மர்ஹூம் N.P புஹார்தீன் ஹாஜியார்- முஸ்லீம் அரசியல், பொருளாதாரத்தில் ஆற்றிய பங்கு

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் என். பி. புஹார்தீன் முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிக்கு உயிர் மூச்சாக செயற்பட்ட ஒருவர். முஸ்லிம் காங்கிஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் அவர்களுடன் இணைந்து கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு அவர் ஆற்றிய பணி மகத்தானது. தேசிய அரசியல் நீரோட்டத்தில் முஸ்லிம்களது அடையாளத்தை ஊன்றிப் பதித்த எம். எச். எம். அஷ்ரபுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஹெலிகாப்டரில் உலா வந்த ஒருவர். அத்தோடு புஹார்தீன் அவர்கள் ஆடைத் தொழிற் பேட்டை ஆரம்பித்து அந்நிய செலாவணியை ஈட்டுவதில் இலங்கைக்குள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். அக்குறணை பெயார்லைன் ஆடைத் தொழிற்சாலை கூட அவர் எழுப்பியதுதான்.

அவருடைய எண்ணக்கருவினை அக்காலத்தில் இருந்த அரசாங்கம் உள்வாங்கி நாடளாவிய ரீதியில் ஆடைத் தொழிற்சாலைகளைத் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு செயற்படத் தொடங்கியது. அதை அடியொட்டி மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசவினால் 200 ஆடைத் தொழிற்சாலைகள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கைப் பொருளாதார மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பணி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஒருவரான மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் என். பி. புஹார்தீன் 2009 இல் இயற்கை எய்தினார். அவர் தொடர்பில் அக்குறணை ஐடெக் கல்வி நிறுவனத்தின் இயக்குனரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் மாணவர்களின் அனுமதிக்கான வளவாளராக செயற்படும் ஐ.ஐனுடீன் கூறிய கருத்துக்கள்….

கேள்வி: நீங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என். பி. புஹார்தீன் ஹாஜியார் பற்றிக் கூறுவீர்களா?

இவரின் தந்தை நூர் முஹம்மது. தாயார் நபீஸா உம்மா. 1936 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி பிறந்தார். குடும்பத்தில் புஹார்தீன் மூத்தவர். இவருக்கு ஒரு தம்பியும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.ஐந்து வயதில் தாயார் மரணம் எய்தி விட்டார். பாட்டியே அவர்களை பராமரித்து வந்தார்.

இவர் ஆரம்பக் கல்வியை மாவத்தப்பொல முஸ்லிம் பாடசாலையில் கற்றார். தந்தையின் சாதாரண பொருளாதார நிலைக்கு ஏற்ப அவர் தன் கல்வியைத் தொடர்ந்தார்.தந்தைக்கு ஆங்கிலக் கல்வி புகட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் தமது மகனை கடையிலே நிறுத்தி குருநாகல் கிறிஸ்தவ தேவக் கல்லூரியில் ஆங்கிலக் கல்வி பயில்வதற்கு வழி செய்தார். அக்கால கட்டத்தில் கல்லூரியில் ஆசிரியர்களின் அபிமானத்தையும் பாராட்டையும் பெற்ற ஒருவர். அவருடைய திறமையை ஆசிரியர்களும் மாணவர்களும் வியந்து பாராட்டப்படக் கூடிய முதன்மைமிக்க மாணவராகத் திகழ்ந்தார். பாடசாலையின் சாரணிய இயக்கத்திலும் சேர்ந்து தனது எதிர்கால வாழ்க்கை முற்னேற்றத்திற்கான பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர். படிப்பிலும் விளையாட்டிலும் திறமை பெற்றுத் திகழ்ந்த இவர் எஸ். எஸ். ஸி வரையும் கற்றார். தந்தை ஒரு வியாபாரியாக இருந்தமையால் தானும் வியாபாரத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஊக்கமும் ஆர்வமும் இருந்தன. அந்த வகையில் மொத்த வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆசையை ஊட்டியவர் தந்தையாவார். அவருக்கு தாயாகவும் விளங்கியவர் தந்தை தான்.

N.P Buhardeen

கேள்வி: அவருடைய முதல் வியாபார அனுபவங்களைக் கூற முடியுமா?

1957 ஆம் ஆண்டு தான் புஹார்தீன் ஹாஜியார் முதல் முதலில் வியாபாரத்தில் களமிறங்கினார்.தொழில் புரிவதற்காக அவர் தந்தை மூலதமாக ஐந்நூநு ரூபாய் வழங்கியுள்ளார்.இப்பணம் போதா விட்டால் தன்னிடமுள்ள ஒரே சொத்தான சிறு காணித் துண்டு ஒன்றையும் விற்று அந்த பணத்தையும் எடுத்துக் கொள்ள முடியும் என்று அப்போது தந்தை அவரிடம் கூறினார்.

அவர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு கொழும்பு சென்றார். முதன் முதலில் மலிபன் வீதியில் உள்ள 114 ஆம் இலக்க சிறிய அறையொன்றில் தன் வியாபார முயற்சியை ஆரம்பித்தார். யெஸ்மின் டிரேடிங் கம்பனி என அதற்குப் பெயர் சூட்டினார்.

“ரெடிமேட்” பொருட்களை தன்னுடைய சூட்கேஸில் இட்டு கொழும்பு, கண்டி, மாத்தளை, குருநாகல் போன்ற முக்கியமான நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார்.

N.P Buhardeen (Old Photo)

1958 இல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி குறித்த வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தி ‘பெயர்லைன் டிஸ்ரிபியூட்டர்” என்ற பெயரில் மேலும் விஸ்தரிக்கப்பட்டது. 1963 இல் ‘பெயர்லைன் இன்டர்ஸ்ட்ரீஸ் எண்ட் டிஸ்ரிபியூட்டஸ்” என்ற பெயர் மாற்றத்தோடு ஏழு தையல் மெசின்களைக் கொண்ட ஒரு சிறிய ஆடைத் தொழிற்சாலையை ஆரம்பித்தார். ஆனால்,ஆறு வருடங்கள் அவர் அடைந்த கஷ்ட, நட்டங்கள் அளப்பரியது, அது வாழ்க்கைப் போராட்டம் என்பதை விட அது வியாபாரப் போராட்டம் என்றால் பொருந்தும். அந்தளவுக்கு வியாபாரத்தில் அவர் பலத்த சவால்களை எதிர் நோக்கினார். அவர் ஆறு வருடங்களில் ஐந்து முறை வியாபாரத்தில் வங்குரோத்து நிலையை அடைந்தார், ஆனாலும் அவர் முயற்சியைக் கை விடவில்லை. இறைவன் கைகொடுப்பான் என்ற ஒரு திடமான நம்பிக்கையில் தன் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கண்டு அவர் சோர்ந்து போய் விடாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார்.

1965 இல் கூட்டிணைந்து வியாபாரத்தை மீளவும் விஸ்தரித்தார். வியாபாரத்தை பல இடங்களுக்கும் கொண்டு சென்றார். அவர் மன உறுதியோடு முயற்சிகளில் ஈடுபட்டார் என்று ஈண்டு குறிப்பிடலாம்.

1974 இல் கஸ்கிஸ்ஸையில் நவீன இயந்திர சாதனங்களுடன் ரெடிமேட் ஆடை அணிகலன்களை தயாரிக்கும் கைத்தொழில் பேட்டை ஒன்றை பெரியளவில் ஆரம்பித்தார். 1978 இல் அமெரிக்க நிறுவனமொன்றுடன் ஒன்றிணைந்து அக்குறணையில் “பெயர்லைன்” என்ற ரேடிமேட் ஆடைத் தொழிற்சாலையை ஒன்றையும் ஆரம்பித்தார்.

N.M Abdul Hameed

அதைத் தொடர்ந்து கண்டியிலும் இன்னுமொரு ஆடைத் தொழிற்சாலை ஆரம்பமானது. இவ்வாறு இன்னும் பல இடங்களில் பல வியாபார முயற்சிகளை ஆரம்பித்தார்.

அக்குறணை பெயர்லைன் நிறுவனத்தின் நிருவாக இயக்குனராக இவரின் உடன் பிறந்த தம்பி என். எம். அப்துல் ஹமீத் கடமையாற்றினார்.

இவரை எல்லோரும் சின்ன முதலாளி என்று அழைப்பார்கள். இந்த ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாக முகாமையாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடமையாற்றியுள்ளார். இங்கு இருந்துதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீமின் அரசியல் பிரவேசம் ஆரம்பமாகிறது.

கேள்வி: நீங்கள் புஹார்தீன் ஹாஜியாரின் சமூகப் பணிகள் பற்றிக் கூற முடியுமா?

சமூக பணிக்காக அறக்கட்டலை ஒன்றை நிறுவினார்.அக்குறணைக்கு புஹார்தீன் ஹாஜியார் வருகிறார் என்ற செய்தி அறிந்தால் அன்றைய தினம் பெயர்லைன் ஆடை தொழிற்சாலைக்கு சனம் நிறைந்து விடும். ஏனென்றால் கடன் தொல்லையால் கஷ்டபப்படுபவர்கள், வறுமையின் காரணமாக கரைசேர்க்க வழியின்றி பல வயது வந்த பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், தொழில் புரிவதற்குப் போதிய மூலதனமின்றி அல்லல்படும் குடும்பத்தினர்கள், கட்டிய வீட்டை முடிப்பதற்கு பணமின்றி தவிக்கும் குடும்பங்கள். பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல் இன்னும் பல பொருளாதாரப் பிரச்சினைகளால் மனமுடைந்து அல்லலுற்றவர்கள் அனைவரினதும் பிரச்சினைகளுக்கு ஒரு பரிகாரம் காணும் ஒருவராக அக்குறணைக்கு மட்டுமல்ல நாடளாவிய ரீதியில் விளங்கினார்.

அவை மட்டுமல்ல எத்தனையோ பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், ஆநாதை நிலையங்கள், சமூக சேவை அமைப்புக்கள், பள்ளிக் கூடங்கள், பிற மதப் பள்ளிக் கூடங்கள், நூல் நிலையங்கள், கலாசார நிலையங்கள் ஏனைய பொதுப் பணி ஸ்தாபனங்கள் அனைத்துக்கும் இல்லை என்று சொல்லாது தன் பணத்தை வாரி வழங்கி வந்தார்.

கேள்வி:தர்மம் தலைகாக்கும் என்ற வாய்மொழிக்கு ஏற்ப அவர் ஒரு கார் விப்பத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பியதாக அறிகின்றோம். அவை பற்றிக் கூறுவீர்களா?

1958 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி அதாவது இலங்கை முன்னாள் பிரதமர் எஸ். டப்லியூ. ஆர். டி. பண்டாரநாயக உயிரிழந்த தினம். அவருடைய நண்பருடன் கொழும்பு செல்லும் போது களனிப் பிரதேசத்தில் “தாச” என்ற கம்பனிக்கு முன்னால் அவரின் கார் பயங்கரமான விபத்திற்கு உள்ளாகியது. காருக்கு பலத்த சேதம்.

காரை செலுத்திய அவரது நண்பருக்கு சற்று நித்திரை ஏற்பட்டதினால் இந்தக் கோர விபத்து ஏற்பட்டது. அவர் அக்காலத்தில் வழங்கிய தர்மங்கள் தான் அல்லாஹ்வின் துணையினால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.அவர் இவ்விபத்துப் பற்றிக் கூறும் போது “அதை நினைத்தால் இன்னும் மெய் சிலிர்க்கிறது” என்று கூறுவார். இந்த விபத்துப் பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வார்.

கேள்வி:அவர் ஆரம்ப காலத்தில் எதிர்நோக்கிய சவால்கள் பற்றிக் கூற முடியுமா?

வியாபாரப் பொருட்களை விநியோகிப்பதற்காக “பினான்ஸ்” முறையில் மாதாந்தம் கட்டணம் செலுத்துவதற்கு ஒரு வேனை வாங்கியிருந்தார். அதனைக் கட்டிக் கொள்ள முடியாமைப் போனமையினால் அந்நிறுவனத்தினால் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு அதனைத் தொடர்ந்து முயற்சியைக் கை விடாது உழைத்தமையால் வெற்றி இலக்கை நோக்கி பயணம் செய்தார்.

1963 இல் கடைக்கு வாடகை வரி கட்டுவதற்கும் வழியின்றி இருந்தார். தோல்விகளை எல்லாவற்றையும் ஒரு சவாலாக எதிர் கொண்டு வெற்றிகளை தனதாக்கிக் கொண்டார்.

கேள்வி: புர்ஹானுதீன் ஹாஜியாருக்கு உங்களுக்கும் என்ன தொடர்பு?

என் தந்தை ஒரு யூனானி ஆயுர்வேத வைத்தியர். அவர் பெயர் இஸ்ஸதீன். புஹார்தீன் ஹாஜியார் வைத்திருந்த கடைக்கு முன்னால்தான் என் தந்தையுடைய மருத்துவ நிலையம் அமைந்திருந்தது.கொழும்பில் என்னுடைய தந்தையின் அறையில் அவர் சிறுது காலம் தங்கியிருந்துள்ளார். இருவரும் அக்குறணைக்கு வரும் போது சேர்ந்து வருவார்கள். இவருக்கிடையே மிக நெருக்கமான நல்லுறவு இருந்தது.அக்காலங்களில் அவர்கள் எங்கள் இல்லம் அடிக்கடி வருவதுண்டு. அவருடைய குடும்பங்களே கூடுதலான காலங்களில் அக்குறணை பள்ளிவாசலின் தலைவர்களாக இருந்துள்ளார்கள்.

கேள்வி:நீங்கள் அவர் குறித்து வேறு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.?

அக்காலத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய வர்த்தகப் பிரமுகர்களே அக்குறணையில் இருந்தார்கள். அவருக்கு பின்பு பெரு எண்ணிக்கையிலான வர்த்தகப் பிரமுகர்கள் உருவானார்கள்.

சிறு பராய முதல் புர்ஹான் ஹாஜியாருடைய மிக உற்ற நண்பனாக மறைந்த அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத் அவர்கள் இருந்துள்ளார். அவருடைய வர்த்தக முயற்சிகளுக்கும் வெற்றிக்கும் உந்து சக்தியாக மறைந்த அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத் அவர்கள் பின்புலமாக இருந்தார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஹமீதுடைய அரசியல் எழுச்சிக்கு அவருடைய குடும்பமும் பெரும் பக்கலமாக இருந்தது என்று கூறலாம்.

இவருடைய விசேட தன்மை என்னவென்றால் இவர் வியாபாரத் துறையில் ஈடுபடும் போது தனிமனிதனாகப் பயணம் செய்யவில்லை. அவருடைய குடும்பத்திலுள்ள உறவினர்களை இணைத்துக் கொண்டுதான் வியாபாரத்தில் ஈடுபட்டார். பளீல் மாஸ்டர் என்பவர் ஓர் ஆசிரியர். அவர் அஸ்னா பள்ளிவாசலின் தலைவர். ஊரில் மிகவும் கௌரவமான குடும்பம். அதேபோன்று அவருடைய தம்பி ஹமீத் அவர்கள். ஊரிலே மிகவும் கௌரவமான குடும்பம். அவரது மகன் மூபீத் மற்றும் புர்ஹாதீன் அவர்களுடைய மகன் இம்தியாஸ் உள்ளிட்ட அவர் குடும்ப சார்ந்த அனைவரும் புஹார்தீன் ஹாஜியாருடைய பெயர் ஓங்க சமூகத்தில் மதிக்கப்படக் கூடியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Mr. Imthiyas (son of Buhardeen)
Mr. Mufeed (son of Hameed)

இவர் அக்குறணையை வியாபாரத் துறையில் சர்வதேச மட்டத்தில் முதன் முதலில் பிரபல்யப்படுத்தியவர். இவர் அக்குறணையில் ஆடைத் தொழிற்சாலையை ஆரம்பித்ததோடு மேலும் பலர் இந்த ஆடை தொழிற்சாலையில் ஈடுபடத் தொடங்கினர். அக்குறணை பிரதேச மக்கள் அரசியாலை, மர ஆலைகள் நடத்துவதில் கரிசனையுடையவர்களாகத் திகழ்ந்தனர். இவருடைய ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதில் மேலும் பலர் நாட்டம் கொள்ளத் தொடங்கினார்கள்.

அக்காலகட்டத்தில் “பெயர் லைன்” (தற்போதைய AQL School, Milano Bakery கட்டடம்) ஆடைத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் சனநடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது. இவருடைய தொழில் புரட்சியோடு இன்று கடைகள் நிறைந்து காணப்படுகின்றன. முழு இலங்கையில் இருந்து துண்டு துணிகள் வாங்குவதற்கு இங்கே பெரு எண்ணிக்கையிலான மக்கள் வருவதை அதானிக்கக் கூடியதாக இருக்கிறது.


கேள்வி: இவருடைய அரசியல் பிரவேசம் குறித்துக் கூறுவீர்களா?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 1986 இல் ஸ்தாபிக்கப்பட்டது. 1988 இல் கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது. 1989 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர். கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் மற்றும் எம். எல். எம். ஹிஸ்புல்லாஹ், சுந்திரமூர்த்தி ஆபூபக்கர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் நான்காவதாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என். எம். புஹார்தீன் தெரிவு செய்யப்பட்டார்.

புஹார்தீன் ஹாஜியார் அவர்களுடைய அரசியல் வரலாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றத்தோடு தொடங்கியது அல்ல. அவருக்கென நீண்ட வரலாறு உண்டு.

அக்குறணை மக்களின் மேதா விலாசத்திற்காக மறைந்த ஏ. சி. எஸ். ஹமீத் உழைக்கத் தொடங்கிய அன்றைய காலத்தில் இருந்தே அரசியல் செயற்பாடுகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன என்பதை அவருடைய வாழ்க்கை வரலாறு கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.

நானறிந்த வகையில் புஹார்தீன் பற்றிய அரசியலில் பேசப்படா பல பக்கங்கள் உண்டு. அடுத்து வரும் நேர்காணலில் தருவதற்கு முயற்சி செய்கின்றேன். அவர் பற்றிய சரியான வரலாற்றை அடுத்த தலைமுறையினர்கள் அறிந்து கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன்.

ஐ.ஐனுடீன் – I. Ainudeen
அக்குறணை ஐடெக் கல்வி நிறுவனத்தின் இயக்குனர்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் மாணவர்களின் அனுமதிக்கான வளவாளர்

தினகரன் இதழ் 21-11-2022

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter