவர்கள் என கூறப்படுகின்றது.

இதனையடுத்து அடையாள அணிவ குப்பு எதிர்வரும் 2023 ஜனவரி 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, வெஸ்டர்ன் தனியார் வைத்தியசாலையின் சிறுநீரக சத்திர சிகிச்சை தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் தற்போது சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் கூறினர்.

இதனைவிட இந்த சட்டவிரோத சிறுநீரசு வர்த்தகம் குறித்த விசாரணைகளில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்து தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் தற்போது கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த விசாரனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிறுநீரகங்களை தானம் செய்தவர்கள் பொரளை பிரதேசத்தில் உள்ள குறித்த தனியார் வைத்தியசாலைக்கு சென்று உறுதியளிக்கப்பட்ட பணம் கிடைக்காத காரணத்தினால் அதனை கோரி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அப்போது, அவர்களை அங்கு சென்று சந்தித்துள்ள பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலா இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதுடன், ‘இனி தொந்தரவு செய்யக் கூடாது. மீறி அப்படி செய்தால் எலும்புகளை உடைத்துவிடுவேன்.’ என மிரட்டியுள்ளார். இந் நிலையிலேயே இந்த கடத்தலின் பின்னணியில் பொலிஸ் அதிகாரிகள் இருக்கிறார்களா என்பது குறித்து மேலும்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,

எனினும் சட்ட விரோத சிறுநீரக வர்த் தகம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை அந்த வைத்தியசாலை முற்றாக மறுக் கின்றது.

வைத்தியசாலையின் விளக்கம்

இல. 218, கொட்டா வீதி பொரள்ளையில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஹொஸ்பிடலுடன் சட்டவிரோதமான உடல் உறுப்பு கடத்தல் மோசடியை சம்பந்தப்படுத்தி ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்திகள் திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட சேறுபூசல்கள் என வர்ணித்துள்ள அந்த வைத்தியசாலை, அது குறித்து ஊடக அறிக்கையினை வெளியிட்டு பதிலளித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், விசாரணைகள் நிறைவடையும் வரை காத்திருப்பதாகவும், இது தொடர்பில் முறையாகச் செய்யப்படும் எந்த விசாரணைக்கும் பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவ்வைத்தியசாலை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போதும், தற்கொலைதாரி சஹ்ரானின் சகோதரர் ரில்வானுக்கு அதற்கு முன்னைய சந்தர்ப்பம் ஒன்றில் சிகிச்சையளித்ததாக வைத்தியசாலை மீது குற்றம்சாட்டப்பட்டதாகவும், சி.ஐ.டி. விசாரணையில் அது அடிப்படையற்ற பொய்யான விடயம் என்பது நிரூபிக்கப்பட்டதாகவும் அவ்வைத்தியசாலை குறிப் பிட்டுள்ளது.

அதனை ஒத்த பொய்யான ஒரு விடயமே இந்த சிறுநீரக கடத்தல் செய்தி எனக் கூறும் அவ்வைத்தியசாலை உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே வைத்தியசாலை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வைத்தியசாலை தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விஷேடமாக கூறப்பட்டுள்ளதாவது, ‘உடலுறுப்புக்களை விற்பனை செய்வதிலோ கடத்துவதிலோ வெஸ்டர்ன் ஹொஸ்பிடல் ஈடுபடவும் இல்லை. ஈடுபடப் போவதும் இல்லை.

பிரதான சந்தேக நபர் எனப்படும் ஒருவரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. எனவே ஊடகங்கள் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணைகள் உண்மையை விரைவில் வெளிப்படுத்தும் என நம்புகிறோம்.

சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறையில் வெஸ்டேர்ன் ஹொஸ்பிடல் முன்னணி வகிக்கிறது. இலங்கையின் முதலாவது சிறுநீரக மாற்றுச் சிகிச்சையை நாங்களே முதன் முதலில் மேற்கொண்டோம். டயலஸீஸ் செய்வதற்கான இயந்திரங்களை எமது சொந்த நிதியால் நாட்டுக்குத் தருவித்து 1984 இலே முதலாவது டயலிஸிஸ் சிகிச்சையையும் நாங்களே மேற் கொண்டோம்.

எமது மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலப் பணியில் எமது சிறப்பான சேவை மற்றும் தரமான பணியாட்கள் மூலமாக நாம் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம்.

எமது சேவைக் காலப்பிரிவில் 1200க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளைச் செய்திருப்பதோடு 10,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் டயலிஸிஸ் சிகிச்சை செய்திருக்கிறோம்.

எமது கிடைத்த இந்த நற்பெயர் பலருக்குப் பொறாமையை ஏற்படுத்தியிருக்கக் கூடும். கொடையாளிகளிடம் இருந்து உறுப்புக்களைப் பெறுவதற்கு கடுமையான நடைமுறை உள்ளது. விருப்பத்துக்கு மாறாக யாருடைய உறுப்பும் பெறப்படுவதில்லை.

பேராசிரியர் ரவீந்திர பெர்ணான்டோ, மருத்துவ நிபுணர் ஒருவர், ஒரு சட்டத்தரணி அடங்கிய குழுவொன்றின் மூலம் தானம் கொடுப்பவர்களுடன் கலந்துரையாடப்படும்.

அதன் பின்னர் சுகாதார அமைச்சின் மூன்று கட்டங்களிலான அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். எந்தவொரு நன்கொடையாளரும் மாற்று சத்திர சிகிச்சைக்கு முன்னர் தமது சம்மதத்தை மீளப் பெற முடியும். அறுவை சிகிச்சைக்கு நன்கொடையாளர்கள் தங்கள் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொள்வதற்கு முன் கடுமையான சட்டத் தேவைகளுக்கு அவர்கள் இணங்க வேண்டும். நாட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் ஏனைய ஐந்து தனியார் மருத்துவமனைகளும் நாம் பின்பற்றும் அதே நடைமுறைகளையே பின்பற்றுகின்றன. ‘ என வைத்தியசாலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.எப்.எம்.பஸீர் (விடிவெள்ளி இதழ் 15/12/2022 பக்கம் 04)

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter