20 க்கு ஆதரளித்தோருக்கு மன்னிப்பு வழங்கிய மு.கா.வின் 30ஆவது பேராளர் மாநாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு கடந்த திங்கட்கிழமை (07) புத்தளத்தில் நடைபெற்றது. அடுத்த நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகமும் அதியுயர் பீடமும் பேராளர்களினால் இதன்போது அங்கீகரிக்கப்பட்டது.

எனினும், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டமையும், மற்றையவர் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டமையுமே இரண்டரை வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற இந்த பேராளர் மாநாட்டின் முக்கிய விடயங்களாகக் காணப்பட்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்திலும், தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினை தவிர ஏனைய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தனர். இந்த விடயம் சர்வதேச ரீதியில் பாரிய பேசுபொருளாக மாறியது

கொவிட் – 19 காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களை கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் பலவந்தமாக எரித்த சூழ்நிலையில் ராஜபக்ஷ குடும்பத்தின் தேவைக்காக கொண்டு வரப்பட்ட திருத்தத்தினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தமையே இதற்கான பிரதான காரணமாகும்.

இதனால், குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கட்சிக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

“தங்கள் சொந்தத் தொகுதி மக்களின் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்தே இந்தச் சட்டத்திற்கு வாக்களித்தோம்” என குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறியதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் அங்கீகரிக்கவில்லை.
இதனால், குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்க அதியுயர் பீடம் தீர்மானித்தது. இதனையடுத்து கட்சித் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பனிப்போர் ஆரம்பமானது.

“கட்சித் தலைவர் கூறியே 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தோம்” என பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸும், ஹாபீஸ் நசீர் அஹமதும் கூறி வந்தனர். இந்த சூழ்நிலையில் குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் மிகவும் நெருங்கிச் செயற்பட ஆரம்பித்தனர்.

இதனால், கட்சியின் தீர்மானத்தினை மீறி குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் பசில் ராஜபக்ஷவின் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
இதனால் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதற்கும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த விசாரணைக்காக ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவார் என கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் ஊடகங்களில் கூறிய போதிலும் இறுதி வரை அப்படியொரு நியமனம் மேற்கொள்ளப்படவுமில்லை, அதன் அறிக்கை அதியுயர் பீடத்திற்கு சமர்ப்பிக்கப்படவுமில்லை.

இவ்வாறான சூழ்நிலையில், பாராளுமன்ற உறுப்பினரான ஹாபீஸ் நசீர் அஹமட் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியினை பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து அவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் தற்போது மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இவ்வாறான நிலையில் கட்சியின் பேராளர் மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற வேண்டிய கட்டாய அதியுயர் பீடக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கையே இதில் முக்கிய விடயமாக காணப்பட்டது. இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் மன்னிப்பு கோரியுள்ளமையினால் அவர்களை மன்னித்து கட்சிக்குள் உள்வாங்க தலைவர் தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கையினை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம். நயீமுல்லாஹ் மற்றும் ஏ.எல். தவம் ஆகியோர் கடுமையாக விமர்ச்சித்தனர்.

எனினும், அதியுயர் பீடத்தின் தீர்மானத்திற்கமைய, குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்கி கட்சிக்குள் மீண்டும் இணைத்துக் கொள்ளவும், முன்னர் வகித்த பதவிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனை கண்டிக்கும்முகமாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம். நயீமுல்லாஹ் மற்றும் ஏ.எல். தவம் ஆகியோர் எந்தப் பதவிகளையும் புதிய நிர்வாகத்தில் பொறுப்பேற்காததுடன், பேராளர் மாநாட்டிலும் பங்கேற்கவில்லை. எனினும் இவர்கள் அதியுயர் பீட உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மன்னிப்புக் கோராமையினாலும், அமைச்சர் நசீர் அஹமதிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சத்தியக் கடதாசி வழங்காமையினாலும் அவருக்கு எதிரான தடையினை தொடரத் தீர்மானிக்கப்பட்டது.

இதனால் அவர் வகித்த பிரதித் தலைவர் பதவிக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டதுடன், ஹரீஸ் அதியுயர் பீடத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக மேலும் பலருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.
இந்த கட்டாய அதியுயர் பீட கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மறுநாள் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு பேராளர்களின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மன்னிப்புக் கோரி கடிதம் வழங்கினால் கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், முன்னர் அவர் வகித்த பதவியினையும் இந்த அதியுயர் பீடம் வழங்கும் என தலைவர் ரவூப் ஹக்கீம் பேராளர் மாநாட்டில் அறிவித்தார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த பேராளர் மாநாட்டுக்கு அழைப்பிதழ்களுடன் வந்தவர்கள் மாத்திரமே மாநாட்டு மண்டபத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கலந்துகொள்வதற்காக ஏறாவூரிலிருந்து வந்த சிலர் அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் அமைச்சர் ஹாபீஸ் நசீரின் ஆதரவாளர்கள் என்பதாலேயே அனுமதிக்கப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும்பாலான பேராளர்கள் கிழக்கு மாகாணத்திலேயே உள்ளனர். எனினும் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக பேராளர் மாநாடு கிழக்கு மாகாணத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய பதவிகளின் விபரம்:
தலைவர் –  ரவூப் ஹக்கீம்
தவிசாளர் – ஏ.எல்.ஏ. மஜீட்
சிரேஷ்ட பிரதித் தலைவர் –  ஏ.எம். அஸ்லம்
பிரதித் தலைவர்  – எம்.ஐ.எம். மன்சூர்
பிரதித் தலைவர் – யூ.டி.எம். அன்வர்
பிரதித் தலைவர்  – அலி சாஹிர் மௌலானா
பிரதித் தலைவர்  – எஸ்.எம்.ஏ. கபூர்
செயலாளர் – நிசாம் காரியப்பர்
பொருளாளர் – பைசால் காசீம்
மஜ்லிஸுல் ஷூரா தலைவர் –  மௌலவி ஏ.எல்.எம். கலீல்
தேசிய இணைப்புச் செயலாளர் – ரஹ்மத் மன்சூர்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் – யூ.எல்.எம். முபீன்
தேசிய அமைப்பாளர் – எம்.எஸ். தௌபீக்
அரசியலமைப்பு விவகார பணிப்பாளர் – எம்.பீ. பாரூக்
பிரதித் தவிசாளர் – றிஸ்வி ஜவஹர்ஷா
பிரதிச் செயலாளர் – மன்சூர் ஏ. காதர்
பிரதிப் பொருளாளர் – எஹியா கான்
பிரதித் தேசிய இணைப்புச் செயலாளர் – அப்துல் ஹை
பிரதி தேசிய அமைப்பாளர் – எம்.எஸ். உதுமாலெப்பை

றிப்தி அலி (விடிவெள்ளி இதழ் 10/11/2022)

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter