ஆஜர்ன்டீனா சவூதியிடம் வீழ்ந்தது எப்படி?

போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எந்த அணி வெற்றி பெறும், இறுதிக் கோல் கணக்கு எப்படியிருக்கும் என்ற கேட்டபோது, தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்த போர்ச்சுகலின் முன்னாள் வீரர் ஒருவர் 4-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஜர்ன்டீனா வெல்லும் என்றார். உடனிருந்த இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் இன்னொருபடி மேலே போய் 5-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஜர்ன்டீனா வெல்லும் என்றனர்.

அவர்கள் மாத்திரமல்ல போட்டிக்கு முன்பு யாருமே ஆஜர்ன்டீனாவுக்கு எதிராக சவூதி அரேபியா வெற்றி பெறும் என்று கருதியிருக்க மாட்டார்கள். ஏன், ஒரு கோல் அடிப்பதுகூட சாத்தியமில்லை என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியாக முடிந்துவிட்டது ஆஜர்ன்டீனாவுக்கு எதிரான போட்டி.

சவூதி அரேபியா தரவரிசையில் 51-ஆவது இடத்தில் இருக்கிறது. ஆஜர்ன்டீனா அணி தரவரிசையில் 3 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த ஒரு புள்ளி விவரமே கணிப்புகள் எப்படியிருக்கும் என்று கூறிவிடும். கூடுதலாக கால்பந்து உலகில் ஜாம்பவானாக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி இருக்கும் அணி என்பதால் யாருக்கும் அந்த அணியின் வெற்றி மீது சந்தேகமே எழவில்லை.

சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக 36 போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத அணி, அடுத்ததாக 37 ஆவது போட்டியில் வெற்றியைப் பெற்று இத்தாலி அணியின் முந்தைய சாதனையைச் சமன் செய்யும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெஸ்ஸியின் அணிக்கு அதிர்ச்சியளித்துவிட்டது சவூதி அரேபியா.

சவூதி அரேபிய கால்பந்து வரலாற்றில் இது மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்துவிட்டது. தேசிய விடுமுறை அளித்துக் கொண்டாடும் அளவுக்கு சௌதி அரேபியாவில் மகிழ்ச்சி வெள்ளம் பாய்கிறது என்றே சொல்லலாம்.

மெஸ்ஸி பறிகொடுத்த பந்து!
போட்டி முழுவதும் சவூதி அரேபியாவின் கை ஓங்கியிருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் 48 ஆவது நிமிடத்துக்கும் 53-ஆவது நிமிடத்துக்கும் இடைப்பட்ட ஆறு நிமிடங்களில் மெஸ்ஸியின் அணியினரை நிலைகுலைய வைத்துவிட்டது சவூதி அரேபியா.
48-ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மையத்தில் இருந்து சவூதி அரேபிய வீரர்கள் கடத்தி வந்த பந்து, பெரிய அளவில் ஆஜர்ன்டீனா வீரர்களின் எதிர்ப்பின்றி பத்துப் பதினைந்து நொடிகளிலேயே கோல் வலைக்குள் சென்றது. சவூதி வீரர்களிடம் மெஸ்ஸி பந்தைப் பறிகொடுத்ததில்தான் அது கோல் வரை சென்றது. அல் சேஹ்ரி துல்லியமாக அதைச் செய்து முடித்தார். அடுத்த 5-ஆவது நிமிடத்தில் கிட்டத்தட்ட அதேபோன்ற இடத்தில் இருந்து சலேம் அல்-தாவ்சாரி மற்றொரு கோலை அடித்தார்.

ஆஜர்ன்டீனா அணி சறுக்கியது எங்கே?
போட்டியில் விசில் ஊதப்பட்ட தருணத்தில் இருந்தே ஆஜர்ன்டீனாவின் கால்கள்தான் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. சில நிமிடங்களிலேயே கோலை நோக்கிய அதிரடியான ஷாட்களை காண முடிந்தது. 10-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் மெஸ்ஸி எந்தப் பதற்றமும் இல்லாமல் கோல் அடித்து அணியின் நம்பிக்கையை உயர்த்தினார்.

மெஸ்ஸி அடித்த பந்து ஒருபக்கமாகச் சென்றபோது, மற்றொருபக்கமாகப் பாய்ந்து விழுந்தார் சவூதி அரேபியாவின் கோல் கீப்பர். அதன் பிறகும் அடுத்தடுத்து இரண்டு முறை சவூதி அரேபியாவின் கோல் வளைக்குள் பந்தைத் திணித்து ஆஜர்ன்டீனா அணி. அப்போதும்கூட திகைத்து நின்றிருந்தார் சவூதி கோல்கீப்பர். அவை ஆப்சைடாக அறிவிக்கப்பட்டதுதான் சவூதிக்கு பலம் தந்தது.

ஆனால் ஆட்டத்தின் பிற்பகுதியில் அதே சவூதி அரேபிய கோல் கீப்பர் கோலை நோக்கி வந்த பந்துகளை 5 முறை தடுத்தார். ஆட்டம் முழுவதும் ஆஜர்ன்டீனா அணி 69 சதவிகிதம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சவூதி அரேபியாவிடம் 31 சதவித நேரம்தான் பந்து இருந்தது.

ஆஜர்ன்டீனா அணி கோலை நோக்கி 15 முறை அடித்திருக்கிறது. அவற்றில் 6 ஷாட்கள் துல்லியமானவை. சவூதி அணியால் மூன்று முறைதான் கோலை நோக்கி அடிக்க முடிந்திருக்கிறது. அதில் இரண்டு துல்லியமான ஷாட்களும் கோல் கீப்பரால் தடுக்கப்படாமல் கோலாக மாறியதுதான் சிறப்பு. அவ்விரண்டும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான ஷாட்கள். ஒரே மாதிரி அடிக்கப்பட்டவை.

ஆஜர்ன்டீனா அணியை உலகக் கோப்பை போட்டி ஒன்றில் ஆசிய அணிகள் வீழ்த்திய வரலாறு இல்லை. இதற்கு முன் ஆசிய அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கின்றன.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் தென் கொரிய அணி, அப்போதைய சாம்பியனான ஜெர்மனியை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜெர்மனி போட்டியை விட்டு வெளியேறுவதற்கு அந்தத் தோல்வியே காரணமாக அமைந்தது. இதே சவூதி அரேபிய அணி 1994-ஆம் ஆண்டு பெல்ஜியம் அணியை வீழ்த்தியிருக்கிறது.
ஆனால் அவை எல்லாவற்றையும் விட ஆஜர்ன்டீனாவின் தோல்வி மிக மோசமானதாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முன் எந்த அணியும் 36 முறை தோல்விகளைச் சந்திக்காத பிறகு மோசமான தோல்வியைச் சந்திக்கவில்லை.

இனி ஆஜர்ன்டீனாவுக்கு என்ன வாய்ப்பு?
கத்தார் உலகக் கோப்பை சி பிரிவில் ஆஜர்ன்டீனா, சவூதி அரேபியா, போலந்து, மெக்சிகோ ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் இரு போட்டிகள் முடிந்திருக்கின்றன. இதில் ஆஜர்ன்டீனா – சவூதி அரேபியா போட்டியைத் தவிர போலந்து – மெக்சிகோ அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் முடிகிறது.

போட்டியில் வெல்லும் அணிகளுக்கு மூன்று புள்ளிகளும், சமநிலை செய்யும் அணிகளுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 4 அணிகளும் ஒரு போட்டியில் மோதியிருக்கும் நிலையில் சவூதி அரேபிய அணி மூன்று புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. போலந்தும், மெக்சிகோவும் தலா ஒரு புள்ளியுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. தோல்வியடைந்த ஆஜர்ன்டீனா அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

ஆஜர்ன்டீனா அணி எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவில் மெக்சிகோ அணியுடன் மோதுகிறது. அந்த அணி தர வரிசையில் 13-ஆவது இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த போட்டியில் டிசம்பர் 31-ஆம் திகதி நள்ளிரவில் போலந்து அணியுடன் மோத வேண்டும். அந்த அணி தர வரிசையில் 26-ஆவது இடத்தில் இருக்கிறது.
அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால் இவ்விரு போட்டிகளிலும் ஆஜர்ன்டீனா அணி வெற்றி பெற்றாக வேண்டும். தோல்வியடைவது அல்லது சமநிலை செய்வது ஆகியவை அடுத்த சுற்றுக்குச் செல்வதைப் பாதிக்கும். (பிபிசி)
விடிவெள்ளி இதழ் – 24-11-2022

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter