ஜும்ஆப் பள்ளிகளில் மாத்திரமே ஜும்ஆ தொழுகை

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்பு சபையின் இணக்கத்துடன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கொவிட் 19 தொற்று நோய்க்கு முன்னைய காலப்பகுதியில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்ற பள்ளிவாசல்களில் மாத்திரம் ஜும் ஆ தொழுகையை நடாத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடுவது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள்,ஷாவியாக்களில் ஜும்ஆ தொழுகை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இது தொடர்பில் திணைக்களம் MRCA/A/06/ Covid/ 19 இலக்க, 2021.06.17 ஆம் திகதியிட்ட சுற்று நிருபம் ஒன்றினையும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகை நடாத்துதல் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் அனைத்துப் பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் ஷாவியாக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

திணைக்களமும்,வக்பு சபையும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, தரீக்காக்களின் உச்சபீடம், தேசிய சூரா கவுன்ஸில் மற்றும் ஷரீஆ கவுன்ஸில் என்பனவற்றின் இணக்கத்துடன் கொவிட் 19 தொற்று நோய்க்கு முன்னைய காலப்பகுதியில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்ற ஜும்ஆ பள்ளி வாசல்களில் மாத்திரம் ஜும்ஆ தொழுகையை நடாத்த முடிவு செய்துள்ளது.

தற்போது கொவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால் கொவிட்டுக்கு முன்னைய நடைமுறையின் பிரகாரம் ஜும்ஆ பள்ளிவாசல்களில் மாத்திரம் ஜும்ஆ தொழுகையை நடாத்த வேண்டும் என பல சமய அமைப்புகள், மற்றும் சில பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனால் கொவிட் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதற்கு முன்பு ஜும்ஆ தொழுகை இடம்பெற்ற பள்ளிவாசல்களில் மாத்திரம் ஜும்ஆ தொழுகையை நடத்துமாறு அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் ஷாவியாக்களின் நம்பிக்கையாளர்களும் நம்பிக்கை பொறுப்பாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எந்தவொரு பள்ளிவாசல் நிர்வாகமும் தமது பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், ஷாவியாக்களை ஜும்ஆ பள்ளிவாசலாக தரமுயர்த்த விரும்பினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப அவர்கள் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் எவ்வாறாயினும் பள்ளிவாசல்கள் தக்கியாக்கள், ஷாவியாக்களை ஜும்ஆ பள்ளிவாசலாக தரமுயர்த்துவது கவனமாக மதிப்பிடப்பட்டு அவர்களின் கோரிக்கைக்கு நியாயமான காரணங்கள் இருந்தால் மாத்திரம் முறையான ஆய்வுக்குப் பின்னரே முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜும்ஆ பள்ளிவாசலாக பதிவு செய்வதற்கான விதிமுறைகள் என்ன என்பதையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

  • ஜும்ஆ பள்ளிவாசலாக பதிவு செய்ய விண்ணப்பிக்கும் பள்ளிவாசலுக்கும் அண்மையிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசலுக்கும் இடையில் குறைந்தது ஒரு கிலோ மீற்றர் தூரம் இருத்தல் அவசியம்.
  • குறித்த பள்ளிவாசலின் ஜமாஅத் அங்கத்தவர்கள் குறைந்தது 100 குடும்பங்களாக இருத்தல் அவசியம் (விசேட காரணங்களின் அடிப்படையில் சில கிராமங்களுக்கு விதி விலக்களிக்கப்படலாம்).
  • ஜும்ஆ ஆரம்பிக்கப்படும் போது 40 பேருக்கு குறையாமல் பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.
  • அண்மித்த ஜும்ஆ மஸ்ஜிதின் சிபாரிசுக் கடிதம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். (நியாயமான காரணங்கள் இன்றி குறித்த கடிதம் மறுக்கப்படும்போது திணைக்களத்துக்கு அனுமதியளிக்கும் அதிகாரமுண்டு).
  • ஜும்ஆ பள்ளிவாசலுக்கான பெளதீக வளங்கள் பூரணப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். (தொழுகைக்கான இடவசதி, போதுமான அளவு வுழு செய்தவற்கான வசதி, கழிவறை வசதி, மிம்பர் மேடை)
  • பள்ளிவாசலின் பரிபாலனத்திற்காக வருமானம் போதுமானதாக இருத்தல் வேண்டும்.
  • நகர்ப்புறங்களில் வாகன தரிப்பிட வசதி காணப்படல் வேண்டும்.
  • குறித்த பள்ளிவாசலில் ஜும்ஆ நடத்துவதற்கு தகுதியான இமாம் கடமையில் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஏ.ஆர்.பரீல்) விடிவெள்ளி இதழ் 08/12/2022 பக்கம் 01

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter