உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா?

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் தொகையை 8000 லிருந்து 4000 ஆக குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த முன்னெடுப்புக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்காக தேசிய எல்லை நிர்ணய குழுவொன்றினை அண்மையில் நியமித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்பு நடத்த வேண்டியுள்ள நிலையில் ஏன் இந்த எல்லை நிர்ணய குழு? என பல தரப்பிலிருந்தும் கேள்வி தொடுக்கப்படுகிறது. எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவொன்றினை நியமித்திருப்பது உள்ளூராட்சி தேர்தலை பின்தள்ளுவதற்கே என்று எதிர்க்கட்சிகள் அரசின் மீது குற்றம் சுமத்தி வருகின்றன.

இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய குழு, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தடையாக அமையுமா என்று தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு அமைய, சட்டப்படியான தடைகள் எதுவும் இல்லாவிட்டால் அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இந்த அறிவித்தலை வெளியிடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்குப் பின்னர் கிடைத்துள்ளது. தற்போது இடம் பெற்றுவரும் தேர்தல் இடாப்பு திருத்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையிலே பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் எல்லை நிர்ணயம் தொடர்பில் தேசிய குழுவொன்றினை நியமித்துள்ளார். இது பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளார்.

இந்த எல்லை நிர்ணய குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜயலத்ரவி திசாநாயக்க, டப்ளியூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை செயற்படவுள்ளது. அவ்வாறெனில் எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்பு உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியுமா? என்பது சந்தேகமே. இதனாலே இந்தக் குழு தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளுக்கு தடையாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

நாடு தீவிர பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உட்பட மின்கட்டணம், போக்குவரத்து கட்டணம் என்பன உச்சம் தொட்டுள்ளன. மருந்து பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. பல மருந்துகளுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. மக்கள் வறுமைக் கோட்டுக்கும் அப்பால் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தேர்தல் ஒன்றினை எதிர்கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை. அவ்வாறு தேர்தலொன்று நடத்தப்பட்டால் அரசாங்கம் படுதோல்வியை எதிர்நோக்க வேண்டியேற்படும். இதனாலேயே தேர்தலைப் பிற்போடுவதற்காக எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி பிரசாரம் செய்து வருகிறது.

2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் இவ்வாறான ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின் பணிகள் 2015 ஆம் ஆண்டு நிறைவுற்றன. மேலும் 2017 ஆம் ஆண்டு கே.தவலிங்கத்தின் தலைமையில் மாகாண சபைகள் தொடர்பில் எல்லை நிர்ணயத்துக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கையளிக்கப்பட்டதுடன் அக்குழுவின் பணிகள் நிறைவுக்கு வந்தன. தற்போது மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்க 4 மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த முதலாம் (நவம்பர்) திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளமை தேர்தலை பிற்போடுவதற்காகவே என எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதுடன் குழுவின் தலைமைப்பொறுப்பினை ஏற்றுள்ள மஹிந்த தேசப்பிரிய மீதும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளமை அரசாங்கத்தின் தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு துணைபோவதாகும் என்று குற்றம் சுமத்தியுள்ளன.

மஹிந்த தேசப்பிரிய அரசியல் யாப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவர் இந்தப் பதவிக்கு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச்சட்டம் தற்போது அமுலில் உள்ளதால் எல்லை நிர்ணய ஆணைக்குழு உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். என்றாலும் புதிதாக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படும்வரை இதுவரை காலம் இயங்கி வந்த ஆணைக்குழுக்கள் செயற்படும். இதற்கிணங்கவே மஹிந்த தேசப்பிரிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக தொடர்ந்தும் செயற்படுகிறார்.

மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 2012 ஆம் ஆண்டு கலப்பு தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றங்களது எல்லைகளை நிர்ணயிப்பதற்காக 2012 இல் எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழு 2015 இல் தனது அறிக்கையை கையளித்தாலும் அந்த அறிக்கை தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மீளாய்வுக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அந் நடவடிக்கை 2017 ஆம் ஆண்டுவரை நீடித்தது.

தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களது எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அதற்காகவே எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உ-றுப்பினர்களது எண்ணிக்கையை குறைக்கும் பிரேரணைக்கு கடந்த அக்டோபர் 17 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதனடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது. அதன்மூலம் உறுப்பினர்களது எண்ணிக்கையும் குறையவுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதென்றால் எல்லை நிர்ணயம் மீள மேற்கொள்ளப்பட வேண்டும். இதனடிப்படையிலே எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களைப் போன்று யாப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் குழுவுக்கு நியமிக்கப்படவேண்டுமென ஆணைக்குழு வேண்டியதற்கிணங்கவே தான் இக்குழுவுக்கு நியமனம் பெற்றுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

எல்லை நிர்ணயம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள இத்தேசிய குழுவுக்கும் தேர்தல் பிற்போடப்படுவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இக்குழுவினால் ஒருபோதும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது என குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எமது குழுவின் பணிகள் நிறைவுற்று உறுப்பினர்கள் தொகை குறைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதா? அல்லது தற்போது உள்ள 8000 உறுப்பினர்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதா? என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். தேவையேற்படின் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை குறைப்புச் செய்வதற்கு முன்பும் தேர்தலை நடத்தலாம். எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்பு எல்லை நிர்ணய பணியினை நிறைவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தலை பிற்போடுவதற்கான தேவை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை என்பது தெரிகிறது என்றாலும் அரசியல் வாதிகள் எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி தேர்தலைப் பின்தள்ளும் நிலைமை காணப்படுகிறது.

மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழு தனது அறிக்கையை குறிப்பிட்ட தினத்துக்கு முன்பு உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளித்தாலும் அவ்வறிக்கை பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுனவுக்கே இருக்கிறது. தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக அக்கட்சி தேர்தல் ஒன்றினை எதிர்கொள்ள தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. அதனால் எல்லை நிர்ணய அறிக்கையை அக்கட்சி பாராளுமன்றத்தில் நிராகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு நிராகரிக்கப்பட்டால் மீண்டும் மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டு அறிக்கை திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலைமை காலத்தை நீடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

முதன் முதல் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய செயற்பாடுகள் 2012 முதல் 2017 வரை நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

2017இல் மாகாண சபைகளுக்கென கலப்பு தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு மாகாண சபை அதிகார எல்லையை நிர்ணயிப்பதற்காக எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. கே. தவலிங்கம் தலைமையில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய குழு தனது அறிக்கையை 2018 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தது. ஆனால் பாராளுமன்றம் அவ்வறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

அதன் பின்பு அவ்வறிக்கை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான மீளாய்வுக்குழுவுக்கு பாரப்படுத்தப்பட்டது. மீளாய்வுக் குழு இரண்டு மாதங்களில் தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவேண்டியிருந்தது. ஆனால் இது நடைபெறவில்லை. அதனாலே மாகாண சபைகளினது தேர்தல் இதுவரை நடைபெறவில்லை.

அன்றிருந்த அரசியல் தலைவர்களே இன்றும் இருக்கிறார்கள். அன்றுபோல் இன்றும் அரசாங்கம் தேர்தலை நடாத்துவதில் அக்கறை கொள்ளவில்லை.

மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழு தனது அறிக்கையை குறிப்பிட்ட கால எல்லைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்துவதற்குள்ள சவால்கள் குறிப்பிட்டளவு மட்டுப்படுத்தப்படும்.
ஏ.ஆர்.ஏ.பரீல்

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter