பெளத்த பிக்குகள் முன்னுள்ள பொறுப்பு – தம்மானந்த தேரர்

இலங்கையின் இன்றைய நிலையானது சர்வதேச ரீதியில் பலராலும் கேலி செய்யப்படும் அளவிற்கு நலிவடைந்திருக்கின்றது. இந்தியாவின் ஒரு தேசியப் பத்திரிகையில் இலங்கையின் தேசியக் கொடியானது கேலிச் சித்திரமாக காட்டப்பட்டிருந்ததனை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். கொடியில் இருக்கின்ற சிங்கம் மிகவும் மெலிந்து ஒடுங்கி இருப்பதாக சித்திரத்தில் காட்டப்பட்டிருந்தது. அது மாத்திரமல்ல வெளிநாடுகளில் கடன் கேட்கும் போது அந்த நாடுகளில் தொழிலுக்காக சென்றிருக்கின்ற இலங்கையர்கள் தாங்கள் தொழில் புரியும் நாட்டில் நீங்கள் கடன் கேட்டால் அவற்றை எங்களிடமிருந்து இந்நாட்டு அரசாங்கம் அறவிட்டுக் கொள்ளலாம் எனவே கடன் வாங்காதீர்கள் என்பதாக சமூக ஊடகங்கள் வழியாக குறிப்பிடுகின்றனர். இலங்கை சர்வதேச ரீதியில் மிகவும் கேலிக்கு உட்படுத்தப்படுகிறது என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாகும்.

உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற இலங்கையினை மீட்டெடுப்பதற்காக இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சுயவிசாரணை ஒன்றினை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும். நாம் வாழ்கின்ற நாடு முன்னேற்றத்தை நோக்கிச் செல்லாமல் அதல பாதாளத்தை நோக்கிச் செல்வதற்கு நான் எப்போதாவது காரணமாக இருந்திருக்கின்றேனா என்பதை இந்த சுய விசாரணையின் ஊடாக கண்டறிவதற்கு முயற்சிக்க வேண்டும்.

யாரையேனும் ஆட்சி பீடத்தில் ஏற்றுவதற்காக நாம் மதவாதம் இனவாதம் என்பவற்றை பயன்படுத்தியுள்ளோமா?

இது போன்ற செயற்பாடுகளுக்கு நாம் அனுசரணை வழங்கியுள்ளோமா?

குறித்த சுயமதிப்பீடு மேலே குறிப்பிடப்படுகின்ற தலைப்புக்களின் அடிப்படையில் அமைவது சிறந்தது.

பொதுவாகவே ஒரு சமூகத்தில் சுய பாதுகாப்பு பற்றிய பய உணர்வு ஏற்படும் போது தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்ற பேசு பொருள் அந்த மக்கள் மத்தியில் உருவாகிறது. கிராமப்புறங்களில் விவசாய நிலங்களில் தங்களது விவசாய அறுவடைகளை திருடிச் செல்வதற்கு ஒரு சிறு குழுவினர் இருக்கின்றனர் என்ற பயம் ஏற்படும்போது ஒட்டு மொத்த கிராமத்தவர்களும் எமது கிராமத்தை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் ஒன்றிணைகின்றனர். அவ்வாறு ஒன்றிணைகின்றவர்கள் அந்த திருட்டுக் கும்பலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பலம் பொருந்திய ஒருவரை நாடுகின்றனர் அல்லது பலம் பொருந்திய ஒருவரே தங்களைப் பாதுகாப்பார் என நம்பிக்கை கொண்டு அத்தகைய ஒருவரிடம் தங்களது கிராமத்தையே ஒப்படைத்து விடுகின்றனர்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதற்கொண்டே இத்தகைய பயத்தைப் பயன்படுத்தி அனைத்து அரசியல்வாதிகளும் ஆட்சியினைப் பிடித்துக்கொள்ள முயன்றிருக்கின்றனர். அதாவது நாட்டில் ஒரு குழுவினரால் நாடு ஆக்கிரமிக்கப்படப் போகின்றது என்பதாக ஒரு கருத்தாடல் மக்கள் மத்தியில் உருவாக்கப்படுவதும் பின்னர் நாட்டை ஆக்கிரமிக்கப் போகின்ற குழுவாக ஒரு இனம் அடையாளப்படுத்தி அதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மக்களும் அந்தக் குழு தொடர்பில் அச்சம் கொள்ளத் தொடங்குவர். பின்னர் தங்களால் இயன்ற அளவில் எதிர்ப்புக்களையும் வெளிக்காட்டத் தொடங்குவர். இந்த சந்தர்ப்பத்தில் அகன்ற மார்பும் அடர்த்தியான மீசையும் கொண்ட ஒருவர் சமூகத்தில் மிகவும் பலம் பொருந்திய நபராக அறிமுகம் செய்யப்படுவார். அத்துடன் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் பலம் இவரிடம் மாத்திரமே காணப்படுகிறது என்பதாக மக்கள் நம்ப வைக்கப்படுவார்கள்.

இந்த அடிப்படையில் தான் மக்களிடம் காணப்படுகின்ற பயத்தினை ஆட்சியாளர்கள் பயன்படுத்தி காலா காலமாக ஆட்சி பீடம் ஏறி வருகின்றனர்.

இந்த நாட்டில் இனவாதம் என்பது அனைத்து காலங்களிலும் காணப்பட்டது. எனினும் எத்தகைய காலங்களில் இந்த இனவாதம் அதிகமாக காணப்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க முயற்சித்தோம். இதற்காக சமூக ஊடகங்கள் அச்சு ஊடகங்கள் என்பவற்றில் பகிரப்படுகின்ற விடயங்களை வைத்து ஆராய்ந்து பார்த்தோம். நாட்டில் நெடுகிலுமே இனவாதம் என்பது அதிக அளவில் தலைவிரித்தாடுகின்ற காலமாக தேர்தல்கள் நடைபெறுவதற்கு அண்மித்த காலங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த தரவுகளின் அடிப்படையில் நோக்கும் போது அனைத்து பிரிவினை வாதங்களும் அரசியல் நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.

இன்று நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. நாட்டை தீய அரசியல்வாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவாகத் துவங்கியுள்ளது. நாட்டு மக்கள் அனைவருமே நாட்டை மீட்டெடுக்கின்ற நோக்கில் சாதி இன மொழி பேதம் மறந்து அனைவரும் ஓரணியாக நின்று போராடத்துவங்கியிருக்கின்றனர். நாட்டில் இவ்வளவு காலமும் காணப்பட்டு வந்த இன மத மொழி ரீதியிலான வேறுபாடுகளை நாட்டு மக்களிடமிருந்து களைவதற்கு இந்த சந்தர்ப்பத்தை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக நமது புத்த பிக்குகள் தங்களது இருக்கைகளிலிருந்து இறங்கி வரவேண்டும். அத்துடன் புத்த மதம் என்பது சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமான ஒன்றல்ல என்பதுடன் அது அனைத்து உலக மக்களுக்குமான ஒரு வாழ்க்கை நெறி என்ற அடிப்படையில் அதன் போதனைகள் அனைத்து மக்களையும் சென்றடையச் செய்வதுடன் அவற்றின் ஊடாக இன மத பேதங்களை நீக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது இலங்கை பாரிய பொருளாதார பிரச்சினையினை எதிர்நோக்கிய நிலையில் காணப்படுகின்றது. இந்த நிலையில் உணவு உடை உறையுள் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுகின்ற நிலையிலேயே புதிய இலங்கை என்பதனை நோக்கி பயணிப்பதற்கு ஆயத்தமாகின்றோம். ஒரு குழந்தையைப் பிரசவிப்பதற்காக தாய் ஒருவர் பிரசவவேதனையினை பொறுத்துக் கொள்வது எவ்வாறோ அதே போன்று புதிய இலங்கை ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பேதங்களை ஒழிப்பதில் புத்த பிக்குகளின் பங்கு மிக முக்கியமானதாகும்

காலி முகத்திடல் போராட்டத்தின் போது அதில் பங்குபற்றிய ஒருவர் காண்பித்துக் கொண்டிருந்த பதாதை ஒன்று எனது நினைவில் அடிக்கடி வந்து போவதுண்டு. ‘நாட்டுக்கு வேலிகள் இடுவதற்கு போதுமான அளவு தூண்களும் கம்பிகளும் எம் வசமுள்ளன. புத்த பிக்குகள் வேலியாக இருக்கத் தேவையில்லை” என்பதாக அந்தப் பதாதையில் பொறிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த நாட்டின் மக்கள் புத்த பிக்குகளிடம் இருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கின்றனர். நாட்டை பிரித்து ஆள்வதற்கு புத்த பிக்குகளும் துணை போகின்றார்கள் என்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். நாட்டைப் பாதுகாப்பதற்கு ஹிட்லர் ஒருவர் வரவேண்டும் என்பதாக எந்த ஒரு பிக்குவும் குறிப்பிட முடியாது. அனைவருக்கும் அன்பு காட்டுமாறு போதிக்கின்ற புத்த தர்மத்தில் வாழ்கின்ற பிக்கு ஒருவர் ஒருபோதும் வன்முறைகளுக்கு துணை நிற்க முடியாது.

புத்த தர்மத்தினைப் போதிப்பதன் ஊடாக நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இன பேதம் மதவாதம் என்பன இல்லாத புதிய இலங்கையினைக் கட்டியெழுப்புதல் என்ற நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காக புத்த பிக்குகளின் சமூகம் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும். கிறிஸ்தவ மதம் வத்திக்கானில் ஒன்று சேர்க்கப்பட்டு இருப்பது போன்று புத்த பிக்குகளும் தங்களை புனர்நிர்மாணம் செய்து கொள்ள வேண்டும். இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக நாம் சுய விசாரணை முறைமை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

சாதி வேறுபாடு காட்டுவது என்பது மிகவுமே வெட்கப்படக்கூடிய செயற்பாடொன்றாகும். பிக்குகள் மத்தியில் காணப்படுகின்ற சாதி வேறுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும்.

அன்பு காட்டுதல் என்பதன் அடிப்படையில் மத்தியஸ்த செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

நாம் பிறக்கும் போது இந்த நாடு நலிவடைந்த ஒரு நாடாக இருப்பது எமது குற்றமல்ல. ஆனால் நாங்கள் இறந்து போகின்ற போதும் எமது நாடு ஏழ்மையானதாக நலிவடைந்த நிலையில் இருக்குமாயின் அது எமது இயலாமையினால் ஏற்பட்ட ஒன்றாகும். எனினும் இவ்வாறான ஏழ்மையான நாட்டை நாம் எமது அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்பதாயின் அது அடுத்த தலைமுறைக்கு செய்கின்ற பாரிய ஒரு துரோகமாகும். இது எமக்கு அவமானத்தினை தருகின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது. எனவே அனைத்தையும் துறந்துவிட்டு உலக சாந்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றவர்கள் என்ற அடிப்படையில் இலங்கையினை இந்த நிலையிலிருந்து மீட்பதற்காக அனைத்து புத்த பிக்குகளுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.–

கல்கந்தே தம்மானந்த தேரர் – சிரேஷ்ட விரிவுரையாளர், – களனி பல்கலைக்கழகம்
விடிவெள்ளி இதழ் – 01/12/2022

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter