யார் இந்த கானிம் அல்-முஃப்தா?

கத்தார் ஃபிஃபா தொடக்க விழாவில் குர்ஆன் வசனங்களை ஓதிய இளைஞர்

கத்தார் மிகப் பிரமாண்டமான முறையில் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரை நடாத்துகிறது. இப் போட்டியை நடத்துவதற்காக அந்நாடு 220 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஃபிபா செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பில் உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் பெற்றது. வாக்கெடுப்பில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளை கத்தார் தோற்கடித்திருந்தது. அன்று முதலே உலக கோப்பை போட்டிகளை நடத்துவதை மிகப்பெரிய பெருமையாக கத்தார் அரசு கருதியது. மறுபுறம் அந்நாட்டின் மீதான விமர்சனங்களும் எழத் தொடங்கின.

இலஞ்சம் கொடுத்துதான் இந்தப் போட்டிக்கான உரிமையை கத்தார் பெற்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் விசாரணையில் அது நிரூபிக்கப்படவில்லை.
அதன் பிறகு தன்பாலின சேர்க்கை பிரசாரங்களுக்கு தடை, கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டு, மதுபானங்களுக்குக் கட்டுப்பாடு போன்றவற்றின் காரணமாக கத்தாருக்கு எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து, போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

கடந்த நவம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை அல் பைத் ஸ்டேடியத்தில் நடந்த 2022 உலகக் கோப்பையின் தொடக்க விழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெற்றன. அவற்றில் ஒன்றுதான் கத்தார் 2022 உலகக் கோப்பையின் தொடக்க நிகழ்வில் புனித அல் குர்ஆன் வசனம் ஓதப்பட்டு அதன் விளக்கம் ஆங்கிலத்தில் கூறப்பட்டமையாகும். உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் குர்ஆன் வசனங்கள் மூலமாக நிகழ்ச்சிகள் தொடங்கியது இதுவே முதல் முறை என்று வளைகுடா ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
புனித குர்ஆனின் வசனத்தை கானிம் அல்-முஃப்தா என்ற இளம் கத்தாரி அழகாக ஓதினார், அவர் குறிப்பாக சூரா அல்- ஹுஜுராத் வசனம் 13 ஐ மூத்த ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமேனுடனான தனது உரையாடலின் போது ஓதியதுடன் உலக மக்களிடையேயான ஒருமைப்பாட்டின் செய்தியை அதன் மூலம் வெளிப்படுத்தினார்.
ஃபிபா உலகக் கோப்பை 2022 இன் தொடக்க விழாவின் போது புனித குர்ஆனின் வசனங்களை ஓதிய இளைஞரான கானிம் அல்-முஃப்தா உண்மையில் யார்?

20 வயதான கானிம் அல் முஃப்தா Caudal Regression Syndrome எனப்படும் மரபு ரீதியிலான குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இந்தக் குறைபாட்டைக் கொண்டோருக்கு பிறக்கும்போதே உடலின் கீழ்பாதி பகுதி இருக்காது. சக்கர நாற்காலி மூலமாகவும், கைகளைத் தரையில் ஊன்றிய படியும் தான் நடக்க வேண்டும்.

கானிம் வயிற்றில் கருவாக இருந்தபோது கலைத்துவிடும்படி அவரது தாயிடம் பலரும் வலியுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை எனவும் கானிம் அல்-முஃப்தாவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நான் இடது காலாகவும் நீங்கள் வலது காலாகவும் இருப்போம்” என்று கானிமின் தாய் தனது கணவரிடம் கூறியதாகவும் அந்த இணையதளம் குறிப்பிடுகிறது.
உடலில் குறைபாடு இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தான் விரும்பிய துறைகளில் முன்னேறியதால் அவரது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரபலமாகி இருக்கிறது.

இன்ஸ்டாகிராம், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவரை பல இலட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இளம் தொழில்முனைவோரான அவர், ‘காரிஸா’ என்ற பெயரில் ஐஸ் க்ரீம் நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். இன்று ஆறு கிளைகள் மற்றும் 60 பணியாளர்களுடன், இந்நிறுவனம் வெளிநாடுகளிலும் வளைகுடா முழுவதும் விரிவடைந்துள்ளது.
தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையளிக்கும் உரைகளை நிகழ்த்துகிறார். ஸ்கூபா டைவிங், கால்பந்து, ஹைகிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் உள்ளிட்ட பல்வேறு தீவிர விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். வளைகுடா பகுதியில் உள்ள மிக உயரமான மலைச் சிகரமான ஜபல் ஷம்ஸில் கூட கானிம் ஏறியுள்ளார்.

எதிர்காலத்தில் இராஜதந்திரியாக வர வேண்டும் என்ற இலட்சியத்துடன் அரசியல் விஞ்ஞானத்தில் தனது கல்லூரிப் பட்டப்படிப்பைத் தொடர்ந்து வரும் கானிம், அல் குர்ஆனை மனனமிட்ட ஹாஃபிஸ் என்றும் அறியப்படுகிறார்.

தனது குடும்பத்தின் ஒத்துழைப்புடன் கானிம் அசோசியேஷன் எனும் நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

விடிவெள்ளி இதழ் – 24-11-2022

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter