வேலை வாங்கி தருவதாக கூறி, இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் வரவழைத்து ஓமானில் விபசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் ஆள் கடத்தல் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இலங்கை பெண்கள் சிலர் கடந்த 15 ஆம் திகதி காலை பலவந்தமாக ஓமானிற்கு அழைத்து செல்லப்பட்டதையடுத்து இது தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
ஓமானில் இருந்து நாடு திரும்பிய பெண்ணொருவர் தான் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது என்றார், ‘கடந்த வருடம் அக்டோபர் மாதம் டுபாய் ஊடாக ஓமானுக்கு தொழிலுக்காக சென்றேன். அங்கு நான் கடுமையான பிரச்சினைகளை எதிர் கொண்டேன். எனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. குஷான் என்பவரிடம் இது தொடர்பில் முறையிட்டேன். என்ன வேண்டும் என்று கேட்டார்? நான் என்னை நாட்டிற்கு அனுப்புங்கள் என்றேன். உடனே அவர் என்னுடைய தோளில் கை போட்டார் என்னை இழுத்தார். நான் அவரை தள்ளிவிட்டேன். வேண்டாம் சேர். இத்தகைய தொழிலுக்கு நான் வரவில்லை என்றேன் அதற்கு அவர் என்னுடன் இணங்கினால் நான் நாட்டிற்கு அனுப்பி வைப்பேன்’ என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட மற்றுமொரு பெண் அங்கு நடந்த அவலங்கள் தொடர்பில் விபரிக்கையில், ‘நாட்டிற்கு செல்ல வேண்டும் என கூறினோம். உங்களை நாட்டிற்கு அழைத்துச் செல்ல 7 முதல் 12 இலட்சம் வரையில் பணம் வேண்டும். அதனை சம்பாதியுங்கள் என்றார். அவருக்கு விபசார விடுதிகள், பெண்களை விற்பனை செய்பவர் மற்றும் துன்புறுத்துபவர்கள் உடன் நேரடி தொடர்பு இருக்கிறது. அதை நான் காதால் கேட்டேன். கண்களால் பார்த்தேன். அவர் வெளியில் சென்று விபசார விடுதி நடத்துபவர்களுடன் இணைந்து செயற்படுமாறு எம்மை தாக்கினார்’ என்றார்.
ஓமான் நாட்டிற்கு சட்ட ரீதியாக 19,000 பேர் தொழிலுக்காக சென்றுள்ளனர். தற்போது நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள பெண்கள் ஓமானிற்கு சட்டரீதியாக சென்றிருக்கவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் ஈ.டீ.பீ. சேனநாயக்க கூறினார், “ மனித ஆட்கடத்தல்காரர்களின் பொய்யான வார்த்தைகளுக்கு மயங்கி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பொய்யான தகவல்களை வழங்கி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். குறித்த பெண்கள் முதலில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து ஓமான் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளனர். முறையான விதத்தில், சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அங்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக பாதுகாப்பு மையங்கள் நிறுவியுள்ளோம். இருப்பினும் தற்போது அந்த 77 பெண்களும் இலங்கை பெண்கள் என்ற வகையில் மனிதாபிமான ரீதியில் உதவ வேண்டியுள்ளது.
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்குச் செல்லும் போது அந்த சந்தர்ப்பத்தில் சிக்கல்கள் ஏற்படுமாயின் அதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். இது முறையற்ற பயணமாகும். இதற்காக நாம் பாரியதொரு தொகையை அபராதமாக செலுத்த வேண்டி ஏற்படும்” என்றார்.
இதேவேளை குறித்த மனித ஆட்கடத்தல்காரர்கள் சம்பந்தமான பல்வேறு விடயங்களை நாம் கண்டறிந்துள்ளோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரி கபில கருணாரத்ன குறிப்பிடுகிறார்.
‘இந்த வருடத்தில் மாத்திரம் மனித ஆட்கடத்தல்காரர்கள் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வாறான மனித ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களின் உதவி முகவர்களை கைது செய்வதற்கு நாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.
மனித விற்பனை, ஆட்கடத்தல் ஒழிப்பு, சமுத்திர குற்றத்தடுப்பு பிரிவு மூலம் கடந்த சில வாரங்களாக ஓமானில் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறோம். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் இரண்டு ஆண்கள், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டு வந்துள்ளார். அங்கு அவர் தரகர் ஒருவராகவும் செயல்பட்டு வந்தமை தெரிய வந்துள்ளது’ என்றார்.
இந்நிலையில், வேலை பெற்றுத் தருவதாக கூறி, இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் வரவழைத்து ஓமானில் விபசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் ஆள் கடத்தல் சம்பவ வலையமைப்புடன் தொடர்புடைய, இலங்கையில் இருக்கும் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த ஆஷா திஸாநாயக்க எனும் பெண்ணே, கடந்த திங்களன்று சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவில் சரணடைந்ததைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக குறித்த பெண் சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. ஆரம்ப விசாரணையின் போது குறித்த பெண் வழங்கிய 4 முகவரிகளிலும் அவர் வசிக்காமல், தலைமறைவாக இருந்த நிலையில், அவரைக் கைது செய்ய தேடுதல்கள் நடாத்தப்பட்டு வந்தன. இவ்வாறான பின்னணியிலேயே அவர் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இவ்விவகாரத்தில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது சுற்றுலா வீசாவில் பெண்களை ஓமானுக்கு அனுப்பி விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பில் மூன்றாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 19 ஆம் திகதி, ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மொஹம்மட் றிஸ்மி மொஹம்மட் இன்சாப் எனும் வத்தளை மற்றும் தெஹிவளை பகுதிகளை சேர்ந்த 44 வயதான குறித்த சந்தேக நபரை 24 ஆம் திகதி வரை (இன்று) விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு பதில் நீதிவான் பிரியமால் அமரசிங்க உத்தரவிட்டிருந்தார். விசாரணைகளில் வெளிப்பட்ட தகவல்கலுக்கு அமைய ஏற்கனவே பெறப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை உத்தரவுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு இவ்வாறு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.
டுபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
மருதானையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய அலுவலகம் ஒன்றை நடத்தி வரும் குறித்த சந்தேகநபர், ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் இந்த கடத்தலுடன் தொடர்புடைய தரகர்களில் ஒருவராக செயற்பட்டதாக கூறப்படும் அவிசாவளை – புவக்பிட்டியவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் குகனேஷ்வரன் என்பவரையும் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். அவரை கடந்த ஞாயிறன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணையாளர்கள் ஆஜர் செய்த நிலையில், அவர் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பெண்களை ஓமானில் விபசாரத்தில் ஈடுபடுத்தும் திட்டமிட்ட நடவடிக்கை தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய விஷேட விசாரணைகள் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ. எம். சமரகோன் பண்டா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரச உளவுச் சேவை, சி.ஐ.டி. மற்றும் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரர் அடங்கிய சிறப்புக் குழு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமரகோன் பண்டா தலைமையில் கடந்த ஒக்டோபர் 3 ஆம் திகதி ஓமான் சென்று விசாரணைகளுக்கான வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது.
சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சில பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்காக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை அந்த விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான அவ்வாறான 45 பெண்களின் வாக்கு மூலங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
தூதரகத்தினால் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடமொன்றின் வீட்டிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமரகோன் பண்டா தலைமையிலான குழுவினர் விசாரணைகளை நடாத்தியுள்ளனர். தற்போது குறித்த ‘ சுரக்ஷா’ எனும் அந்த பாதுகாப்பு இல்லத்தில் 90 பெண்கள் வரை தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் சிறப்பு பொலிஸ் குழு முன்னெடுக்கும் விசாரணைகளில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களை விட மேலும் 8 உப முகவர்களைக் கைது செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது. இதனைவிட, ஓமானில் உள்ள இலங்கை தரகர்கள் 7 பேர், இந் நாட்டில் உள்ள 15 தரகர்கள், டுபாயில் இருக்கும் இலங்கை தரகர்கள் 7 பேர் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ள விசாரணையாளர்கள் அவர்களை விசாரணை வலயத்துக்குள் வைத்துக்கொண்டு மேலதிக விசாரணைகளை தொடர்வதாக தகவல்கள் தெரிவித்தன.
வீட்டுப் பணிப் பெண் வேலைக்காக அழைத்துச் செல்வதாக கூறி, இலங்கையில் பெண்களை ஆட்சேர்பு செய்து, சுற்றுலா வீசாவில் முதலில் டுபாய் நோக்கி அழைத்து செல்வதும், பின்னர் அங்கிருந்து அல் புரைமி எல்லை ஊடாக ஓமானுக்கு கடத்தப்படுவதும், அங்கு ஏல விற்பனையில் பாலியல் அடிமைகளாக விற்கப்படுவதும் குறித்த தகவல்களும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையாளர் தரப்பு தகவல்கள் குறிப்பிட்டன.
தற்போதும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில், முதலில் கைது செய்யப்பட்ட 44 வயதான நபர், மருதானை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் நடாத்தும் நிலையில், அதனூடாக இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை சாட்சியங்கள் ஊடாக வெளிப்பட்டதால் அவரைக் கைது செய்ததாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.
இதனைவிட, அவிசாவளையில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அட்டன் உள்ளிட்ட மலையகத்தை சேர்ந்த பெண்களை வீட்டுப் பணிப் பெண்களாக வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி விபசார நடவடிக்கைகளுக்காக அனுப்ப தரகராக செயற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. டுபாயில் 16 பெண்கள் இவ்வாறு ஓமானுக்கு கடத்தப்பட தயாராக ஒரு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாடகர் துஷான் வீரமன் சி.ஐ.டி.யில் செய்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ள சம்பவத்துடனும் குறித்த தரகர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை இந்த சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தில் மூன்றாம் செயலராக பணியாற்றும் ஈ. குஷான் எனும் அதிகாரியை உடனடியாக பணி இடை நிறுத்தம் செய்ய இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் பாராளுமன்றில் உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதியில்லாமல் ஓமானுக்கு சென்ற 77 பெண்களும் டுபாய்க்கு சென்ற 77 பெண்களும் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்பேற்கவுள்ளது என தெரிவித்தார்.
இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஒருவருக்கு சுமார் 10 இலட்சம் ரூபா வரையில் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்பேற்கவுள்ளது. இதற்கான அனுமதி அமைச்சரவையின் ஊடாக பெறப்பட்டுள்ளது என்றார்.
விடிவெள்ளி இதழ் – 24-11-2022