ஆறு முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீங்குகிறது

ஆறு முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீங்குகிறது, நிபந்தனைகளுடன் இணக்கம்; வர்த்தமானி விரைவில்

தடை செய்யப்பட்டுள்ள 6 முஸ்லிம் அமைப்புக்களின் தடையை முற்றாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஐந்து நிபந்தனைகளை மையப்படுத்தி இந்த தடையினை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது.

அதன்படி, தௌஹீத் அமைப்புக்களாக அறியப்படும். ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (யூ.டி.ஜே.). சிலோன் தௌஹீத் ஜமாஅத் (சி. டி.ஜே.). ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.). அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ஏ.சி. டி.ஜே.). ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (ஜே.ஏ.எஸ். எம்.) மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஐ.எஸ். எம்.) ஆகியவற்றின் மீதான தடைகளை தளர்த்தவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதில், குறித்த அமைப்புக்களை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தடையினை விதித்த அரசாங்கம். தற்போது அத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிக்க அதே அமைப்புக்களிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளமை விஷேட அம்சமாகும்.

விடிவெள்ளிக்கு கிடைத்த தகவல்கள் பிரகாரம், தடையினை தளர்த்த பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ள 5 நிபந்தனைகளும் வருமாறு:

01 அமைப்புக்கு நிதி திரட்டல், செலவு செய்தல் தொடர்பில் வெளிப்படைத் தன்மை பேணப்படுகின்றது என்பதை உறுதி செய்து வருடாந்தம், பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்தல். பாதுகாப்பு அமைச்சு அது தொடர்பில் ஏதும் ஆலோசனைகள் வழங்கினால் அதனை பின்பற்றுதல்.

02 அமைப்புக்கள் முன்னெடுத்துச் செல்லும் கல்வி நிலையங்கள் தொடர்பில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துக்கு அறிவித்தல், கல்வி அமைச்சு அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு அமைய அவற்றை முன்னெடுத்து செல்லல்.

03 வெளிநாட்டிலிருந்து நிதியினை பெற்றுக்கொள்ளும் போது, மத்திய வங்கி அங்கீகரித்துள்ள முறைமைகளின் கீழ் பெற்றுக்கொள்ளல்.

04 அமைப்பின் உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்புக்கு அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல். உறுப்பினர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொறுப்புடன் நடந்து கொள்ளல்.

05 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும். இஸ்லாமிய தேசம் தொடர்பில் சமூக வலைத் தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களை முறியடிக்க எதிர் பிரச்சாரங்களை முன்கொண்டு செல்லவும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குதல்

குறித்த நிபந்தனைகளுக்கு மேலதிகமாக, குறித்த முஸ்லிம் அமைப்புக்கள் தடைகளை எதிர்த்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை, தடை நீக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் வாபஸ் பெற வேண்டும் என்பதும் முஸ்லிம் அமைப்புக்களுடன் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் (உளவுத்துறை அதிகாரிகள் ) முன்னெடுத்த கலந்துரையாடல்களின் போது நிபந்தனையாக முன்வைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

இவ்வாறான நிலையில், நிபந்தனைகளுக்கு, தடையை நீக்கக் கோரிய 6 முஸ்லிம் அமைப்புக்கள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், மிக விரைவாக அது குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டு தடை நீக்கம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொது மக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சியின் நலனில் அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அடிப்ப டைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்வதாக அதிவிசேட வர்த்தமானியை வெளி யிட்டு அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்) விடிவெள்ளி இதழ் 24/11/2022 பக்கம் 01

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter