கபூரியா விவகாரம் : நாளை கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மஹரகம – கபூரியா அரபுக்கல்லூரியின் வக்பு சொத்துகளுக்கும், கல்வி நடவடிக்கைகளுக்கும் கபூரியா நிர்வாகத்தினால் சவால்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமைக்கு எதிராக பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கபூரியா அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு 14, கிரேண்ட் பாஸ் வீதியில் அமைந்திருந்த, கபூரியா வக்பு சொத்தான முன்னைய சுலைமான் வைத்தியசாலைக்கு முன்பாக ஜும் ஆ தொழுகையையடுத்து இடம்பெறவுள்ளது.

கபூரியா வக்பு சொத்து தொடர்பில் வக்பு சபையில் வழக்கு விசாரணையின் கீழ் உள்ள நிலையில் இப்பிரச்சினையை சமூக மயப்படுத்துவதற்காகவும், வக்பு சொத்து தொடர்பில் மக்களின் ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் ஐ.எல்.டில்சாட் மொஹமட் தெரிவித்தார்.

இதே வேளை கபூரியா அரபுக்கல்லூரியின் நிர்வாகிகள் கல்லூரிக்கு புதியவோர் அதிபரை நியமித்துக் கொள்வதற்காக மாவட்ட நீதிமன்றின் உத்தரவொன்றினைப் பெற்று புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருந்த அதிபர் பதவி விலக்கப்படாவிட்டாலும் அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டு புதிய அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்தோடு கடந்த 18 ஆம் திகதி மாலை கபூரியா கல்லூரி பள்ளிவாசலில் பழைய அதிபர் மற்றும் மாணவர்கள் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தபோது நிர்வாகத்துடன் தொடர்புடைய ஒருவருக்கும் பழைய அதிபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை மாணவர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். அப்போது சில மாணவர்கள் தாக்கப்பட்டனர். ஒரு மாணவர் காயங்களுக்குள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுதினம் வெளியேறினார். இது தொடர்பில் குறிப்பிட்ட மாணவரினால் மஹரகம பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

கபூரியா அரபுக்கல்லூரியில் தற்போது சுமார் 65 மாணவர்கள் பயில்வதாகவும் கல்லூரியின் கல்விக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் விலகிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி இதழ் 01-12-2022

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter