ஜும்ஆத் தொழுகை தொடர்பான சுற்று நிருபத்தை இரத்து செய்க

கொவிட் தொற்று காலத்தில் வெளியிட்ட ஜும்ஆத் தொழுகை தொடர்பான சுற்று நிருபத்தை இரத்து செய்க, திணைக்களத்திடம் வக்பு சபை வேண்டுகோள்

கொவிட் 19 தொற்று காலத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை ஜும்ஆ பள்ளிவாசல்களில் மாத்திரமன்றி ஏனைய பள்ளிவாசல்கள் மற்றும் தக்கியாக்களிலும் தொழமுடியும் என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தை இரத்துச் செய்து ஜும்ஆ தொழுகையை ஜும்.ஆ பள்ளிவாசல்களில் மாத்திரமே தொழமுடியும் என்பதை பள்ளிவாசல்களுக்கு அறிவிக்கும்படி வக்பு சபை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைக் கோரியுள்ளது.

ஜும்ஆ தொழுகை ஜும்ஆ பள்ளிவாசல்களில் மாத்திரமே தொழமுடியும். ஜும்ஆ பள்ளிவாசல் அல்லாத பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை நடாத் துவதென்றால் அதற்கான காரணங்களைக் கூறி வக்புசபையிடம் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தீர்மானம் ஏற்கனவே திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வக்பு சபையின் தலைவர் சட்டத் தரணி சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றுக் காலத்தில் மக்கள் ஜும்ஆ தொழுகைக்காக பெருமளவில் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் ஏனைய பள்ளிவாசல்கள், தக்கியாக்களில் ஜும்ஆ தொழுகை நடாத்துவதற்கு வக்பு சபை மற்றும் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஜும்ஆ தொழுகை தொடர்பில் அண்மையில் முஸ்லிம் சமய பண்பாட் அவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சூரா கவுன்ஸில், ஷரீஆ கவுன்சில் மற்றும் சூபி தரிக்காக்களின் உயர் பீடம் என்பவற்றின் பிரதி நிதிகளை அழைத்து கலந்துரையாடலொன்றினை நடத்தியிருந்தார். அக் கலந்துரையாடலின் பின்பு குறிப்பிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை ஜும்ஆ பள்ளிவாசல்களில் மாத்திரமே நடாத்தப்பட வேண்டும். என ஏகமனதாக தீர்மானித்திருந்தனர்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஷரீஆ கவுன்ஸில் மற்றும் சூபி தரிக்காக்களின் உயர்பீட உறுப்பினர்களுக்குமிடையில் அமைச்சில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. திணைக்கள பணிப்பாளரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இக் கலந்துரையாடலின்போது அமைச்சர் குறிப்பிட்ட சுற்று நிருபத்தை இரத்துச் செய்யுமாறு திணைக்கள பணிப்பாளரைப் பணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அறிக்கையும் மாவட்ட ரீதியில் பெற்றுக்கொள்ளப் பட்டது.

ஜும்ஆ தொழுகை தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ‘கொவிட் காலத்தில் வெளியிட்ட சுற்று நிருபத்தை ரத்துச் செய்து ஜும்ஆ பள்ளி வாசல்களில் மாத்திரம் ஜும்ஆ தொழுவதற்கான உத்தரவினை வழங்குமாறும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு இதனை அறிவிப்புச் செய்யுமாறும் திணைக்களத்தைக் கோரியுள்ளோம் என்றார். எனினும் இந்தச் செய்தி எழுதப்படும்வரை இதுதொடர்பில் திணைக்களத்திடமிருந்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை.

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter