நேரடி தொடர்புடைய பயங்கரவாதிகளை தூக்கிலிட வேண்டும், – அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய பயங்கரவாதிகளை தூக்கிலிட வேண்டும், நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்கிறார் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடைய பயங்கரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி வலியுறுத்தியுள்ளார்.

நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டு சட்ட அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மாத்திரமே குற்றவாளிகள். தற்கொலை குண்டுத் தாக்குதலில் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் நடாத்திய ஜும்ஆ பிரசங்கத்திலே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவித்ததாவது; குற்றவாளிகளுக்கு கட்டாயம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தற்கொலை குண்டுத்தாக்குதல் என்ற பெயரில் சந்தேகத்தின் பேரில் எவராவது சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் சமூகம் இந்த நாடு இந்த நாட்டின் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதற்கு பரிகாரம் தேட வேண்டும். இது எமது கடமை களில் ஒன்று.

சில வேளைகளில் சிலர் தண்டப் பணம் கொடுத்துக் கொள்ள முடியாது சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் சிறிய தொகையே கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பள்ளிவா சல்கள் சம்மேளனங்கள் இவ்வாறானவர்கள் தொடர்பான புள்ளி விபரங்களைத் திரட்டி அவ்வாறானவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.

மார்க்கத்தின் பெயரால் எமக்குள் கொள்கை முரண்பாடுகள் இருக்க முடியாது. குரோதம், காட்டிக்கொடுப்பு போன்றன எம்மிலிருந்தும் களையப்படவேண்டும். எமக்குள் ஒற்றுமை தேவை. ஒற்றுமை என்பது உயிராகும். எமக்குள் விட்டுக்கொடுப்பு வேண்டும். நாட்டில் நாம் 20 இலட்சம் முஸ்லிம்கள் இருக்கிறோம். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், வக்பு சட்டம், மத்ரஸாக்கள், மஸ்ஜித்கள், பாடசாலை விவகாரங்களில் நாம் ஒற்றுமைப்பட வேண்டும்.

விதவைகள், அநாதைகள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். அவர்களுக்கு அதிக மதிகம் ஸகாத், ஸதகா கொடுக்க வேண்டும். கொழும்பு பகுதியில் செல்வந்தர்கள் வாழும் பகுதிக்கு பின்னால் வறுமைக்கோட்டில் மக்கள் வாழும் சேரிகள் காணப்படுகின்றன. ஸகாத், ஸதகா ஒழுங்கு முறையில் வழங்கப்படாமையே இதற்குக் காரணம்.

நாட்டில் பாவம் நடந்து கொண்டே இருக்கிறது. சிலர் வறுமை காரணமாக விபச்சாரத் தொழிலுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். நாம் பாவத்தில் ஈடுபடக் கூடியவர்கள். சமூகத்தில் ஏராளமான தவறுகள் நடக்கின்றன. சிலர் உலமாக்கள் கூறுவதைக் கேட்டு நடப்பதில்லை. நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் செய்யும் பாவங்களுக்காக தௌபா செய்ய வேண்டும் என்றார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி இதழ் 18/11/2022

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter