மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் : சூறையாடப்படுகின்றதா?

மாகொல முஸ்லிம் அநாதை நிலையம். இலங்கையில் அநாதரவான சிறுவர்களை பராமரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றே அது. கடந்த 1962 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி 30 மாணவர்களோடு இந் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் தனவந்தர்கள் சிலரின் முயற்சியின் பலனாக இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அநாதை நிலையம், இன்று 60 வருடங்களை பூர்த்தி செய்து, இலங்கையில் முஸ்லிம் அநாதை சிறுவர்களுக்கான கல்விச் சேவையை தொடர்கிறது எனலாம்.

இவ்வாறு 60 வருட வரலாற்றைக் கொண்ட இந்த அநாதைகள் நிலையம் தொடர்பில் இன்று பேசப்படும் சில விடயங்கள் அதிர்ச்சியூட்டுவதாகவும் கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளன.

மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையம் எனும் போது, அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரி மற்றும் மள்வானை -யதாமா பாடசாலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகவே பரவலாக அறியப்படுகின்றது. இந் நிலையில் இன்று அதில் மள்வானை யதாமா பாடசாலை வளாகம் மற்றும் அநாதைகள் நிலையத்துக்கு சொந்தமான ஏனைய சொத்துக்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்கள் சமூகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நாடெங்கும், வக்பு சொத்துக்களை தனி நபர்கள் கையகப்படுத்தும் ஒரு போக்கு அவதானிக்கப்படும் பின்னணியிலேயே இந்த தகவல்கள் மிக்க அவதானிப்புக்கு உள்ளாகியுள்ளன.

குறிப்பாக, மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையத்தின் பழைய மாணவர்கள் சங்கம் இது தொடர்பில் மிகப் பெரும் குற்றச்சாட்டுக்களை, அவ்வநாதை நிலைய நடப்பு நிர்வாக சபை மீது முன் வைத்துள்ளது.

இவ்வாறான நிலையில் கடந்த 6 ஆம் திகதி ஞாயிறன்று, யதாமா பாடசாலை வளாகம் அமைந்துள்ள மள்வானை உலஹிட்டிவலவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் அச்சங்கத்தினால் நிர்வாக சபைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.

மள்வானை அல் முபாரக் தேசிய பாடசாலைக்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, கராபுகஸ் சந்தி ஊடாக உலஹிட்டிவலவில் அமைந்துள்ள, மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையத்தின் மள்வானை கிளை வரை பேரணியாக சென்றது. குறித்த அநாதைகள் நிலையத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

‘இலங்கை முஸ்லிம் அநாதைகளின் எதிர்காலத்தை வளமாக்குவோம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், குறித்த நிலையத்தின் தற்போதைய நிர்வாக சபை, குறித்த நிலையத்தின் சொத்துக்களை விற்பனை செய்து, அந் நிலையத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதாக பழைய மாணவர்களால் இதன்போது குற்றம் சுமத்தப்பட்டது.

குறிப்பாக ஆயிரக் கணக்கான மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்க தேவையான அனைத்து வலங்களையும் உள்ளடக்கிய மள்வானை – யதாமா பாடசாலை தற்போது மூடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் அதன் பழைய மாணவர்கள் அந்த முழு வளங்களையும் வர்த்தகர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்க முயற்சிக்கப்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர். அதனால் அநாதைகளின் சொத்துக்களை விற்காதே, குத்தகைக்கு கொடுக்காதே போன்ற வாசகங்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் பயன்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த ஆர்ப்பாட்டதை அடுத்து ஒரு மகஜர், பழைய மாணவர்களால், நிர்வாக சபைக்கு கையளிக்கப்பட்டிருந்தது. அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விடயங்களை நாம் தருகின்றோம்.

‘இந் நிலையம் மாகொல, மள்வானை என இரு கிளைகளாக இயங்கியதுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகும் போது சுமார் 800 மாணவர்கள் அங்கு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். எனினும் துரதிஷ்டவசமாக கடந்த 2008 ஆம் ஆண்டு மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் அப்போதைய தலைவரும் ஸ்தாபகருமான மர்ஹூம் ஜாபிர் ஹாஜியார் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து இந்த அநாதை நிலைய நிர்வாக சபையின் தலைவராக தற்போதைய தலைவர் தாஸ் மொஹம்மட் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் புதிய நிர்வாக சபையின் வினைத் திறனற்ற, வெளிப்படைத் தன்மையற்ற நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக, இன்று இந்த முன்னணி அநாதைகள் பராமரிப்பு நிலையத்தில் வெறுமனே 70 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கின்றனர்.

அத்துடன் 1200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே தடவையில், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட மள்வானை கிளை ( யதாமா பாடசாலை) இழுத்து மூடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் முஸ்லிம் அநாதை சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான மிகப் பெரும் சொத்து அழிவின் விளிம்பில் இருப்பதை, அந் நிலையத்தில் கல்விகற்ற பழைய மாணவர்களாகிய நாம் அவதானித்து கவலையடைகின்றோம்.

உங்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட முஸ்லிம் அநாதைகளின் கல்விச் சொத்துக்களை உரிய வகையில் நிர்வாகம் செய்ய நீங்களும் உங்கள் நிர்வாகமும் தவறியுள்ளதாக, குறித்த அநாதைகள் நிலையத்தின் பழைய மாணவர்களாகிய நாம் உறுதியாக நம்புகின்றோம்.

அவ்வாறான நிலையில், இலங்கை முஸ்லிம் அநாதை சிறுவர்களின் கல்விச் சொத்தை வினைத் திறனாகவும், நம்பிக்கையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நிர்வாகம் செய்வதற்கான புதிய நிர்வாக குழுவொன்றின் தேவை தற்போது பெரிதும் உணரப்பட்டுள்ளது.’ என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைவிட, அநாதை நிலையத்தின் சொத்துக்கள் தனி நபர்களின் பெயர்களுக்கு மாற்றிக்கொள்ள மிகத் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பழைய மாணவர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனைவிட பல கோடி ரூபாக்கள், நிர்வாக சபையில் இருந்த சிலரால் மோசடியான முறையில் தமது சொந்த தேவைகள், வர்த்தக நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இதேவேளை, அநாதை நிலையத்துக்கு வருமானம் ஈட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட, கொழும்பு ஹைட் பார்க்கில் கட்டப்படும் கட்டிடம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய விடயங்கள் தற்போது பேசப்படுகின்றன. அந்த கட்டிடம் இதுவரை கட்டி முடிக்கப்படாத நிலையில், அதனை கட்டி முடித்து செலவுகளை ஈடு செய்யும் வரையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாகவும் பழைய மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறு அநாதைச் சிறுவர்களின் சொத்துக்கள், தனி நபர்களின் தேவைக்காக கைமாற்றப்படுகிறது என்பதே பழைய மாணவர்களின் மிகப் பெரும் குற்றச்சாட்டாகும்.
இது தொடர்பில் விடிவெள்ளி, மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையத்தின் தற்போதைய நிர்வாக சபை தலைவர் தாஸ் மொஹம்மட்டிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், ‘குற்றச்சாட்டுக்கள் முழுமையாக ஆதாரமற்றவை. மாணவர்கள் குறைந்ததன் விளைவாக நாம், முதலில் மாகொல அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரியில் இருக்கும் மாணவர்களை மள்வானைக்கு அழைத்து வந்து, அரபுக் கல்லூரியையும் மள்வானையிலேயே நடத்த திட்டமிட்டோம். எனினும் அதற்கு எதிர்ப்புகள் உருவாகின. எனவே பேச்சுவார்த்தை ஊடாக இறுதியில் மள்வானையில் இருந்த மாணவர்களை மாகொலைக்கு அழைத்து சென்றோம். அங்கு கற்றல் நடவடிக்கைகள் உரியவாறு நடக்கிறது.

அத்துடன் மள்வானை யதாமா பாடசாலை வளாகத்தை குறைந்த தொகையொன்றுக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது உண்மைக்கு புறம்பானது. மூன்றாம் தரப்புடன் இணைந்து பாடசாலையை மீள ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தும் நோக்கில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன. இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

அநாதை சிறுவர்களுக்காக என கொடுக்கப்பட்டுள்ள சொத்துக்களில் எவ்வாறு, மூன்றாம் தரப்பையும் இணைத்தவாறு நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை கட்டமைப்பை உருவாக்கி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு மார்க்க அடிப்படையிலான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள நாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையை நாடி இருக்கின்றோம். அவர்களின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை. அந்த ஆலோசனை கிடைக்கும் வரையில் நாம் அவ்வாறான திட்டமொன்றினை செயற்படுத்தப் போவதில்லை.

அத்துடன் பழைய மாணவர்கள் சங்கத்துக்கும் நிர்வாக சபைக்கும் இடையே போதுமான தொடர்பாடல்கள் இல்லாமையால், தவறான தகவல்கள் அவர்களிடையே பரவியுள்ளன. தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அவர்களுடன் முழுமையாக பேச நான் தயாராகவே இருக்கின்றேன்.

அத்துடன் நிர்வாக சபையில் இருந்த எவராலும் பணம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் உண்மைக்கு புறம்பானது. எனினும் நிர்வாக சபையின் முடிவுக்கு அமைய, முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகை பணம் வர்த்தகர் ஒருவரால் மோசடி செய்யப்பட்டுள்ளது. அந்த பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

அத்துடன், இந்த நிர்வாக சபையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நானும் சில நாட்களாக இது விடயமாக சிந்தித்து வருகின்றேன். நிர்வாக சபையிலிருந்து செல்வதானால், இதன் நிர்வாகத்தை பொருத்தமான ஒருவரிடம் நான் ஒப்படைக்க வேண்டும். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தை பாதுகாக்கும் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே பொருத்தமான நிர்வாக சபையினை தெரிவு செய்யும் விதமாக, ஜம் இய்யதுல் உல மா சபை, ஏனைய பிரபல முஸ்லிம் சமூக அமைப்புக்களை ஒன்று திரட்டி அவர்களின் பங்களிப்போடு ஒரு நிர்வாக சபையை தெரிவு செய்வது தொடர்பிலும் நான் அவதானம் செலுத்தி அது குறித்து சிந்தித்து வருகின்றேன்.

எனினும் அநாதைகளின் எந்த சொத்தும் யாருக்கும் விற்கப்படவில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

நாம் மள்வானை பாடசாலையை அநாதை சிறுவர்களுக்கு முதலிடம் அளித்தே, சிறந்த முறையில் நடாத்திச் செல்ல திட்டமிட்டு இஸ்மாயீல் ஹாஜியாரை அணுகினோம். இது நிர்வாக சபையினரின் முடிவுக்கு அமைய எடுக்கப்பட்ட நடவடிக்கை. எனினும் அந்த திட்டம் குறித்த ஒப்பந்தம் கூட இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.. ‘ என தெரிவித்தார்.
இந் நிலையில், மள்வானை – யதாமா பாடசாலையை, குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப் போவதாக பழைய மாணவர்களால் குற்றம் சாட்டப்படும், யதாமா பாடசாலை வளாகத்துடன் ஒட்டியதாக வசிக்கும் இஸ்மாயில் ஹாஜியாரிடமும் விடிவெள்ளி இது தொடர்பில் வினவியது.

இதன் போது விடிவெள்ளியிடம் பேசிய அவர், யதாமா பாடசாலை அண்மைக் காலமாக மூடப்பட்டுள்ள நிலையில், அப்பாடசாலையை ஆங்கில மொழி மூலமான சர்வதேச பாடசாலையாக முன்னெடுத்து செல்லும் நோக்கில், மாகொல முஸ்லிம் அநாதை நிலைய நிர்வாக சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக இதன்போது குறிப்பிட்டார்.

‘மாகொல அநாதை நிலைய நிர்வாக சபை கேட்டுக்கொண்டதற்கமையவே நாம் இவ்விவகாரத்தில் தலையீடு செய்தோம். எமது தரப்பில் ஐந்து பேரும் மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலைய நிர்வாக தரப்பில் 3 பேரும் இருக்கும் வண்ணமான ஒரு குழு ஊடாக இந்த பாடசாலை நிர்வாகம் செய்யப்படும். இதுவரை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. ஒப்பந்ததில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் பேசப்படுகின்றன. இப்பாடசாலையில், அநாதை சிறுவர்களுக்கே முன்னிரிமை அளிக்கப்படும். மேல் மிச்சமாகவே ஏனையோர் சேர்க்கப்படுவர், இவ்வாறு ஆரம்பிக்கபப்டும் பாடசாலையில் இருந்து கிடைக்கும் வருமானத்தை நாம் எவரும் பெற்றுக்கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வருமானம் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் இதனையொத்த மேலும் சில பாடசாலைகளை அமைப்பதற்காக பயன்படுத்தப்படும். இவ்வாறு நாடெங்கும் ஆங்கில மொழி மூலமாக 10 முதல் 15 பாடசாலைகளை அமைப்பதே எமது இலக்காகும்.’ என தெரிவித்தார். அத்துடன் மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பழைய மாணவர்களின் எதிர்ப்பு, அதன் நிர்வாக சபையுடனான விவகாரத்தை மையப்படுத்தியது என சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அநாதை நிலைய நிர்வாக சபை மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார்.

எம்.எப்.எம்.பஸீர் – (விடிவெள்ளி இதழ் 10/11/2022)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter