காத்தான்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்!

ஆசிரியரை கடத்தி கப்பம் கோரிய ஒருவர் கைது, மற்றொருவர் டுபாய்க்கு தப்பியோட்டம்

கடந்த செவ்வாய்க்கிழமை காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.சி.அஜ்வத் ஆசிரியர் காணாமல் போன செய்தி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
51 வயதான காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.சி.அஜ்வத் ஆசிரியரை செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இவர் ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

செவ்வாய்க்கிழமை மாலை அவரது பாலமுனையில் உள்ள காணிக்குச் சென்று வருவதாகக் கூறி ரி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டுச் சென்றவர் அன்றிரவு வரை வீடு திரும்பவில்லை எனவும் அம் முறைப்பாட்டில் உறவினர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புதன்கிழமையன்று காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ரஹீம் விசாரணைகளை துரிதப்படுத்தினார்.

காணாமல் போன அஜ்வத் ஆசிரியர் செவ்வாய்க்கிழமையன்றிரவு சுமார் 7.30 மணியளவில் காத்தன்குடி மெத்தைப் பள்ளி வீதியில் வெள்ளை வேன் ஒன்றில் வந்தவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை தான் கண்ணால் கண்டதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரியப்படுத்தியதையடுத்து பொலிசாரின் விசாரணை மேலும் துரிதாமாகியது.

இதே நேரம் புதன்கிழமையன்று காலை கறுத்த மேலங்கி முகக்கவசம், சாரன் அணிந்த ஒருவர் ஒரு மோட்டார் சைக்கிளில் அஜ்வத் ஆசிரியர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மெத்தைப்பள்ளிவாயல் வீதியிலுள்ள சி.சி.ரி.வி.கமரா பொருத்தப்பட்டிருந்த ஓரிரு வீடுகளுக்கு வந்து வீட்டாரை அச்சுறுத்துவது போன்று நடந்து கொண்ட சம்பவமும் பொலிசாரின் விசாரணையின் போது துரும்பாக கிடைத்தது.

இவைகளை மையப்படுத்தி காத்தான்குடி மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் உட்பட அவ்வீதியில் சி.சி.ரி.வி. கமரா பொருத்தப்பட்டிருந்த வீடுகளில கமராக்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் புதன்கிழமை அன்று மாலை தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை பொலிசார் ஈடுபட்டனர்.

இதன் போது குறித்த வேன், சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள் என்பவற்றின் அடையாளங்களையும் சி.சி.ரி.வி.யிலிருந்து பொலிசார் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போன அஜ்வத் ஆசிரியர் வியாழக்கிழமை (08) காலை வீடு வந்து சேர்ந்தார்.

இதையடுத்து இவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தனக்கு நடந்த நிலைமையினை வாக்குமூலமளித்தார்.

தன்னை வெள்ளை வேனில் வந்த சிலர் கடத்தி கப்பம் கோரியதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதனை மையப்படுத்தி துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் பிரதான சந்தேக நபரை தேடி அவரை சனிக்கிழமையன்று கைது செய்தார். கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் காத்தான்குடியைச் சேர்ந்தவரும் காங்கேயனோடையை வசிப்பிடமாகவும் கொண்டவருமாவார்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கடத்தலுக்குப் பயன்படுத்திய வெள்ளை வேன் மற்றும் உளவு பார்த்த மோட்டார் சைக்கிள், வங்கியின் இரண்டு ஏ.ரி.எம்.கார்ட், மேலங்கி என்பவற்றையும் பொலிசார் கைப்பற்றினர்.

இந்த கடத்தல் சம்பவம் காணிப் பிணக்கை மையப்படுத்தியது எனவும் இதனை முன்னெடுத்தவர்கள் கைது செய்யப்பட்ட நபரும் அவரது சகோதரருமே என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் குறித்த ஆசிரியரை கடத்தி கப்பம் கோரியுள்ளதுடன் அவரிடமிருந்து எழுதப்பட்ட பேப்பரில் முத்திரையில் கையொப்பம் பெற்றுள்ளதாகவும் அந்த ஆவணங்களையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இக் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட மேற்படி பிரதான சந்தேக நபரின் சகோதரர் சம்பவம் நடந்த அன்றே டுபாய் நாட்டுக்கு தப்பியோடி விட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேக நபரும் அவருடைய சகோதரரும் சேர்ந்து நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் கூலிக்கு பெறப்பட்ட வேனிலேயே இக் கடத்தலை மேற் கொண்டுள்ளனர்.
இவ்விரு சந்தேக நபர்களும் சேர்ந்து இந்த வெள்ளை வேனில் செவ்வாய்க்கிழமையன்று இரவு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியில் வைத்து அஜ்வத் ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அவரை வழி மறித்து கட்டாயப்படுத்தி வேனில் ஏற்றி கண்களை கட்டி கடத்திச் சென்று சந்தேக நபரின் காங்கேயனோடை ஈரான் சிற்றி நகரத்திலுள்ள வீடொன்றில் வைத்து அச்சுறுத்தியுள்ளதுடன் அவரிடம் கப்பம் கோரியுள்ளனர். அத்துடன் வெள்ளைப் பேப்பரில் எழுதி முத்திரையில் அஜ்வத் ஆசிரியரின் கையொப்பத்தையும் பெற்றுள்ளனர்.

அஜ்வத் ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை கடத்திய இடத்தில் வைத்து விட்டுச் சென்று பின்னர் அங்கு வந்து தான் அதனைக் கொண்டு சென்றதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

அஜ்வத் ஆசிரியருடன் பிரதான சந்தேக நபர் நடாத்திய சம்பாசனையையும் சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மேற்படி அஜ்வத் ஆசிரியரின் கையடக்க தொலைபேசியை மண்முனை வாவிக்குள் வீசியதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருவதுடன் பிரதான சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது 15 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன் டுபாய் நாட்டுக்கு தப்பியோடியுள்ள சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளையும் துரிதமாக பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

எம்.எஸ்.எம். நூர்தீன் – விடிவெள்ளி பத்திரிகை 15/12/2022 – பக்கம் 06

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter