வீசாவும், மத்திய கிழக்கும் – ஒரு அவதானக் கட்டுரை

இந்த ஆக்கத்தின் நோக்கத்தை பின்னர் சொல்கிறேன். முதலில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பற்றி பார்த்துவிட்டு வருவோம்.

ஒரு காலம் இருந்தது, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் தான் உழைக்கலாம், வேலைக்கான வீசாவில் போவது கஷ்டம், அதனால் மாணவர் (Student) வீசாவில் சென்று சில காலம் படித்துவிட்டு அங்கு உள்ள அடுத்த வீசா வகைகளுக்கு மாறி, முழு நேரம் வேலை அல்லது சட்டவிரோதமான வீசாவில் எப்படியோ எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்குள் நுழைவது என்று இருந்தது.

பின்னர் ஜப்பான் சென்று உழைத்தல் அல்லது அங்கு வியாபாரம் என்று ஒரு பக்கம்.

மத்திய கிழக்கு என்றால் ஹவுஸ் டிரைவர், ஹவுஸ் மெய்ட் (இன்னும் எமது நாட்டு விமான சேவை மத்திய கிழக்கு செல்லும் பல துறை சார்ந்தவர்களையும் இப்படித்தான் பார்ப்பார்கள் – அது வேற விஷயம் )

தற்போது அல்ஹம்துலில்லாஹ் நாட்டில் பல துறைசார்ந்தவர்கள் சிறந்த தொழில் நிமித்தம் மத்திய கிழக்கில் வந்து குடியேறி உள்ளனர். எனினும் விகிதாசார ரீதியில் 25% மட்டுமே, மிகுதி 75% ஆனவர்கள் குறைந்த சம்பளத்துடனான வேலைகளுக்கே வந்து குடியேறி இருக்கின்றனர்.

தற்போது நாட்டிலுள்ள நிலைமை தெரியாதவர்கள் இல்லை, ஒவ்வொருவரும் பல பிரச்சினைகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், சிலர் பிரச்சினைகளை வெளிப்படையாகச் சொல்லி ஏதாவது உதவிகளை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் பலர் வெளிப்படையாக சொல்ல முடியாமல் பல மனரீதியான உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இவ்வாறானவர்கள் செய்வதற்கு வேறு வழி தெரியாமல் சேமித்து வைத்த ஒருசில லட்சங்களை செலவழித்தாவது ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு போய் சம்பாரிப்பதற்கு முடிவு செய்கின்றனர்.

அந்த வகையில் மத்திய கிழக்கு நாட்டுகளுக்கு இலகுவாக வீஸாக்களைப் பெற்றுக் கொள்ள முடியும், ஒப்பீட்டளவில் செலவுகள் குறைவு என்னும் காரணங்களால் மத்திய கிழக்கைத் தெரிவு செய்கின்றனர்.

ஆனாலும் சில போலியான முகவர்களின் நயவஞ்சகப் பேச்சை நம்பி, எவ்வித முன் விவரமும் அறியாமல் இங்கு வந்து சேர்கின்றனர்.

அண்மையில் நாம் எடுத்த பொதுவான தகவல் சேகரிப்பின் படி கடைசியாக வந்த 25 பேர் டி போய் (Tea Boy) மற்றும் லேபர்(Labour) வேலைக்கே…!

கத்தார் நாட்டுச் சட்டப்படி குறைந்தது 1,000 ரியால் சம்பளம் 300 ரியால் சாப்பாட்டுக்கான செலவு, 500 ரியால் தங்குமிடத்துக்கான செலவு (அல்லது குறைந்தது ஒரு நபர் தங்குமிடம் 2 x 3 மீட்டர் இடம்) கொடுக்க வேண்டும். ஒரு சில சிறிய கம்பெனிகள் ஏமாற்றுப்பேர்வழிகள் இவற்றை கொடுக்காமல் இருக்கின்றனர்.

இந்த ஆக்கத்தின் நோக்கம்

அண்மையில் அக்குறணை கம்யூனிட்டி கத்தார் (ACQ) முகங்கொடுத்த சில மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி மேலும் பலர் பாதிப்படைவதில் இருந்து பாதுகாப்பதே இந்த பதிவின் நோக்கம்.

அண்மையில் எமது ஊரைச்சேர்ந்த ஒருவர் எம்மை தொடர்புகொண்டு அவருடன் இன்னும் சிலரும் ஒரு அறையில் இருப்பதாகவும் நாட்டிலிருந்து எம்மை மெய்ண்டெனன்ஸ் (Maintenance) கம்பனியில் வேலை என்று சொல்லி அனுப்பினர் ஆனால் இங்கு வந்த பின்னர் தான் எம்மை மனிதவள நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பியிருப்பது தெரியவந்தது. எம்மை இவர்கள் சீமெந்து குழைக்கவும், சீமெந்து தூக்கவும், பாரமான டைல்களை மேல் மாடிகளுக்கு தூக்கவுமே எம்மை உபயோகிக்கின்றனர் என்றும் இன்னும் பல பிரச்சினைகளுக்கும் முகங்கொடுப்பதாகவும் குறிப்பிட்டனர். (இவர்களைப்போன்றே இன்னும் ஆறு பேர் இங்கு வந்து இதே பிரச்சினையை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் எம்மை தொடர்பு கொண்டவர்கள் மாத்திரமே, இதே வேலை எமக்குத்தெரியாமல் இன்னும் பலர் இவ்வாறான பிரச்சினைகளில் இருக்கலாம்)

மனிதவள நிறுவனம் (இது மனிதர்களை வேறு வேலைகளுக்கு வாடகைக்கு கொடுக்கும் (Manpower) கம்பெனி) இந்த நிறுவனம் ஒவ்வொரு நாளும், அல்லது கிழமை அல்லது மாதத்துக்கு தொழிலாளர்களை வாடகை அடிப்படையில் பிற கம்பெனிகளுக்கு கொடுப்பார்கள். ஒரு குறிப்பிட்ட வேலை இருக்காது , ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தேவையான மாதிரி எல்லா விதமான வேலைகளையும் செய்ய வேண்டும்.

ACQ உறுப்பினர்கள் உடனடியாக குறிப்பிட்ட நபர்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு சென்று அவர்களுக்கு உளர் உணவுப் பொருட்களை வழங்கியதோடு, உள ரீதியான ஆறுதல்களை மற்றும் சட்ட ரீதியாக அவர்கள் என்ன செய்யலாம் என்ற தெளிவையும் வழங்கினர்.

குறித்த சகோதரர்களிடம் விசாரித்த வகையில், அவர்கள் செய்துக்கொண்டிருந்த வியாபாரத்தை கொடுத்துவிட்டு, சிலர் கடன் எடுத்து, சிலர் நகைகளை விற்று வந்துள்ளனர், குறித்த சகோதரர்கள் இரண்டரை லட்சம் முதல் நாலரை லட்சம் வரை ஏஜென்ட் களுக்கு கொடுத்து வந்துள்ளனர். குறிப்பாக மத்திய கிழக்குக்கு ஏஜென்ட் மூலம் வருவதென்றால் இலங்கை நாணயப்படி 50,000 முதல் 100,000 பணம் போதுமானது.

எம்பிளாய்மென்ட் கான்ட்ராக்ட் அக்ரீமெண்ட் Employment Contract Agreement

இங்கு வேலைக்காக நேரடியாக கம்பெனிகளுக்கு வரும் ஒவ்வருவருக்கும் எம்பிளாய்மென்ட் கான்ட்ராக்ட் அக்ரீமெண்ட் இருக்க வேண்டும், நாம் கேட்ட வகையில் சிலருக்கு அப்படி என்றால் என்ன வென்றே தெரியாது . அதை ஏஜென்ட் எல்லாத்தயும் செஞ்சி தந்துட்டார் என்று பதில். ஒருவரிடம் இருக்கும் அக்ரீமெண்ட்டை எடுத்து பார்த்தோம் (இங்கு இலங்கையர்களுக்கு அக்ரீமெண்ட் அரபியிலும் சிங்களத்திலும் இருக்கும்) அதில் கொழும்பில் இருந்து தோஹாவுக்கான விமான டிக்கெட் குறிப்பிட்ட தொழில் வழங்குநர் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் ஏஜென்ட் இவர்களிடம் டிக்கெட்டுக்கான பணத்தையும் சேர்த்து அறவிட்டுள்ளார்கள்

எமக்கு அரபு வாசிக்கத் தெரிந்தாலும் அதுக்கு அர்த்தம் சரியாக தெரியாது, சிங்களம் பேசத்தெரிந்தாலும் அதனை வாசித்து விளங்க தெரியாது. பல ஆயிரம் கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்கும் நமக்கு அதில் இருக்கும் ட்ரான்ஸ்லேட் அப்ளிகேஷன் ஐயும் தெரியாது. அதனால் அக்ரீமெண்ட்டில் என்ன இருக்குது என்று எமக்கு தெரியாது.

மத்திய கிழக்கு செல்லு முன் ……

  1. ஏஜென்ட் சொல்லும் அனைத்தையும் நம்புவதை நிறுத்துங்கள்.
  2. அதிகமான ஏஜென்ட் கள் போலிகள்.
  3. தனி நபர் ஏஜென்ட் களிடம் ஏமாறாமல் பதிவு செய்யப்பட ஏஜென்ட்களை தொடர்பு கொள்ளுங்கள்.
  4. ஓ/எல் முடித்து விட்டு மத்திய கிழக்கு போய் சம்பாரிக்கலாம், என்று நினைத்தால் படுகுழியில் விழப்போவது நீங்களும் உங்கள் குடும்பமுமே.
  5. மத்திய கிழக்கில் இருந்து நபர்கள் போடும் மாட மாளிகை, ஷாப்பிங் மோல்களின் போட்டோக்களை கண்டு ஏமாறாமல் அவர்களின் அறையை ஒரு போட்டோ எடுத்து அனுப்பச் சொல்லுங்கள்.
  6. இங்கு ஏற்கனவே இருக்கும் நண்பர்கள் உறவினர்களை அல்லது ஊர் அமைப்புக்களை தொடர்புகொண்டு, நீங்கள் செல்ல எத்தனிக்கும் வேலை, மற்றும் நிறுவனம் போன்றவற்றை பற்றி தேடிப்பாருங்கள்.
  7. உங்கள் எம்பிளாய்மென்ட் கான்ட்ராக்ட் அக்ரீமெண்டை அரபு அல்லது சிங்களம் தெரிந்தவர்களிடம் காட்டி அதில் உள்ளவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
  8. பாடசாலை முடித்தவர்கள் வேறு ஏதாவது ஒரு விடயத்தை படித்துவிட்டு வந்தால் குறைந்தது குலிரூட்ட்டப்பட்ட இடத்திலாவது வேலை செய்யலாம்.
  9. ஏப்ரல் ஆரம்பித்து அக்டோபர் வரை 40 முதல் 55 டிகிரி வரை வெப்ப நிலை இருக்கும் (இலங்கையில் 35 டிகிரி யை தாண்டுவதே சிரமம் தான்)

வெளிநாட்டு வாழ்க்கை நினைப்பது போன்று இலகுவானதல்ல, பல தியாகங்களையும் வலிகளையும் சுமந்தே நகர வேண்டியிருக்கும்.

Via FB: Akurana Community Qatar – 05-December-2022

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter