பாரம்பரிய மத அனுஷ்டானங்களுக்கு பள்ளி நிர்வாக சபை தடை விதிக்க முடியாது

பள்ளியில் பாரம்பரிய மத அனுஷ்டானங்களுக்கு பள்ளி நிர்வாக சபை தடை விதிக்க முடியாது

அநுராதபுரம் – நேகம முஹியதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் பாரம்பரிய மத அனுஷ்டானங்களுக்கு தடைவிதிக்கவோ கட்டுப்பாடு விதிக்கவோ பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அதிகாரமில்லை. பிரதேசத்தின் சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்தோடு வக்புசபையின் முன்னிலையில் இரு தரப்பும் செய்து கொண்ட உடன்படிக்கை மீறப்படக்கூடாது. மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் நேகம பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பள்ளிவாசல் நிர்வாக சபைக்குள் நிலவிய கொள்கை முரண்பாடுகளையடுத்து வக்பு சபைக்கு ஒரு தரப்பினரால் முறைபாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டினை விசாரித்த வக்பு சபை பள்ளிவாசலுக்குப் பொறுப்பாக இருப்பவர் முறைப்பாட்டாளர்களின் சமய அனுஷ்டானங்கள் மற்றும் பாரம்பரிய மத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தமுடியாது. இருதரப்பினரும் சமாதானத்துடன் சகவாழ்வினை கடைப்பிடிக்கவேண்டும். முரண்பட்டுக்கொள்ளக்கூடாது என தீர்ப்பு வழங்கியிருந்தது. கடந்த மார்ச் மாதம் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வக்புசபையின் இந்த உத்தரவு அமுல் நடத்தப்படாமை காரணமாகவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்ட எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.நிர்வாக சபையைச் சேர்ந்த ஒருவர் பள்ளிவாசலுக்குள் தப்லீக் ஜமாஅத் வரக்கூடாது. கந்தூரி நடத்த முடியாது போன்ற கட்டுப்பாடுகளை முன்வைத்ததையடுத்தே முரண்பாடுகள் ஏற்பட்டதெனவும், இதனையடுத்தே வக்பு சபைக்கு முறைப்பாடு செய்ததாகவும் பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.

மேலும் கொள்கை முரண்பாடு காரணமாக ஊரில் பிரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் பள்ளிவாசலின் நிர்வாக சபை தற்போது பதவி விலகியுள்ளதாகவும் இறுதியாக பதவியிலிருந்த நிர்வாக சபையின் தலைவர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.

வக்பு சபையின் பிரதிநிதிகள் பள்ளிவாசலுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டு புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்கவுள்ளதாக அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி இதழ் 17-11-2022

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter