மூன்றாம் மாடியில் இருந்து குழந்தையை வீசிய சம்பவம் – ஐஸ் போதை காரணமா?

கொழும்பு – கிராண்ட்பாஸ், சமகிபுர மாடிவீட்டுத் தொகுதியின் மூன்றாம் மாடியிலிருந்து ஒன்றரை வயதேயான ஆண் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசியதில், தரையில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடந்தவாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுபக்கம் பலருக்கும் இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது,

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் குறித்த குடும்பத்தாருடன் கதைத்து, அன்று என்ன நடந்தது? சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது தொடர்பில் அறிந்துகொண்டோம்.

நவம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக் கிழமை, பரபரப்பான காலைப்பொ முது. மொஹமட் பாஷில் (வயது 35) தொழிலுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வீட்டுக்குள் செவியுற்ற ஒரு வார்த்தை ஏதோ ஒரு வகை சஞ்சலம் அவரை ஆட்கொண்டிருந்தது. இதனால் அவருடைய 6 வயதான மூத்த மகன் சுஹைலை அன்று பாடசாலைக்கு அனுப்பவும் இல்லை, சுஹைலும் இரண்டாவது மகன் யாகூபும் விளையாடிக்கொண்டிருந் தனர். பாஷில் வீட்டிலிருந்து தொழிலுக்காக செல்லும் போது மூன்றாவது பிள்ளையான ஒன்றரை வயதுடைய யூசுப் தூங்கிக் கொண்டிருந்தார். இன்முகத்துடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் முகத்தை இறுதியாக பார்க்கும் சந்தர்ப்பம் அதுதான் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. வீட்டு வரவேற்பறையில் மைத்துனர் இம்ரானும் (மனைவியின் மூத்த சகோதரன்) மாமனாரும் (மனைவியின் தந்தை) உறங்கிக்கொண்டிருப்பதையும் அவதானித்தபடி, மகனிடம் காலை உணவுகளையும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவசரமாக புறக்கோட்டைக்கு தொழிலுக்காக புறப்பட்டுச் சென்றார் பாசில்,

குழந்தையின் தாய் 30 வயதுடைய பாத்திமா சுமையா அறையில் குழந்தையுடன் இருந்தார். ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்னர் சுமையாவின் சகோதரன் இம்ரான், தமது இளைய பிள்ளையை தூக்கி எறிந்து விடப்போவதாக கூறிய விடயம் உள்ளத்துக்குள் நச்சரித்துக்கொண்டிருக்க, குழந்தையுடன் அதிகமான நேரத்தை செல்வளித்தார். முன்றலில் விளையாடிக்கொண்டிருந்த மூத்த பிள்ளைகளை ஒரு கணம் பார்த்து விட்டு வர அறையிலிருந்து வெளியேறினார். தாய் சுமையா அறையைவிட்டு வெளியில் சென்ற மறுகணமே அறைக்குள் வந்த இம்ரான குழந்தையை தூக்கி ஜன்னலால் வெளியே வீசியிருக்கிறார்.

அப்போது காலை 9,10 இருக்கும். ஒன்றுமே தெரியாத குழந்தையின் துரதிஷ்ட நேரம் அது. மூத்த பிள்ளைகள் அறைக்குள் வந்து குழந்தையை காணவில்லை என உம்மா (சுமையா) விடம் கூற, தான் குழந்தையை ஜன்னலால் வீசிவிட்டதாக கூறிய இம்ரான், எந்த சஞ்சலமும் இல்லாமல் வேலைக்குச் செல்வதாக வீட்டிலிருந்து கிளம்ப முயற்சித்திருக்கிறார்.

மூன்றாம் மாடியிலிருந்து தரையில் விழுந்த குழந்தையை எடுத்த அயலவர்கள், உடனடியாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டியில் எடுத்துச் சென்றுள்ளனர். அத்தோடு, அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இம்ரானை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர் அயலவர்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் குழந்தை யூசுப் ஜன்னலால் வீசி எறியப்பட்டதாக குழந்தையின் தந்தை பாஷிலுக்கு செய்தி கிடைக்கிறது. அதிர்ச்சிக்குள்ளான பாஷில் வேகமாக வீட்டுக்கு திரும்பியபோது, குழந்தை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அத்தோடு, மனைவி பாத்திமா சுமையா வாக்கு மூலம் அளிப்பதற் காக பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். பாஷில் உடனே பொலிஸுக்கு சென்றபோது, வாக்குமூலம் அளித்த மனைவியையும் அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு செல்கின்றனர்.

எப்போதும் அவசர நிலைமையில் இருக்கும் சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலை இந்த சம்பவத்தால் மேலும் பரபரப்படைந்திருத்தது. வேகமாக ஓடிக்கொண்டு வந்த பாஷிலையும் சுமையாவையும் வைத்தியசாலை காவலர்கள் தடுக்கின்றனர், “நான், ஜன்னலால் வீசப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ள குழந்தையின் தந்தை” என அறிமுப்படுத்திக்கொண்ட பாஷிலை தனியே அழைத்துச் சென்றனர் வைத்தியசாலை ஊழியர்கள்.

“குழந்தையின் தலையில் பலமாக அடிபட்டுள்ளது. குழந்தை உயிரிழந்து 45 நிமிடங்களாகின்றன” என்று வைத்தியர்கள் கூறியது இன்னும் காதுக்குள் பேரிடியாக ஒலிப்பதாக கூறுகிறார் பாஷில். “பின்னர் குழந்தையை பார்த்தேன். அதிர்ந்து போனேன். நாடிப் பகுதியில் சிறு வெடிப்பு காயம் இருந்தது. மற்றப்படி உடலில் எந்த வெளிக் காயமும் தெரியவில்லை. என்னால் இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை. மனைவியும் மிகுந்த வேதனையுடன் இருந்தார்” என கூறுகிறார் பாஷில்

*அளவுக்கதிகமான ஐஸ் போதை பாவனைக்கு இம்ரான் ஆளாகி இருக்க வேண்டும். அவர் வீட்டில் இருக்கின்ற போது எப்போதும் முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் எனது பிள்ளையை தூக்கி எறியப்போவதாக கூறியிருந்தார். இந்நிலையில், நான் மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மல்வானைக்கு சென்றுவிட எதிர்பார்த்திருந்தேன். சம்பவ தினத்தன்று காலையில் எனது மனைவியிடம் இது பற்றி கதைத்துக் கொண்டிருந்தேன். தூங்குவதுபோல் நடித்துக்கொண்டிருந்த இம்ரானின் காதில் இது விழுந்திருக்க வேண்டும்” என மிகவும் மனவேதனையுடன் கூறினார் குழந்தையின் தந்தை.

சந்தேக நபரான 35 வயதுடைய நவாஸ் முஹம்மத் இம்ரான், அதீத ஐஸ் போதைப் பொருள் பாவனை காரணமாக உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு அங்கொட மனநல மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றுள்ளார். இவர் திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்றும் தெரிய வருகிறது.

“இந்த சம்பவத்தைப் பற்றி ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பேசிக்கொள்கின்றனர். எல்லோரும் கூறுவது போல் எனது மகன் இம்ரான் போதைப்பொருளுக்கு அடிமையானவன் அல்ல. அவர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்” என்றார் இம்ரானின் தந்தை முஹம்மது நவாஸ்,

எது எப்படியோ, பத்து மாதம் எத்தனையோ கஷ்டங்களை சந்தித்து சுமந்து, 18 மாதங்கள் தோளிலும் மார்பிலும் சுமந்து வளர்த்த பால்குடி மறவா குழந்தையை இழந்திருக்கிறார் தாய் சுமையா. அதுவும் தன் உடன் பிறந்த சகோதரனின் செயற்பாட்டினால் இந்த பேரதிர்ச்சியான அசம்பாவிதம் ஏற்பட்டமை அவருக்கு பல வகையிலும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குருவிக்கூடுபோல் காத்து வந்த குடும்பத்தில் இளம் பிஞ்சொன்றை இழந்த வேதனையில் தந்தை பாஷில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். தம்பியை இழந்த துயரம் முத்த சகோதரர்களான சுஹைலையும் யாக்கூபையும் ஆட்கொண்டிருக்கிறது.

தமது ஒரு பிள்ளையின் செயற்பாட்டால் தமக்கு பிறந்த இன்னொரு பிள்ளையின் குழந்தை (பேரப் பிள்ளை) உயிரிழந்திருக்கின்றமை நவாஸ் தம்பதியினரை மிகுந்த குழப்பகரமான துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

போதைப்பொருள் பாவனை இந்த குடும்பத்தை படுமோசமான முறையில் சிதைத்திருக்கிறது. நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அன்மைக்காலமாக பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள், ஏன் யுவதிகளும் கூட இந்த போதைக்கு அடிமையாகி சீரழிந் துக்கொண்டிருக்கின்றனர். ஐஸ்போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பள்ளிவாசல்கள் கவனம் செலுத்த வேண்டும் என கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அமைச்சர் விதுர விக்ரமநாயக்க முஸ்லிம் சமூகத்திடம் வேண்டியிருக்கிறார்.

எமது சமூகக் கட்டமைப்பில் பாரிய சரிவொன்று ஏற்பட்டிருக்கின்றமையை கிராண்பாஸ் சம்பவம் தெட்டத் தெளிவாக சொல்கிறது. எனவே, இது விடயமாக பள்ளிவாசல்கள், இஸ்லாமிய தஃவா அமைப்புகள், முஸ்லிம் சமூக தொண்டு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

எஸ்.என்.எம்.சுஹைல் (விடிவெள்ளி இதழ் 02-12-2022)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter